மீண்டும் 120 அடியை நெருங்கியது முல்லைப்பெரியாறு அணை

மீண்டும் 120 அடியை நெருங்கியது முல்லைப்பெரியாறு அணை
X

முல்லை பெரியாறு அணை

அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 120 அடியை இன்று எட்டி விடும்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட முதல் போக சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் மழை இல்லாததால், நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெரியாறு அணையில் சுமாரான அளவில் மட்டும் மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு விநாடிக்கு 2500 கனஅடி வரை தண்ணீர் வந்தது. நீர் மட்டம் 114 அடியில் இருந்து உயர்ந்து இன்று காலை 119.55 அடியை எட்டியது.

தற்போது அணைக்கு விநாடிக்கு 1500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை விட வரத்து விநாடிக்கு 1100 கனஅடி வரை அதிகம் உள்ளது. எனவே நீர் மட்டம் இன்று மாலைக்குள் 120 அடியை எட்டி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பெரியாறு அணைப்பகுதியில் பெய்த மழையின் தீவிரம் குறைந்துள்ளது. பெரியாறு அணைப்பகுதியில் 12 மி.மீ., தேக்கடியில் 8.6 மி.மீ., மட்டுமே மழை பெய்தது. மற்ற இடங்களில் பரவலாக மழை குறைந்துள்ளது. வைகை அணை நீர் மட்டம் 50.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 244 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

மழை குறைந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் சின்னசுருளி அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணை, வருஷநாடு சின்னசுருளி அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை மீண்டும் தொடங்கினால் உடனடியாக அனுமதி மறுக்கப்படும். எனவே பயணிகள் எந்த சூழலுக்கும் தகுந்த வகையில் அருவிக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story