மேகமலையிலும் வயநாடு ஆபத்து! உஷார்படுத்துகிறது தேனி பா.ஜ.க.,
தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக பிரிவு தலைவர் கே.கே.ஜெயராமன்.
இது குறித்து தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராமன் கூறியதாவது: வயநாடு கொடூரத்தை கண்டு இன்று நாட்டின் மக்களின் இதயங்களில் ரத்தம் கசிகிறது. இயற்கையின் கோரதாண்டவத்தை தாங்கும் சக்தி மனிதர்களுக்கு மட்டுமல்ல... எந்த உயிர்களுக்குமே இல்லை. பல நுாறு டன் எடையுள்ள மண், பாறைகள் மூடி பல நுாறுபேர் இறந்துள்ளனர். உயிருடன் புதையுண்ட இவர்களின் உடல்களை முழுமையாக மீட்க முடியுமா? என நாடே பரிதவித்து வருகிறது. அத்தனை தொழில்நுட்பங்களும் இயற்கையிடம் மண்டியிட்டு கிடக்கின்றன. மனிதகுலம் விழித்துக்கொள்ள இதுவே சரியான நேரம்.
இயற்கையே மனிதன் வாழக்கூடிய பகுதியையும், மனிதன் வாழ தகுதியில்லாத பகுதியையும் தனித்தனியே பிரித்து படைத்துள்ளது. மனிதன் வாழ, விவசாயம் செய்ய தேவையான சமவெளிப்பகுதிகள் உள்ளன. அங்கெல்லாம் மனிதன் வாழாமல் இயற்கையே அனுமதிக்காத மலைப்பகுதிகளில் சென்று வாழ்வது தான் இத்தகைய பேரிடருக்கு மிப்பெரிய காரணம். வாழ்வதற்கு மட்டுமல்ல... பயிரிடுவதற்கும் மலைப்பிரதேசங்களை பயன்படுத்துகின்றனர். இதனை விட பெரிய கொடுமையான விஷயம் உல்லாசம் என்றாலே மலைப்பகுதிகள் தான் என்ற நிலை உருவாகி விட்டது. அங்கு பிரமாண்டமான தங்கும் விடுதிகளை கட்டி, சொகுசு பங்களாக்களை கட்டி இயற்கையை பாழ்படுத்துவதில் மனிதனை மிஞ்ச ஆள் இல்லை. இயற்கைக்கு மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினமும் தீங்கு விளைவிப்பதில்லை. அத்தனை உயிரினங்களும் இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றன. மனிதன் மட்டும் தான் இயற்கையை அழித்து வாழ்கிறான். அதனால் தான் இயற்கை பேரிடர்களால் பெரிதும் அழிவில் சிக்குகிறான்.
மலைப்பகுதிகளில், வனப்பகுதிகளில் பாறைகளுக்கு மேல் தான் மண் அடுக்குகள் இருக்கும். இந்த மண் அடுக்குகள் மீது மரங்களின் இலைகள் படிந்தும், மக்கிய மரங்கள் படிந்தும் ஒரு போர்வை போல் படர்ந்திருக்கும். சில பகுதிகளில் ஆறு அடி முதல் 10 அடி வரை இந்த போர்வைபடிவுகள் இருக்கும். இந்த போர்வை படிவுகள் தான் மழைக்காலங்களில் தண்ணீரை உறிஞ்சி தன்னுள் வைத்து, (ஸ்பான்ச் போல்) கொஞ்சம், கொஞ்சமாக கசியவிடும். இதனால் தான் எப்போதுமே மழைப்பிரதேசங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். (இன்னும் பல காரணங்கள் உள்ளன. சுருக்கமான ஒன்றை மட்டும் கூறியுள்ளேன்).
இந்த ஈரப்பதம் பூமிக்கு கீழேயும் இறங்கும். இப்படி இறங்கி பாறை திட்டுகளுக்கும், மண்படிவுகளுக்கும் இடையில் சென்று விடும். பாறைத்திட்டுகளுக்கும், அதன் மேல் உள்ள மண் படிவுகளுக்கும் இடையே ஈரப்பதம் அதிகரிக்கும் போது, இரண்டிற்கும் இடையில் இருக்கும் இறுக்கமான பிடித்தம் சற்று தளர்வுடன் இருக்கும். இந்த தளர்வுகளால் தான், நிலநடுக்கம் ஏற்பட்டதும், பெரும் மழை பெய்து வெள்ளம் வரும் போதும் பாறைத்திட்டுகளின் மேல் இருக்கும் ராட்சத மண்படிவுகளும், அதன் மேல் இருக்கும் பாறைகளும் சரிந்து விடுகின்றன. இதனால் தான் வனங்களில் குடியிருக்க வேண்டாம் என வனத்துறையும், இயற்கை ஆர்வலர்களும், இயற்கையை புரிந்தவர்களும் சொல்லி வருகின்றனர். இப்படி மனிதர்கள் வனப்பகுதிக்குள் குடியேறாவிட்டால், இயற்கையின் பேரிடர்களில் இருந்து தப்புவது மட்டுமின்றி, வனவளத்தையும் செழிப்புடன் வைத்திருக்க முடியும். இது ஒரு வகை காரணம் மட்டுமே. நிலச்சரிவுக்கு இது போல் பல காரணங்கள் உள்ளன. தற்போது வயநாட்டில் மக்கள் மண்ணுக்குள் புதைய நான் சொன்ன இந்த முதல் காரணம் தான் பொருந்துகிறது.
தேனி மாவட்டம், மேகமலையும், பாறைகளின் மேல் இருக்கும் மிகப்பெரிய மண் குவியல்கள் தான். இதனால் மேகமலையில் யாரும் வசிக்கவே வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறிய பலர் அங்கு குடியிருப்புகளையும், தங்கும் விடுதிகளையும் கட்டி வருகின்றனர். வனத்துறையும் பணத்திற்காகவும், அரசியல் அதிகாரத்தை எதிர்கொள்ள முடியாமலும் இந்த விதிமீறல்களுக்கு துணை போகிறது.
இதன் விளைவு தற்போது மேகமலையிலும், பெரிய அளவில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. வால்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மூதாட்டியும், சிறுமியும் உயிரிழந்துள்ளனர். இதனால் அலறிய தமிழக அரசு வால்பாறை மக்களை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறது. இதே அபாயம் மேகமலையிலும் உருவாகி விட்டது. எனவே மேகமலை பாதுகாக்க அங்குள்ள தங்கும் விடுதிகளையும், சொகுசு பங்களாக்களையும் அகற்ற வேண்டும். கோர்ட் தலையிட்டும் சில விஷயங்கள் நடப்பதில்லை என்பது மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. மேகமலையில் எந்த நிமிடம் அடிவாங்கப்போகிறோமோ தெரியவில்லை. முதலில் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், அடிவாங்கிய பின்னர் கண்ணீர் விட்டு கதறும் கேரள அரசின் நிலை தமிழக அரசுக்கும் வரக்கூடாது என்று தான் பா.ஜ.க., சொல்கிறது. எனவே தமிழக அரசு மத்திய அரசின் எச்சரிக்கையினை செவிமடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu