ரூல்கர்வ் அமல்படுத்துவதை ஏற்க மாட்டோம்: தமிழக விவசாயிகள் திட்டவட்டம்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.
முல்லைப்பெரியாறு அணையில் இந்த ஆண்டு ரூல்கர்வ் அமல்படுத்துவதை ஏற்க மாட்டோம்; சுப்ரீம் கோர்ட்டில் சந்திக்கலாம் என தமிழக விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கான நீர் வரத்தை மூன்று இடங்களில் அணைகள் கட்டி கேரள அரசு இடுக்கி அணைக்கு திருப்பி உள்ளது. அப்படி இருந்தும் தற்போது விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அப்படி நீர் வந்து கேரள அரசு ரூல்கர்வை காரணம் காட்டி அணை நீர் மட்டத்தை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடியாக தேக்க விடாமல் இடையூறு செய்தது.
இந்த ரூல்கர்வ் சிஸ்டம் கடந்த ஆண்டோடு முடிந்து விட்டது. அணைக்கு நீர் வரும் போது சேமிப்பது மட்டுமே சாத்தியம். நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீரை சேமிக்க வேண்டுமானால் மழை பெய்ய வேண்டும். இயற்கை நாம் விரும்பும் நேரத்தில் மழை பெய்யாது. எனவே இந்த ஆண்டு தற்போது மழை பெய்யும் போதே நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.
இதுவரை கேரள விஷமிகளை நாங்கள் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்தோம். இதனால் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகளுடன் இணைந்து சுயசார்பு பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம். எனவே இனிமேல் நாங்களும் கேரள விஷமிகளுக்கு எதிரான சட்டப்போராட்டத்தையும் வலுவாக நடத்துவோம். ரூல்கர்வ் அமல்படுத்தக்கூடாது என சுப்ரீ்ம் கோர்ட்டுக்கு செல்லவும் தயாராக உள்ளோம். இதற்காக எங்கள் வக்கீல்கள் சுப்ரீ்ம் கோர்ட்டில் தயாராக உள்ளனர். நாங்கள் மனு அனுப்பினால் போதும், வழக்கு தொடர்ந்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
கேரளா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி நிச்சயம் தருவோம். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூணாறு நகரில் தமிழக மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள தமிழ்மக்கள் போராட்டம் நடத்தியதை கேரள அரசு மறந்து விட வேண்டாம். தேவைப்பட்டால் இந்த போராட்டம் உடும்பஞ்சோலை, பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களிலும் பரவும்.
கேரளா எங்களுக்கு துரோகம் செய்ய மனச்சாட்சி இன்றி முயற்சி செய்யும் போது, நாங்கள் எங்களை காப்பாற்றிக் கொள்ள தயாராவதை தவிர வேறு வழியில்லை. கேரளாவில் எங்கு திரும்பினாலும் தண்ணீர் உள்ளது. பச்சைப்பசேல் என காணப்படுகிறது. அவர்களுக்கு தண்ணீர் தேவையை விட பல கோடிமடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மக்களை பற்றி கவலைப்படாமல், ஒரு கோடிப் பேரும் என்ன ஆனால் எங்களுக்கு என்ன? என தொடர்ந்து 42 ஆண்டுகளாக துரோகம் செய்கின்றனர். இந்த துரோகத்தில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் நிச்சயம் வலுவான நடவடிக்கைகளில் இறங்குவோம். கேரளாவிற்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம். எந்த சூழலிலும் நாங்கள் எங்கள் மக்கள் பாதுகாப்பிற்கு மட்டுமே போராடுகிறோம். பிரிவினை வாதமோ, வன்முறை என்னமோ எங்களிடம் இல்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu