மெட்டு மலையில் விதிமீறல்கள்: விபத்து அபாயம் என விவசாயிகள் புகார்
பைல் படம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், விஜய் மாரீஸ்.ராதாகணேசன், மை.ராஜன் தாமஸ். அன்வர் பாலசிங்கம் மற்றும் முதன்மை நிர்வாகிகள் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தேனி மாவட்டம் போடி வனச்சரகர் நாகராஜன் சட்ட விரோதமாக அடர் வனப்பகுதிகளுக்குள்,*Camp Shed* அமைப்பதற்கு, சுற்றுலா திருடர்களுக்கு தொடர்ந்து துணை போகிறார். டாப் ஸ்டேஷன் அருகே உள்ள எல்லப்பட்டி எஸ்டேட் உள்புறமாக இருக்கும் தமிழக வன நிலங்களில், மூன்று மீட்டர் அளவுக்கு பாதை போடுவதற்கு கேரளாவைச் சார்ந்த செந்தில் மற்றும் ஷாம் ஆகியோரிடம் பெரிய அளவிற்கு பணம் பெற்றுக் கொண்டு, அனுமதி வழங்கி உள்ளார். அங்கு சட்டவிரோதமாக டென்ட் கொட்டகைகள் அமைப்பதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறார்.
இப்படி அமைக்கப்பட்டிருக்கும் டெண்ட் கொட்டகைகள் ஒரு யானைக் காட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எவ்வித பாதுகாப்பும் இல்லாத இந்த டெண்டு கொட்டகைகளில் விபச்சாரம், போதை பொருட்கள், ஆள் கடத்தல் என அனைத்து விதமான சட்ட விரோத காரியங்களையும் மேலே குறிப்பிட்ட பெயர் கொண்ட இரண்டு மலையாளிகளும் தெளிவாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு கொட்டக்குடி பஞ்சாயத்து தலைவராக ஏல முறையில் தேர்வு செய்யப்பட்ட, ராஜேந்திரனும் உடந்தையாக உள்ளார்.
பஞ்சாயத்தில் பல்வகை ரசீது என்கிற பெயரில் ஒரு சட்ட விரோத ரசிதை அடித்து வைத்துக் கொண்டு, முறையின்றி பணம் வசூலித்துக் கொண்டுள்ளனர். எல்லப்பட்டி வனப்பகுதியில் கேரள எல்லை முடிந்ததும் தமிழக எல்லைக்குள் 600 மீட்டர் வரை மண் சாலை அமைத்து, டென்ட் கொட்டகைகளில் தங்க வருபவர்களை ஜீப்புகளில் அழைத்து சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லப்பட்டி வனப்பகுதியில் எந்நேரமும் மிகப்பெரிய மனித பேரழிவு ஏற்படலாம் என்கிற நிலை இருக்கிறது.
இதேபோல் கடல் மட்டத்திலிருந்து 8200 அடி உயரம் உள்ள கொழுக்குமலை தேயிலைக் காட்டிலும் சட்ட விரோத டெண்டு கொட்டகைகள் அமைக்க இதே கொட்டக்குடி பஞ்சாயத்து தலைவர் மற்றும் போடி வனச்சரகர் நாகராஜன் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர்.
சின்னமனூர் வனச்சரகம் மற்றும் மேகமலை வனப்பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குள் கட்டப்பட்டு வரும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு இடைத்தரகராகவும் இந்த நாகராஜன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கூடுதலாக போடி மெட்டு உச்சியில், வீடு கட்டிக் கொண்டிருக்கும் இந்த நாகராஜன் வனச் சட்டங்களுக்கு எதிராக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்று தொடர்ந்து 18 நாட்கள் இடத்தை சுத்தப்படுத்தியதோடு, ராட்சத போர்வெல் வண்டியை போடி மெட்டுக்கு கொண்டு சென்று தனது வீட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து போர்வெல் இயந்திரத்தின் மூலம் ராட்சத ஆழ்துளை கிணறும் அமைத்திருக்கிறார்.
கொட்டக்குடி பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் காடு இருக்கும் காரிப்பட்டி பகுதிக்கு, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலை அமைக்க மூன்று மாதங்கள் அனுமதி கொடுத்தவரும் சாட்சாத் இந்த போடி வனச்சரகர் நாகராஜன் தான்.
ஏற்கனவே இப்பகுதியில் நடந்த தீ விபத்தில் 22 பேருக்கும் அதிகமானோர் பலியான நிலையில், இவர்களின் முறைகேடுகளால் மேலும் பல சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu