வீடுகளில் குப்பைகளை இனிமேல் மூன்றாக பிரித்து வாங்க வேண்டும்..!

வீடுகளில் குப்பைகளை இனிமேல்  மூன்றாக பிரித்து வாங்க வேண்டும்..!
X

குப்பை சேகரிப்பு (கோப்பு படம்)

புதிய திட்டத்தின் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

‛வீடுகளில் இனிமேல் குப்பைகளை மூன்று வகையாக பிரித்து வாங்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பயன்படும் குப்பைகளை விற்பனை செய்து, துப்புரவு பணியாளர்களே வருவாய் எடுத்துக் கொள்ளலாம்’ என துப்புரவு பணியாளர்களுக்கு உள்ளாட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்கி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். பல இடங்களில் குப்பைகளை வாங்கும் போதே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குகின்றனர். இனிமேல் மக்கும் குப்பை, மக்காதகுப்பை, அபாயகரமான குப்பைகள் என பிரித்து வாங்க வேண்டும் என துப்புரவுப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதோடு, அதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இனிமேல் மூன்று வகைகளில் குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். உணவுக்கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் போன்றவைகள் ஈரக்கழிவுகள் என்றழைக்கப்படுகிறது. இவைகள் உடனே மக்கி உரமாகி விடும்.

மறுசுழற்சி செய்யக்கூடிய பாலீதீன், ரப்பர், மெட்டல் வகைகள், துணி, தெர்மாக்கோல், கண்ணாடி பாட்டில், பீங்கான், பழைய செருப்பு, 50 மைக்ரான் அளவு்கு மேல் உள்ள பாலீதீன் குப்பைகளை தனியாக பிரித்து வாங்க வேண்டும். இவற்றை மறுசுழற்சி செய்ய ‛பழயை இரும்புக்கடை வியாபாரிகள் வாங்கிக் கொள்வார்கள்’. இந்த குப்பைகளை இந்த வியாபாரிகளிடம் கொடுத்து அந்த பணத்தை துப்புரவு பணியாளர்களே வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபாயகரமான கழிவுகள்; நாப்கின், டயாப்பர், ஷூபாலீஸ் டப்பா, பெயிண்ட் டப்பா, டியூப் லைட்டுகள், சி,எப்.எல்., பைப்புகள், வேதிப்பொருட்களை உருவாக்கும் பாலீதீன்கள் போன்றவற்றை தனியாகப் பிரித்து வாங்க வேண்டும். இவற்றை எரித்தால், இதில் இருந்து உருவாகும் ‛டயாக்ஸின்’ என்ற நச்சுப்பொருள் கேன்சரை உருவாக்கும்.

எனவே உள்ளாட்சிகள் இவற்றை தனியே சேகரித்து பாதுகாப்பான முறையில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கும் நபர்களை சந்தித்து, அந்த குப்பைகளை அவர்களே மறுசுழற்சி செய்ய வைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!