தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடி நிச்சயம்

தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடி நிச்சயம்
X

பெரியாறு அணை - கோப்புப்படம் 

பெரியாறு அணை நீர் மட்டம் 119 அடியை கடந்துள்ளதால் முதல்போக நெல் சாகுபடிக்கான அபாயம் முழுமையாக நீங்கியது.

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் முதல் தேதி அணை திறக்கப்பட்டது. இதனை நம்பி விவசாயிகள் நாற்றங்கால் பாவினர். ஆனால் பருவமழை காலதாமதமாகி பெரியாறு அணை நீர் மட்டம் குறைந்ததால் நாற்றுங்களை பறித்து நடவு செய்யக்கூட போதுமான தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் கவலைக்குள்ளாகினர்.

இந்நிலையில், ஒரு மாதம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தாலும், பெரியாறு அணைப்பகுதியில் சீராகவே மழை பெய்து வருகிறது. ஆனாலும் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 2500 கனஅடியை எட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

ஐந்து நாட்களுக்கு முன்னர் 114 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 119 அடியை கடந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்வதால், நீர் மட்டம் இன்னும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போதய நீர் மட்டம் நம்பிக்கை தரும் வகையில் உயர்ந்து விட்டதால், முதல் போக சாகுபடிக்கான முழு அபாயமும் நீங்கி விட்டதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனவே மாவட்டம் முழுவதும் தற்போது முதல்போக சாகுபடிக்கு நடவுப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பெரியாறு அணையில்19.8 மி.மீ., தேக்கடியில் 15.2 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் லேசான சாரல் மட்டுமே பெய்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!