தேனி மாவட்டத்தில் 2011ல் நடந்தது என்ன? கலெக்டர் முரளீதரன் விசாரணை
முல்லை பெரியாறு அணை பைல் படம்
தேனி மாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை போராட்டத்தின் போது என்ன தான் நடந்தது என கலெக்டர் முரளீதரன் விரிவான விசாரணை நடத்தி முடித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று இரவு அல்லது நாளை காலை 6 மணிக்குள் 142 அடியை எட்டி விடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நவம்பர் 30ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி விவசாயிகளை சமரசம் செய்ய தமிழக பொதுப்பணித்துறை படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் தேனி மாவட்டத்தில் 2011 போல் மாபெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது.
மீண்டும் வெடித்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளனர். கேரள உளவுப்போலீசாரும் இதே எச்சரிக்கையினை தங்களது அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது வரை தமிழக விவசாயிகள் மிக, மிக அமைதியாக உள்ளனர். ஆனால் கேரளத்தின் சீண்டல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், விவசாயிகள் எந்த நிமிடமும் போராட்டக்களத்திற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதனை தொடர்ந்து 2011ல் தேனி மாவட்டத்தில் 40 நாட்கள் என்ன தான் நடந்தது? அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவு போராட்டம் தீ்ப்பற்றி எரிய காரணம் என்ன? இது போன்று மீண்டும் வெடித்தால் எப்படி கையாள்வது? போன்ற விவரங்களை கலெக்டர் முழுமையாக விசாரணை நடத்தி முடித்துள்ளார். இதற்காக அப்போது தேனி மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவர், எஸ்.பி.,யாக இருந்தவர்களிடம் பல மணி நேரம் பேசி ஆலோசனை பெற்றுள்ளார்.
தமிழக அரசும் விவசாயிகள் பிரச்னையை எப்படி மென்மையாக கையாள வேண்டும் என தேனி கலெக்டருக்கு மிகப்பெரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையே வழங்கி உள்ளது. இதுவரை கிடைத்த தகவல்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளை போராட விட்டு எப்படி மென்மையாக கட்டுப்படுத்தி கொண்டு வந்தாரோ, அதேபோல் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினால், அவர்களது போக்கிலேயே விட்டு, நாமும் அந்த போராட்டத்தை அனுமதித்து, சிறிது, சிறிதாகத்தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். ஒரே வேகத்தில் கட்டுப்படுத்தினால் அரசுக்கு எதிராக திரும்பும் அபாயம் உள்ளது என அரசு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu