RULE CURVE என்றால் என்ன? ஏன் அதை நிராகரிக்கிறோம்?
ரூல் கர்வ் என்பது ஒரு ஆண்டில் நிலவும் வெவ்வேறு பருவகால சூழலுக்கு ஏற்ப, அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த அணையில் எத்தனை அடி உயரத்திற்கு நீர் தேக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு அறிவியல் முறையாகும்.
இது ஒரு அணையின் 'முக்கிய பாதுகாப்பு' வளையத்தின் ஒரு பகுதியாகும். ஒரு ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்குமான அணையின் நீர் தேக்கும் அளவு (RULE CURVE) மத்திய நீர்வளக் கமிஷனால் (CWS) நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக கனமழைப் பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயக் காலங்களில் அவசியம் கருதி இந்த அளவு 10 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு அணையின் நீர்திறப்பு அட்டவணை, அதாவது அணையின் நீர் வெளியேற்றும் கதவுகள் (shutter) எப்போது, என்ன அளவுக்கு திறக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்பது, 'விதி வளைவை' 'RULE CURVE' அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.
இதன் பொருள் என்னவென்றால், விதி வளைவால் தீர்மானிக்கப்பட்ட சேமிப்பு அளவுகள் (வெவ்வேறு நேரங்களில்) ஒரு நீர்த்தேக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டால், அந்த நீர்த்தேக்கம் அதன் நோக்கங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்கிறார்கள்.
எல்லாம் சரிதான்.
அறிவியல் ஆய்வுகளை முன் வைத்து தானே உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றமும் அறிவியல் அடிப்படையில் விளக்கிக் காட்டப்பட்ட, 14 முடிவுகளின் அடிப்படையிலேயே தான் அணை பலமாக இருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தது என்று கூறியது.
பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களில் அணையின் நீர்மட்டத்தை பராமரிக்கும் பிரச்சனையின் அடிப்படையில்தான் RULE CURVE முறையை உச்ச நீதிமன்றம் கையிலெடுக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
அப்படியானால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இருக்கும் போது, ரூல்கர்வ் முறை எதற்காக முல்லைப் பெரியாறு அணையில் வேண்டும். இது யாரை திருப்திப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது. பலவீனமான, அழிவு முறைகளுக்கு அடிக்கடி ஆட்படக்கூடிய அணைகளுக்குத்தான் ரூல் கர்வ் முறை பொருந்துமே தவிர, மிகவும் பலமாக உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு அல்ல.
முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது, பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக தண்ணீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் எந்த அறிவியலை முன்வைத்து இரண்டு தீர்ப்புகளை வழங்கியது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு பின்னால், அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது கேரள மாநில அரசு. அதை நிராகரித்ததோடு 142 அடி தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்று அன்றைக்கு உரத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பின் எந்த அடிப்படையில் கடந்த ஆண்டு 2021 ல் ரூல் கர்வ் முறையை முல்லை பெரியாறு அணையில், அமல்படுத்தியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது வேதனையான நிகழ்வு. இந்த ரூல்கர்வ் நடைமுறையினை, கொண்டு வந்த சுப்ரீம் கோர்ட் மூலமே நாங்கள் சட்டரீதியாகவே வென்று காட்டுவோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu