வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? விளக்கம் அளித்த விஞ்ஞானிகள்!
கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரை நடைபெறாத அளவுக்கு நிலச்சரிவு நடந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே நிலச்சரிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்து கொச்சி பல்கலைக்கழகத்தின் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.அபிலாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியுள்ளதாவது, ``கண்ணூர், கோழிக்கோடு, மல்லபுரம், வயநாடு மற்றும் கொங்கன் பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக அதிக மழை பெய்து வருகிறது. இதனால் மண்ணானது நன்கு நிறைவுற்ற பொலபொலப்புள்ளதாக மாறியுள்ளது. அதேபோல அரபிக் கடலில் மிகவும் அடர்த்தியான மீசோ வளிமண்டல மேகம் உருவாகி அது நகராமல் அதிக மழைப் பொழிவை திங்கள்கிழமை வழங்கியது. இதனால் வயநாடு, மல்லபுரம், காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்தது. 2019-க்கு பிறகு, இந்த முறைதான் இதுபோன்ற அடர்த்தியான மேகத் திரள் அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியிருந்தது. வளிமண்டலத்தின் நிலையற்ற தன்மையால் இந்த அடர் மேகம் உருவாகியுள்ளது. வடக்கு கொங்கன் மற்றும் மங்களூர் பகுதியில் வழக்கமாக இதுபோன்ற மழை பெய்யும். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த முறை வயநாடு பகுதியில் மழை பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவியுள்ள வானிலை மையங்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மழை மானிகள் மூலமாக 25 சென்டிமீட்டரிலிருந்து 35 சென்டிமீட்டர் மழை ஒரேநாளில் பெய்துள்ளது. மல்லபுரம், வயநாடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வானிலை மையங்களில் ஒரேநாளில் இந்தளவு மழை பதிவாகியுள்ளது. மழை அதிகமாகப் பெய்தால் நிலச்சரிவு அதிகரிக்கும் என்று ஏற்கெனவே எங்களுடைய ஆய்வில் தெரிவித்திருக்கிறோம். அதன்படி அதிகப்படியான மழை நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் தெரிவித்துள்ளதாவது, ``கேரள மாநிலம் குன்றுகள் மற்றும் மலைத் தொடர்களால் ஆனது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத்தகைய சூழலில், `சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் தெரிவித்துள்ளதாவது: ``கேரளாவில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மண் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகி விட்டது. மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும்போது தெவிட்டு மண்ணாகிக் கரைந்து உருண்டோடி விடும்.
காடுகளில் உள்ள பாரம்பர்ய மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மண்ணை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் போன்ற தோட்டக்கலை மரங்களின் வேர்களால் அவ்வளவாக மண்ணை இறுகப் பற்றிக்கொள்ள முடிவதில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
பூவுலகு நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில், ``வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ளனர். கேரளாவின் பிற பகுதிகளைப்போல வயநாட்டிலும் 6 வகையான மழைப்பொழிவு நிலவிவந்தது. பிப்ரவரி மாதம் பெய்யும் கோடை மழை கும்ப மழை என்றும், ஏப்ரலில் பெய்யும் குறைவான மழை மேட அல்லது விஷ்ணு மழை என்றும் அழைக்கப்படுகிறது. மே-ஜூனில் தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது. ஆகஸ்டில் பெய்யும் அதிக மழை மிதுன மழை என்றும் செப்டம்பரில் வெயிலுடன் அவ்வப்போது பெய்யும் லேசான மழை சிங்க மழை என்றும், அக்டோபரில் இடியுடன் பெய்யும் பெருமழை துலா மழை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நடைமுறை பெரியளவில் மாறியுள்ளதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக Flood and Fury எனும் புத்தகத்தை எழுதிய விஜூ கூறுகிறார்.
ஜூன் 2018-ல் கோழிக்கோடு, கண்ணூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டடங்களும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது.
வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிக அளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மண்ணை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, `நிலச்சரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்' என்று தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu