மேகமலை என்ன மும்பையின் தாராவியா?- பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறுகையில், மேகமலை மற்றும் வெள்ளிமலை வனப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றுவது குறித்தான மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பு மறுபடியும் தேனி மாவட்டத்தில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
பல்லாண்டு காலங்களாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு அரசு ஒரு முடிவு காண வேண்டும். தேனி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தையே முடிவுக்கு கொண்டுவர இருக்கும் முல்லைப்பெரியாறு அணை குறித்து வாய் திறக்காத மா.கம்யூனிஸ்ட் கட்சி, மேகமலை மற்றும் வெள்ளி மலையிலுள்ள விவசாயிகளுக்காக போராடுகிறோம் என்பது கேட்பதற்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல.
இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் நிலைபாடு துரதிஷ்டவசமானது. ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகம் என்பது வெறும் காட்டை மட்டுமே உள்ளடக்கிய பரப்பு அல்ல. அதற்கும் மேலாக அது ஐந்து மாவட்டங்களில் வாழும் 90 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் சம்பந்தப்பட்டது என்பதை மா.கம்யூனிஸ்ட் கட்சி உணர வேண்டும்.
வைகை அணைக்கு வரக்கூடிய தண்ணீரில், கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக்கும் மேல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் தான். அப்படியானால் மூல வைகையில் இருந்து வரவேண்டிய தண்ணீர் எங்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அதுதான் எங்களின் கேள்வியும். 100 விழுக்காடு பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் காப்பகத்தின் வழியாக வரும் தண்ணீர் குறைவின்றி வரும் நிலையில், பொய்யாக் குலக்கொடி என்று இளங்கோவடிகளால் பாடப்பெற்ற வைகைக்கு என்ன நேர்ந்தது?
பெரியாறு தண்ணீர் அளவிற்கு, வைகையிலும் தண்ணீர் வந்தால், தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் வெள்ளிமலை மற்றும் மேகமலையின் சூழலியல் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ஆரம்பத்திலிருந்தே வனப் பகுதிகளுக்குள் வாழும் மக்களின் பொருளாதார நிலையை முன்வைத்து, தகுதியான இழப்பீட்டை நாம் முன்வைத்தே வருகிறோம்.
வெள்ளிமலை வனப்பகுதிக்குள் இருக்கும் எஸ்டேட்டாகயிருந்தாலும், மேகமலை வனப்பகுதியில் இருக்கும் தேயிலை கம்பெனியாக இருந்தாலும், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் செய்யும் விவசாயம், அந்த வனப்பகுதிக்கு ஏற்புடையது தானா என்பதை சிந்தித்து பாருங்கள்.
மனிதனைவிட காட்டு விலங்குகள் தான் முக்கியமா என்று நீங்கள் கேட்டால் அதற்கும் எங்களிடத்தில் பதில் இருக்கிறது. காட்டு விலங்குகள் தான் மனித வாழ்க்கையின் சமச்சீர் வாழ்வுக்கு ஆதாரம் என்பதை மறந்து விடாதீர்கள். வனத்திற்குள் மரபு ரீதியாக காலங்காலமாக நடந்து வரும் உணவுச் சங்கிலி அறுபடுமானால் காடுகள் பாலைவனமாகும் என்பதை மறந்து விடாதீர்கள். காடு வளமாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும். காடு காய்ந்து போனால் நாடும் காய்ந்து போகும்.
ஓரளவு உயிர்ப்புடன் இருக்கும் காடுகள் இருந்தும்கூட, தமிழகத்தில் நேற்று 100 டிகிரி வெப்பத்தை தாண்டிய நகரங்கள் 12. உலக வெப்பமயம் எதிர்காலச் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியிருக்கும் நிலையில், வனங்களை உயிர்ப்புடன் வைப்பதுதான் அதற்கான ஒரே தீர்வு என்பதை நம்புங்கள்.
அதற்கென ஒதுக்கப்பட்ட பெரும் பரப்பில் வனவிலங்குகள் சுற்றி அலைந்தால்தான், வனம் வனமாக இருக்கும். பத்துக்கு பத்து வீட்டில் ஐந்து பேர் வாழ்வதற்கு மேகமலை வனப்பகுதி என்ன மும்பையின் தாராவியா?
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வனப் பரப்பையும் பெருக்க வேண்டும். இதில் சமச்சீர் நிலையை கைக்கொள்ளாத வரை, இயற்கையைப் பற்றி பேசுவது என்பதே அபத்தம் தான். வனத்திற்குள் வாழும் ஒரு யானை தான், இங்கு 10 லட்சம் பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
எனவே மேகமலை மற்றும் வெள்ளிமலை விடயத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu