தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடும் தென்மேற்கு பருவ மழை...
பைல் படம்
இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கும் பருவநிலை தொடர்பான கணிப்புகள் பெரும் பாலும் மிகவும் சரியாகவே இருந்திருக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு அதனுடைய கணிப்பு பொய்த்துப் போனது. அதற்கு பின்னால் இந்த ஆண்டும் அதனுடைய கணிப்பு எடுபடவில்லை.
ஜூன் நாலாம் தேதி தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கணித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை செல்லாக்காசாக்கியது பிபர்ஜோய் புயல். அரபிக்கடலில் பிரவாகம் எடுத்த பிபர்ஜோய் புயல் மேற்கு கடற்கரையின் தென் மேற்கு முனையில் தொடங்கக்கூடிய தென் மேற்கு பருவ மழையை சூறையாடி விட்டுச் சென்றது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை கடந்த ஆண்டு போல 85.5 சென்டிமீட்டர் அளவுக்கு திருப்தியான அளவிற்கு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், பிபர் ஜாய் அதற்கு எமனாக அமைந்தது.
பொதுவாகவே தமிழகத்திற்கு வட கிழக்கு பருவ மழை தான் அதிக மழையை கொடுக்கும் என்றாலும், அந்த மழையைக் கொண்டு எந்த அணையிலும் நாம் தண்ணீரைத் தேக்க முடியாது என்பதுதான் விந்தை. ஆனால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென் மேற்கு பருவ மழை தான் தமிழகத்தில் மொத்தமுள்ள அணைகளில் 78 % அணையை நிரப்பக் கூடியது. காரணம் ஓரளவு பெரிய அணைகள் எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலையை நம்பி தான் இருக்கிறது.
மானாவாரி விவசாயத்திற்கு பெருவாரியாக பயன்படும் வட கிழக்கு பருவ மழையை விட, பாசன வசதியை பெற்றுத்தரும் தென்மேற்கு பருவமழையின் வீச்சு அதிகம்.ஆனால் இன்று பெய்யும் நாளை பெய்யும் என்று தொடர்ந்து 27 நாட்களுக்கு மேலாக காத்துக் கிடக்கிறோம். கடந்த 25 நாட்களில் ஓரிரு நாட்கள் மட்டும் தலையை காட்டிய தென்மேற்கு பருவமழையின் சாரல், பெரும்பாலான நாட்களில் வானிலையை வறண்டதாகவே வைத்திருக்கிறது.
பல தவணைகளில் நாளை தொடங்குகிறது தென் மேற்கு பருவமழை என்று கணித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அத்தனை ஆய்வுகளும் பொய்யாகிப் போன நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் மதகுப்பகுதியில் மும்மத பிரார்த்தனையையும் நடத்தி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இருக்கக்கூடிய பெரும்பாலான அணைகளில் குறைந்தபட்ச தண்ணீர் கூட இல்லாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தென்மேற்கு பருவமழைக்காக காத்துக் கிடக்கின்றனர். தேனி மாவட்டத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டம் 116 அடிக்கும் கீழே வந்து விட்ட நிலையில், முதல் போக நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. இதனால் முதல் போகம் நடக்குமா? நடக்காதா என்ற சிக்கலான கேள்வி எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu