நீங்கள் எடுக்கும் ஆயுதத்தை நாங்களும் எடுப்போம்: கேரளத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணை பைல் படம்
உப்புத்துறை பஞ்சாயத்தில் முல்லை பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்த தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அதே ஆயுதத்தை நாங்களும் கையில் எடுப்போம் என கடுமையாக பதிலளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பஞ்சாயத்தில் முல்லை பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 22ம் தேதி உப்புத்துறை பஞ்சாயத்தில் இதே கருத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கேரள அரசியல் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர். அதேபோல் சப்பாத்து கிராமத்தில் இதே கருத்தை வலியுறுத்தி தொடர்உண்ணாவிரத போராட்டம் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசியல்வாதிகள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். முல்லை பெரியாறு வெறும் அணை மட்டுமல்ல. ஐந்து மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம். எனவே கேரள பிரமுகர்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை நாங்களும் எடுப்போம். பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இ ணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐந்து மாவட்ட உள்ளாட்சிகளில் நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்களும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை முன்னெடுப்போம். தேவைப்பட்டால், மீண்டும் 2011ல் நடந்தது போல் கேரளாவை கட்டுப்படுத்த எல்லா நிகழ்வுகளையும் முன்னெடுப்போம் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu