முல்லைப்பெரியாறு அணை நீர்வரத்து டிரோன் மூலம் ஆய்வு செய்யப்படுமா?

முல்லைப்பெரியாறு அணை நீர்வரத்து  டிரோன் மூலம் ஆய்வு செய்யப்படுமா?
X

முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம் )

முல்லைப்பெரியாறு அணைக்கான நீர் வரத்தை டிரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில், மலை உச்சியில், தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து நம்மை வெகுவாக கவலை கொள்ளச் செய்கிறது. அணைக்கு வரும் நீரை மறித்துக் கட்டப்பட்டிருக்கும் மூன்று தடுப்பணைகளும் உடைக்கப்படாத வரை, அணைக்கான நீர்வரத்து இப்படித்தான் இருக்கப் போகிறது.

கட்ச், ப்ளீச்சிங், சபரிகிரி என்று சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநில அரசால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரும் வழியில் தடுத்து கட்டப்பட்டிருக்கும் மூன்று தடுப்பணைகளையும் மத்திய குழு ஏன் இதுவரை ஆய்வு செய்யவில்லை? அணை பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா என்று மழைக்காலங்களிலும், மழையற்ற காலங்களிலும் தொடர்ந்து அணைக்கு வரும் மத்திய குழு ,அணைக்கு நீர் வரும் வழியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஏன் இதுவரை ஆய்வு செய்யவில்லை?

கேரள மாநில அரசின் இது போன்ற செயல்களால் ஐந்து மாவட்டங்களிலும் வாழும் அப்பாவிகள் பெரிய அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மத்திய குழு உணர வேண்டும். சிவகிரி சுந்தரமலை, சேத்தூர் சாஸ்தா கோயில் அணைப்பகுதியில் தொடர்ந்து பத்து நாட்களாக சாரல் மழை உச்சநிலையை எட்டி இருக்கும் நிலையில், எதற்காக பெரியாறு அணைக்கான நீர் வரத்து தடை பட்டிருக்கிறது என்பது தெரிய வேண்டும்.

உடனடியாக ட்ரோன் மூலமாக அணைக்கு நீர் வரும் வழி பாதைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். செண்பகவல்லி கால்வாய் பகுதி, சிவகிரி சுந்தரமலை, சாஸ்தா கோயில் வனப்பகுதி தொடங்கி பெரியாறு அணை வரை ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மூன்று தடுப்பணைகளை கட்டிய கேரளா கண்டிக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை மீதான எங்கள் உரிமை சட்டத்திற்கு உட்பட்டது, சாகா வரம் பெற்றது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு