தேனியில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனையா? புகார் தெரிவிக்கலாம்
பைல் படம்
தேனி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உரிமத்தை ரத்து செய்தல், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேனி வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் உரங்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி, பலர் உரம், பூச்சி மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இது குறித்து தேனி வேளாண்மைத்துறைக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து உரம் விற்பனையினை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தேவையான அளவு உரங்கள் இருப்பு உள்ளது. இது தேனி மாவட்டத்தின் தற்போதைய தேவைக்கு போதுமானது. எனவே உரத்தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு என காரணம் காட்டி யாரும் உரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க கூடாது. உர மூட்டைகளின் மீது விலை எழுதி வைக்க வேண்டும். விவசாயிகளின் ஆதார் அட்டை, கைரேகை பெற்ற பின்னரே விற்க வேண்டும்.
உரம் விற்பனையினை கண்காணிக்க ஒவ்வொரு ஒன்றியத்திலும் வேளாண்மை உதவி இயக்குனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உரங்களை அதிகம் இட்டால் பயிர்களில் பல்வேறு பூச்சி தாக்குதல் ஏற்படும். எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரம் இட வேண்டும். விற்பனையில் யாராவது முறைகேடு செய்தால், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும். உரம் விற்பனையில் முறைகேடு செய்பவர்கள் மீது உரிமம் ரத்து செய்தல், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தல் என்பது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu