சபாஷ் தேனி போலீஸ்....அமைதியாக முடிந்த விழா
அடர்ந்த வனப்பகுதிக்குள் வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள கண்ணகியை தரிசிக்க கூடிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
இமயமலையில் கல் எடுத்து வந்து சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயில் 2000ம் ஆண்டுகளை கடந்து நிற்கும் புரதான சின்னம். இந்த கோயில் தேனி மாவட்டத்தில் தமிழக வனத்திற்குள் இருந்தாலும், கேரளா வழியாக சென்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இதனால் இருமாநில போலீசாரும், இரு மாநில மாவட்ட நிர்வாகங்களும், இரு மாநில வனத்துறையும் இணைந்து ஆண்டுக்கு ஒரு நாள் சித்ராபவுர்ணமி அன்று மட்டும் விழா நடத்துவார்கள். எல்லைப்பிரச்னை இருந்தாலும் இதுவரை விழா எந்த அசம்பாவிதமும் இன்றி தான் நடந்தது.
இந்த ஆண்டு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கும், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே எழுந்த கருத்து மோதல் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் என கேரள உளவுத்துறை சந்தேகத்தை கிளப்பியது. இதற்காக பெரியாறு வைகை பாசன விவசாயிகளை விழாவிற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என கேரள போலீசாரும், உளவுத்துறையும் தமிழக போலீசாருக்கும், தமிழக உளவுத்துறைக்கும் எவ்வளவோ நெருக்கடிகள் கொடுத்தனர்.
ஆனால் தமிழக போலீசார் அதாவது தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே ‘எக்காரணம் கொண்டும் யாருடைய வழிபாட்டு உரிமைகளையும் பறிக்க முடியாது’. நீங்கள் தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பாதீர்கள். பெரியாறு பாசன விவசாயிகளால் நாங்கள் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என உறுதியும் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கத்தை விட அதிகமாக கேரள போலீசாரும், உளவுத்துறையினரும் கண்ணகி கோயிலில் குவிந்தனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகளவு பக்தர்கள் வந்திருந்தனர். இரு மாநில போலீஸ், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து அவ்வளவு அடர்ந்த வனப்பகுதிக்குள் மிகச் சிறப்பாக உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்திருந்தனர். சுமார் 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு வந்தனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அன்வர்பாலசிங்கம், பொன்காட்சிக்கண்ணன், மேகமலை ஜெயக்குமார், கடமலைக்குண்டு வேல்முருகன், கம்பம் தவமணி உள்ளிட்ட பலர் கோயிலுக்கு வந்தனர்.
கோயிலில் கூட்டம் அலைமோதியது. ஒட்டுமொத்த கேரள போலீசாரின் கவனமும் இவர்கள் மீது திரும்பியது. காரணம் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் இவர்கள் தமிழகத்திற்கு ஆதவாகவும், கேரளாவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் போராடி வருபவர்கள். இதனால் கேரள போலீசாரின் கண்கள் அத்தனையும் இவர்கள் மீதே இருந்தன. இருப்பினும் இந்த நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் எந்த பிரச்னையும் இல்லாமல் வழிபாடு செய்ய தேவையான அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். மிக, மிக டென்சன் நிலவிய நிலையிலும், முழு அமைதியுடன் விழா நிறைவு பெற தமிழக போலீசார் மேற்கொண்ட பெரும் முயற்சிகளே காரணம். இதற்காகவே தமிழக போலீசாருக்கு சபாஷ் சொல்லலாம். இதனை ஒட்டுமொத்த தேனி மாவட்ட பக்தர்களும் புரிந்து கொண்டு தேனி போலீசாரை வாழ்த்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu