ஆண்டிபட்டி பெரியகுளம் இடையே பேருந்து வசதியின்றி மக்கள் அவதி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பேருந்தில் முண்டியடித்து ஏறும் மக்கள் கூட்டம்.
Bus Facility - தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியும், பெரியகுளமும் வர்த்தக ரீதியாகவும், மக்களி்ன் வாழ்வியல் ரீதியாகவும் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். இப்படி மருத்துவம், வணிகம், வேலை வாய்ப்பு என இப்பகுதி மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், ஆண்டிபட்டி- பெரியகுளம் பேருந்து வழித்தடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பெரியகுளத்தில் இருந்து மேல்மங்கலம், ஜெயமங்கலம், டாடா காபி மில், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை, வைகை அணை, ஜம்புலிபுத்துார் வழியாக பல்வேறு கிராமங்களை கடந்து ஆண்டிபட்டிக்கு வர வேண்டும்.
இத்தனை கிராம மக்களும் தேனி மருத்துவக் கல்லூரிக்கு வரவேண்டும் என்றால் ஆண்டிபட்டி வந்து அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வர வேண்டும். இந்தபகுதியில் இருந்து மட்டும் தினமும் குறைந்தது இரண்டாயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேனி மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
ஆண்டிபட்டி- பெரியகுளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தேனிக்கு வர வேண்டியிருந்தாலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்தை பிடித்தே வர வேண்டும். இந்த வழித்தடத்தை தவிர வேறு வழித்தடங்களில் பயணித்தால் தேவையில்லாமல் பல கி.மீ., துாரம் சுற்ற வேண்டியிருக்கும்.
அதிகளவு போக்குவரத்து வசதிகள் தேவைப்படும் இந்த வழித்தடத்தில் மிக, மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது இல்லை. நகரப் பேருந்துகள் எப்போது வரும் என்பதும் தெரியாது. தவிர இந்த பேருந்துகளின் பராமரிப்பும் மிகவும் மோசமாக இருப்பதால் எந்த இடத்தில் பழுதாகி நிற்கும் என்பதே தெரியாது.
இந்த வழித்தடத்தில் ஆட்டோவில் பயணிப்பதும் மிகவும் செலவு பிடிக்கும் விஷயம். 10 ரூபாய் பேருந்து கட்டணத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு ஆட்டோவில் சென்றால் 30 ரூபாய் வரை தர வேண்டியிருக்கும். தவிர பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லாமல் செல்ல வேண்டிய இடங்களுக்கு அவர்கள் அதிக செலவு செய்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆண்டிபட்டி மக்கள் பெரியகுளத்திற்கும், பெரியகுளம் மக்கள் ஆண்டிபட்டிக்கும் நேரடியாக செல்ல வேண்டும் என்றால், தேனி வழியாக சுற்றிச் செல்ல முடியும். ஆனால் வழியோர கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், தான் பேருந்து வசதி பற்றாக்குறை உள்ளது. இதனால் நகரப் பேருந்துக்கு எப்போதுமே ஏராளமானோர் காத்திருப்பார்கள்.
பேருந்து வந்ததும் போட்டி போட்டு மக்கள் ஏறுவதை பார்த்தாலே மிகவும் பரிதாபமாக இருக்கும். அந்த அளவு பேருந்தில் ஏற மக்கள் போட்டியிடுவார்கள். இதனால் பயணிகளுக்கிடையே சில சமயம் சண்டையும் ஏற்படும்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண இந்த வழித்தடத்தில் சற்று கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் போக்குவரத்து துறைக்கும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu