பாலிடெக்னிக் கல்வி என்பது என்ன? அது எந்த பிரிவில் வரும்? அறிவோமா..?
பைல் படம்
இதை தமிழில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி என்றழைக்கலாம். ஒரு மாணவரின் நடைமுறை மற்றும் தொழில்நுட்பத் திறமையை வளர்க்கும் விதமாக, தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் பாலிடெக்னிக். இந்தியாவில், பாலிடெக்னிக்குகள் என்பவை, மாநில அரசுகள் மற்றும் தனியார்களால் நடத்தப்படுகின்றன. தனியார் பாலிடெக்னிக்குகளைப் பொறுத்தவரை, அரசு உதவிப் பெறுபவை மற்றும் சுயநிதி என்ற 2 பிரிவுகள் உள்ளன.
பாலிடெக்னிக் எந்தளவிற்கு பிரபலம் வாய்ந்தது?
பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலிலும், பலவிதமான கல்வி நிறுவனங்கள் முளைத்து பலவிதமான படிப்புகளை வழங்கி வரும் நிலையிலும், பாலிடெக்னிக் படிப்புதான் சிறந்தது என்று சொல்வது கடினம்தான். சிறப்புத்தன்மை மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, பாலிடெக்னிக் பட்டதாரிகள் பணி செய்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு பாலிடெக்னிக் பட்டதாரி, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் பணிபுரிபவராக இருக்கிறார். அதேசமயம், ஒரு B.Tech பட்டதாரி, அதே பணியின் திட்டமிடுதல், பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பில் ஈடுபடுகிறார். ஆனால், இந்த B.Tech படிப்பு அதிக செலவு வாய்ந்தது மற்றும் அதிக காலஅளவையும் கொண்டது. பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேசமயம், பொறியியல் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், அதிக செலவும், காலமும் கொண்ட பொறியியல் படிப்பைவிட, பாலிடெக்னிக் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
வழங்கப்படும் படிப்புகள்: பொதுவாக எல்லா பாலிடெக்னிக்கிலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 3 ஆண்டுகால படிப்புகளாகும்.
இவையல்லாமல் பல்வேறு பட்டயப்படிப்புகளை இந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்குகின்றன. அவை,
* Diploma in Automobile Engineering
* Diploma in Interior Decoration
* Diploma in Fashion Engineering
* Diploma in Ceramic Engineering
* Diploma in Art and Craft
* Diploma in Chemical Engineering
* Diploma in Instrumentation and Control Engineering
* Diploma in IT Engineering
* Diploma in Aeronautical Engineering
* Diploma in Petroleum Engineering
* Diploma in Aerospace Engineering
* Diploma in Mining Engineering
* Diploma in Automobile Engineering
* Diploma in Genetic Engineering
* Diploma in Biotechnology Engineering
* Diploma in Plastics Engineering
* Diploma in Agricultural Engineering
* Diploma in Food Processing and Technology
* Diploma in Dairy Technology and Engineering
* Diploma in Power Engineering
* Diploma in Infrastructure Engineering
* Diploma in Production Engineering
* Diploma in Metallurgy Engineering
* Diploma in Motorsport Engineering
* Diploma in Environmental Engineering
* Diploma in Textile Engineering
கல்வித்தகுதி:
ஒரு மாணவர், 10ம் வகுப்பை முடித்தவுடன், பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம். அதாவது SSLC அல்லது அதற்கு இணையான பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்வதற்கு +2 முடித்திருக்க வேண்டும். ITI முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிக்கமுடியும். இதை ‘லேட்டரல் என்ட்ரி (Lateral entry)’ என்றழைக்கிறார்கள். பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பொதுமக்கள் தொடர்பு (Mass Communication), உள்அலங்காரம் மற்றும் ஹோட்டல் மேலாண்மை போன்ற பலவித படிப்புகள் 1 வருடம் முதல் 4 வருடங்கள் வரையான கால அளவைக் கொண்டவை. நடைமுறை திறன் மேம்பாடு மற்றும் உடனடி பணி வாய்ப்பு என்று வரும்போது, பாலிடெக்னிக் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்படிப்பு.
பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள், B.E. பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிக்க முடியும். இதை ‘லேட்டரல் என்ட்ரி (Lateral entry)’ என்றழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு: பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், நல்ல சம்பளத்தில், நல்ல வேலைகளில் இருப்பதை பரவலாக நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய இந்திய கல்வி உலகில், பாலிடெக்னிக்குகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு, ஆரம்பத்தில் குறைந்த வருமானத்தில்தான் வேலை கிடைக்கிறது. ஆனால், பணி அனுபவம் பெற்ற பிறகு அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதிய விகிதங்கள் உயர்கின்றன. பாலிடெக்னிக் பட்டதாரிகளை மட்டுமே பணிக்கு அமர்த்தும் பல நிறுவனங்கள் உள்ளன. பாலிடெக்னிக் பட்டதாரிகள் பலர், வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.
பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், பல பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஆரம்பநிலை பணி அனுபவங்களுக்குப் பிறகு, பெரிய நிறுவனத்தில் பணிக்கு சேரும் பல பாலிடெக்னிக் பட்டதாரிகளும் உண்டு. பல பாலிடெக்னிக் கல்லூரிகள், தங்களுக்கான தரமான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் சிரமப்படுகின்றன. இந்த சிக்கலைத் தீர்க்க, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE), தர மேம்பாட்டு திட்டத்தை (Quality Improvement Programme) அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பாலிடெக்னிக் ஆசிரியர்கள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், தேவையானப் பாடப்பிரிவுகளில் ME, M.Tech மற்றும் Ph.d படிப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சம்பளமும் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதர கல்லூரி ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மிகவும் குறைந்தளவே ஊதியம் பெறுகின்றனர். ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அவர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. மேலும், முதுநிலை பொறியியல் படிப்போ அல்லது முனைவர் பட்டமோ பெற்றாலும்கூட, அதனால் எந்த ஊதிய சலுகையும் கிடைப்பதில்லை.
பொதுவாக, தனக்கு முறையான ஊதியமோ அல்லது மற்ற ஆசிரியர்களுக்கு கிடைப்பதுபோன்ற சலுகையோ கிடைப்பதில்லை என்று ஒரு ஆசிரியர் நினைக்க ஆரம்பித்து, அதனால் மனவெறுப்பு அடைந்தால், அதனால் பாதிக்கப்படுவது நிச்சயம் மாணவர்கள்தான் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து.
இன்றைய சமூகத்தில், BE, B.Sc, B.Com, BBA மற்றும் LLB போன்ற படிப்புகளைப் படித்தால்தான் மதிப்பு என்றும், பாலிடெக்னிக் போன்ற தொழில்துறை படிப்புகளுக்கு மரியாதை மற்றும் ஊதியம் குறைவு என்று நினைப்பதால், நாட்டிற்கு தேவையான தொழில்துறை மனிதவளம் பாதிக்கப்படுகிறது என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, அந்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாட்டில் அடங்கியுள்ளது. இன்றைய நிலையில், தரமான மனிதவளத்தை, பாலிடெக்னிக்குகள் வழங்க ஆரம்பித்துவிட்டன. அதேசமயம் பலவிதமான சிக்கல்கள், பாலிடெக்னிக்குகள் தங்களுக்கான அந்தஸ்தை பெறுவதில் முட்டுக்கட்டைப் போடுகின்றன.
பயன்படுத்த இயலாத உபகரணங்கள், போதுமான நிதியின்மை மற்றும் தன்னாட்சியின்மை போன்றவை பாலிடெக்னிக்குகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு தடையாக உள்ளன. அதேசமயம், தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்த பயிற்சி மற்றும் மல்டிமீடியா, பேஷன், ஹோட்டல் மேலாண்மை மற்றும் பலவிதமான துறைகளில் விரிவான பயிற்சியளிக்கையில், நடுத்தர, கீழ்நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களால், அந்த தனியார் கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை சமாளிக்க முடிவதில்லை.
இந்த நேரத்தில் மிகவும் முக்கிய தேவை என்னவென்றால், தொழில் நிறுவனங்கள் - பாலிடெக்னிக்குள் இடையேயான ஒத்துழைப்பு. தொழிற்சாலை தேவை என்ற அம்சத்தோடு இணையாதவரை, திறன்சார்ந்த கல்வி என்பது வீண். நாட்டின் பாலிடெக்னிக்குகளை நடத்தும் மாநில அரசுகள் தங்களின் முழுப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. ஆனால், பாலிடெக்னிக் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் அரசும் மற்றவர்களும் செயல்பட வேண்டிய நேரமிது. அப்போதுதான், குறைந்த செலவில் அதிக திறன்வாய்ந்த மனித ஆற்றல்களை உருவாக்க முடிவதோடு, நாட்டின் தொழில் வளர்ச்சியும் மேம்படும் என்ற தொழில்வளர்ச்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு பாலிடெக்னிக்குகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
“தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை. தொழில்நுட்பக் கல்வியில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை இன்னொரு பிரிவினருக்கு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகளில் குறிப்பிடத்தக்கது பாலிடெக்னிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பொறியியல் பட்டயப் படிப்புகள்தான். ஒரு காலத்தில் இந்தப் படிப்புகளைப் படிக்க கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி விட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டுக்கு முன்பாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக இருந்தது. ஆனால், இப்போது இது 50 ஆயிரமாக குறைந்துவிட்டது.
இதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதுதான். தொழில்நுட்பப் பட்டப்படிப்பு வழங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரமும், ஐ.டி.ஐ. பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐக்களிலும் சேர்ந்து விடுகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்ததற்கு இது தான் காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உலகம் முழுவதும் நான்காம் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த பட்டயப் படிப்பு படித்த தொழில்நுட்பப் பணியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். ஆனால், இப்போது பாலிடெக்னிக்குகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இது தேவையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக்குகள், 34 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகள், 416 சுயநிதி பாலிடெக்னிக்குகள், 4 இணைப்பு பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 501 பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்கள் மட்டும் தான் நிரம்புகின்றன. ஒரு பாலிடெக்னிக்கில் 100 பேர் மட்டுமே பயில்கின்றனர். இது மனிதவளத்தை வீணடிக்கும் செயலாகும்.
பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், பொறியியல் பட்டப்படிப்புகளில் ஒப்பீட்டளவில் அதிக மாணவர்கள் சேருகின்றனர். அதேநேரத்தில், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் போதிலும், அதிக மாணவர்கள் சேருவதில்லை. இதற்குக் காரணம் ஏற்கனவே கூறியதைப் போன்று பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு எந்தவித உதவித் தொகையும் வழங்கப்படாதது தான். பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.
எனவே, அரசு பாலிடெக்னிக்குகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதல் தலைமுறை மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதன்மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டயப் படிப்பு மேம்படுவற்கும், நான்காம் தொழில்புரட்சி விரைவடையவும் தமிழக அரசு உதவ வேண்டும்.
பாடத்திட்டங்கள் :
பொதுவாகவே நமது பொறியியல் பட்ட படிப்பு மற்றும் பட்டய(Diploma) படிப்புக்கான பாடத்திட்டங்கள், மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நிலைகளைப் பெருக்கும் வகையில் மாற்றியமைக்கப்படவேண்டும். பாடத்திட்டங்கள் வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டுமே இல்லாமல், வேலை பெறுவதற்கான தகுதியை அல்லது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu