மோடியும்- அமித்ஷாவும் என்ன செய்கின்றனர் கேள்வி எழுவது ஏன்
பைல் படம்
ஒரு விஷயத்தை எல்லோரும் மறந்து விடுகின்றார்கள். மோடியின் மிக முக்கிய கோட்பாடு மற்றும் கொள்கை இரண்டு. அவரின் அரசியல் கொள்கையும் அதுதான்.
முதலாவது நாடு, உலக அரங்கிலும் தேசத்தின் எல்லா மட்டத்திலும் அவர் தேசத்துக்கு செய்யவேண்டியது நிரம்ப உண்டு, சுமார் 70 ஆண்டு கால குழப்பங்களை இன்னும் அழுத்தமாக சொன்னால் ஆயிரமாண்டாக இங்கு நடந்த குழப்பங்களை இந்த குறுகிய காலத்தில் மாற்றுவது என்பது கடினம், அவர் அதற்கு படாதபாடுபடுகின்றார். ஆனால் ஆச்சரியமாக வெற்றி அடைகின்றார்.
இந்துஸ்தானம் உலகில் ஒரே ஒரு இந்து பெரும்பான்மை நாடு. அதுவும் வெளியில் அப்படி அறிவிக்க கூட முடியாத நிலையில் உள்ள ஒரு சிக்கலான நாடு. உலகில் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவோ பலமோ எங்குமில்லை. தனித்து விடப்பட்ட அபலைகள் இந்துக்கள். அப்படிபட்ட நிலையில் இரு பெரும் மதங்களும் கம்யூனிசமும் இன்னும் பலவும் கொண்ட உலகில் இந்திய கப்பலை செலுத்துவது கடினம். அதனை சாகசமாக செய்கின்றார் மோடி.உலகில் இந்துக்களின் இந்தியா யாருக்கும் எதிரல்ல என நம்பிக்கை ஏற்படுத்தவும், அதன் தாத்பரியத்தை புரியவைப்பதும் வெகுசிரமம் அதனை கடக்கின்றார்.
அமெரிக்காவின் ஒற்றை பெரும்பலம் எதிரே குழப்பமான சூழல் என மிக குழப்பமான காலகட்டத்தில் அவரின் தலைமை அமைந்துள்ளது. அதுவும் ரஷ்யா எனும் பெரும் பலம் சரியும் பொழுது ரஷ்ய கூட்டாளியான இந்தியாவின் நிலையும் சிக்கலாகும். அதையும் சமாளிக்க வேண்டும்.உலக அரங்கிலும் உள்நாட்டிலும் அவருக்கு அனுதினமும் பிரச்சினை அதிகம், தேசத்தை கட்டியெழுப்ப அவர் வெகு பிரயத்தனம் செய்கின்றார். அவரின் ஒரே இலக்கு தேசம்.
இரண்டாவது பாஜகவின் கொள்கை எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வது. பாஜகவின் ஆட்சியில் ஆட்சி கலைப்போ, சர்வாதிகாரமோ எங்கும் காணமுடியாது. சட்டம் என்ன சொல்லுமோ அதை மட்டும் செய்வார்கள். சட்டம் சரியில்லை என்றால் அதனை மாற்ற குரல்கொடுப்பார்களே தவிர மீறமாட்டார்கள்.இதனால் தேசம் மற்றும் சட்டம் என தலைவணங்கி அதற்கே முன்னுரிமை கொடுக்கும் மோடிக்கு தமிழக அரசியல் அவ்வளவு வெகு முக்கியம் அல்ல.
அமித்ஷாவின் சிக்கலும் இதுதான். உள்நாட்டு பாதுகாப்பு அவருக்கு கொடுக்கபட்டுள்ளது, 8 ஆண்டு காலம் இரும்பு பலத்தோடு பாஜக ஆளும் காலம் அவர்களுக்கு எதிரான எல்லா சதிகளையும் முறியடிப்பதும், தேசம் முழுவதும் அமைதியினை நிலைநாட்டுவதும் முக்கியம்.அமித்ஷாவுக்கும் பொறுப்பும் கடமையும் அதிகம். என்.ஐ.ஏ முதல் ஏகபட்ட அழுத்தம் அவருக்கும் உண்டு. சரி, இந்நிலையில் தி.மு.க.,வினையும் தமிழக அரசியலையும் ஏன் அவர்கள் பெரிதாக கருதவில்லை. விஷயம் இல்லாமல் இல்லை.
திமுகவிற்கு தமிழகத்தில் ஆட்சி செய்வது தான் முக்கியம். அதற்காக அவர்கள் எந்த அளவும் இறங்குவார்கள். ஆனால் தேசத்துக்கு அவர்களால் பெருமிரட்டல் ஒரு காலமுமில்லை. வேறு சில மாநிலங்களில் உள்ளது போல், திமுக பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுக்கும் கட்சி அல்ல. ஆட்சிக்கு வர ஆயிரம் சொல்வார்கள். வந்து விட்டால் சத்தமே இல்லாமல் அமுங்கிப் போய்விடுவார்கள். இன்று தமிழகத்தில் என்.ஐ.ஏ வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கின்றது, மோடி வந்தால் வெண் சாமரமும் குடையும் பிடிக்கபடுகின்றது.
தி.மு.க. ஆட்சிக்கு வரத்தான் துடிக்குமே தவிர, வந்த பின்னர் தேச ஒற்றுமைக்கு எந்த பங்கமும் விளைவிக்காது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் இவர்களை யாரும் சீரியசாக எடுக்கவில்லை என்பது தான் நிஜம். பஞ்சாப், காஷ்மீர் போல வடகிழக்கில் உள்ள சில மாநிலங்களில் உள்ளது போல தி.மு.க. ஒன்றும் ஆபத்தான அரசியல் கட்சி இல்லை. தி.மு.க.வை பொறுத்தவரை ஊழல் ஒன்று தான் சிக்கல்.
இப்பொழுதும் தமிழகத்தில் பிரதான குற்றவாளிகளை அமுக்குங்கள் என்றால் கோவையோ ராமநாதபுரமோ குற்றவாளிகள் எங்கிருந்தாலும், போகிற போக்கில் பிடித்து கொடுத்து விடுவார்கள். அதுதான் திமுக. உண்மையில் தேசம் அஞ்சதக்க எந்த ஆபத்தையும் திமுக கொடுக்காது. திமுக விற்கு தேசபக்தியும் அதிகம் உண்டு. எக்காலத்திலும் தேச விரோத செயல்களை தி.மு.க. செய்யவே, செய்யாது என்பது திடமான மதிக்கத்தக்க உண்மை.
இந்துக்களுக்கு இங்கு சில உரிமை மறுக்கப்படுகின்றது என்பது உண்மை தான். இதற்கு தமிழக இந்துக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். அப்படி வந்தால் பாஜகவும் கைகொடுக்கும். மாறாக உணர்ச்சியே இல்லா இந்துக்களுக்கு என்ன சொல்வது? அவர்களாக உணரட்டும் திருந்தட்டும் என்ற சில அரசியல் கணக்கும் உண்டு. இல்லாத அல்லது தான் ஒரு இந்து என எண்ணமே இல்லாதவர்க்கு அமித்சாவும் மோடியும் வந்துதான் உணர்ச்சியும் உந்துதலும் கொடுக்கவேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்.
இதனால் அதிதீவிர பிரச்னையாக அவர்கள் தமிழகத்தை கருதவில்லை, இன்னும் சில மாதங்களில் திவாலாக போகும் அரசு அல்லது தமிழக மக்களே சில வருடங்களில் விரட்டி அடிக்கபோகும் கோஷ்டிகளை நாம் சீண்டி ஏன் அவர்கள் அனுதாப அரசியலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஒரு கோணம் பா.ஜ.கவில் இருந்தாலும் நீண்டகால திட்டத்தின் முதல் படியில் இருக்கின்றார்கள்.
தி.மு.க.வின் திராவிட கோட்டை வலுவானது, ஆனால் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை புதிய வாக்காளர் வருவதும் இயல்பு, அந்த புதிய வாக்காளர்களை கவரவும் அப்படியே திராவிட கோட்டையினை இடிக்கவும் ஒரு புல்டோசர் அனுப்பியிருக்கின்றார்கள். அதன் பெயர் அண்ணாமலை.வழக்கமாக திராவிட கோட்டையின் முன்னால் கோலமிட்டு, வண்ண கோலமிட்டு, மலர்கள் தூவி, பொங்கலிட்டு மகிழ்ந்து அதை திமுகவுக்கு எதிரான அரசியல் என சொல்லிகொண்டிருந்த தமிழக பாஜகவுக்கு இந்த பாணி புதிது.
அவர்கள் அந்த புல்டோசர் கோலம், பொங்கலையெல்லாம் மிதித்து திமுகவின் கதவுகளை உடைக்கும் பொழுது "அம்மாடி இதுதான் அரசியலா.. எப்பாடி.. என ஒருகூட்டம் கலங்கியும் நிற்கின்றது. ஆக நிலமை இதுதான், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் திமுகவோ தமிழகமோ தேச அச்சுறுத்தல் அல்ல, உடனடி ஆபத்தும் அல்ல, திமுக அப்படி செய்யபோவதுமில்லை கொஞ்ச காலத்துக்கு விட்டுத்தான் வைப்பார்கள், ஆனால் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள்.
அடுத்த தலைமுறை அரசியலைத்தான் இங்கு பாஜக குறிவைக்கின்றதே தவிர இப்பொழுது இருக்கும் வயதான தலைமுறையுடன் மோத அவர்கள் விரும்பவில்லை. அதே நேரம் எச்சரிக்க தொடங்கியிருக்கின்றார்கள். இதெல்லாம் புரியாமல் மத்திய அரசு, மோடியின் அமைதி என கத்துவதில் அர்த்தமில்லை, எல்லாம் இங்கு மெதுவாகத்தான் நடக்கும் ஆனால் நடக்கும் பொழுது உறுதியாக அசைக்க முடியாத படி நடக்கும்.
கிரிக்கெட் போன்ற விளையாட்டில் ஒரு நுணுக்கம் உண்டு, சொத்தை பேட்ஸ்மேன் கிடைத்து விட்டால் அவனை வைத்து நேரத்தை கடத்த வேண்டுமே. தவிர அவனை அவுட்டாக்கவும் கூடாது, ஆனால் அச்சத்திலே வைத்திருக்க வேண்டும்.அப்படி பந்து வீச வேண்டும், திமுகவுக்கு பாஜக அப்படித்தான் வீசிகொண்டிருக்கின்றது. சொத்தை பேட்ஸ்மேனை அவுட் செய்வது அறிவுடமை அல்ல, அப்படி பந்துவீசும் பவுலரை நோக்கி என்னை உன்னால் அவுட்டாக்க முடியவில்லை அல்லவா? என பேட்ஸ்மேன் சிரிப்பது வழக்கம் தான். தி.மு.க. அப்படித்தான் பா.ஜ.க. வை பார்த்து சிரிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu