முல்லைப்பெரியாறு அணையில்140.75 அடியை எட்டிய நீர் மட்டம்

முல்லைப்பெரியாறு அணையில்140.75 அடியை எட்டிய  நீர் மட்டம்
X
முல்லை பெரியார் அணை (பைல் படம்).
தேனி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் வலுவிழந்த நிலையிலும், இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று பகல் முழுக்க மழை இல்லை. ஒரு சில நேரங்களில் லேசான வெயில் முகம் தெரிந்தது. இன்று காலை 4 மணி முதல் அதிக ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசியது. மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி அரண்மனைப்புதுாரில் ஒரு மி.மீ., வீரபாண்டியில் 3.2 மி.மீ., பெரியகுளத்தில் 1.4 மி.மீ., மஞ்சளாறில் 2 மி.மீ., சோத்துப்பாறையில் 2 மி.மீ., போடியில் 1.4 மி.மீ., பெரியாறு அணையில் 11 மி.மீ., தேக்கடியில் 4.6 மி.மீ., சண்முகாநதியில் 1.2 மி.மீ., மழை பெய்தது.

மழையால் அணைகளுக்கு நீர் வரத்து ஓரளவு உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு நீர் மட்டம் 140.75 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை பெய்த மழையால் நேரம் செல்ல, செல்ல நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 64.53 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 941 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 769 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 126.38 அடியாகவும், சண்முகாநதி நீர் மட்டம் 44 அடியாகவும் உள்ளது. இன்று காலை முதல் வானம் அடர்ந்த மேகமூட்டத்துடன் உள்ளது. இன்றும் மாவட்டத்தில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. மாவட்டத்தில் மழை பெய்தாலும், காய்கறிகள் பறிக்கும் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சபரிமலை சீசன் என்பதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் வரத்தும் தேவைக்கு ஏற்ப இருப்பதால் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.

தேனி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை: (கிலோவிற்கு ரூபாயில்) கத்தரிக்காய்- 24, தக்காளி- 22, வெண்டைக்காய்- 34, கொத்தவரங்காய்- 25, சுரைக்காய்- 14, புடலங்காய்- 15, குருவித்தலை பாகற்காய்- 30, முருங்கைக்காய்- 50, பூசணிக்காய்- 15, பச்சைமிளகாய் உருட்டு- 45, அவரைக்காய்- 68, தேங்காய்- 28, உருளைக்கிழங்கு 48, சேம்மங்கிழங்கு- 30, கருவேப்பிலை- 35, கொத்தமல்லி- 25, புதினா- 35, சின்னவெங்காயம்- 70, பெல்லாரி- 26, இஞ்சி- 55, வெள்ளைப்பூண்டு- 160 , வாழை இலை- 30, வாழைப்பூ- 10, வாழைத்தண்டு- 10, பீட்ரூட்- 20, நுால்கோல்- 20, முள்ளங்கி- 18, முருங்கை பீன்ஸ் -56, பட்டர்பீன்ஸ்- 175, சோயாபீன்ஸ்- 85, செலக்சன் பீன்ஸ்- 32, முட்டைக்கோஸ்- 15, காரட்- 44, டர்னிப்- 60, சவ்சவ்- 16, காலிபிளவர்- 20, பச்சைப்பட்டாணி- 75, சேம்பு- 50 என விற்கப்படுகிறது. அதேபோல் எலுமிச்சை பழம்- 40, மாம்பழம்- 100, சப்போட்டா- 200, பப்பாளி- 25, திராட்சை- 80, மாதுழம்பழம்- 200, மாங்காய்- 70, மொச்சைக்காய்- 50, தட்டாங்காய்- 50, மக்காச்சோளம்- 50, அரைக்கீரை- 25, அகத்திக்கீரை- 20, பொன்னாங்கன்னி கீரை- 20, தண்டுகீரை- 20, முருங்கைக்கீரை- 20 க்கு விற்கப்படுகிறது. சபரிமலை பக்தர்கள் பெரும்பாலும் காய்கறிகள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். கீரை சாப்பிட மாட்டார்கள். எனவே விலை குறைந்திருந்தாலும் கீரை விற்பனை சற்று மந்த நிலையில் தான் உள்ளது என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!