லோக்சபா தேர்தல் புறக்கணிப்பா? என்ன சொல்கிறார் தலைவர் விஜய்..?
விஜய் (ஓவியம் )
சினிமா நடிகராக இருந்தாலும், விஜய் தேசப்பற்றுள்ள, அரசியல் நியாயங்களை வலியுறுத்தும் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். விஜய் கட்சிக்கு ஓட்டுப்போடாவிட்டால், என்ன நடக்கும் என்றே தெரியாது என ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தனது பெற்றோர்களை மிரட்டிய தகவல்கள் எல்லாம் வருகின்றன.
இந்த சிறுவனைப்போல் பல லட்சம் ரசிகர்கள் விஜய்க்கு உள்ளனர். அத்தனை பேரும் விஜய்க்காக எதுவும் செய்யத்தயங்காத அளவு உக்கிரம் நிறைந்த தீவிர பக்தர்கள். தங்களுக்கு ஒரு கோடி ரசிகர்கள் உள்ளதாக விஜய் கட்சி நிர்வாகிகள் பலர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். உண்மை தான் நடிகராக விஜய்யை பல கோடிப்பேர் தமிழகத்தில் கொண்டாடுகின்றனர். அதனால் தான் விஜய் நடிக்கும் படத்திற்கு சம்பளமாக மட்டும் 200 கோடி வரை கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
ரசிகர்களைப்போல் ரசிகைகளும் பல கோடிப்பேர் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம். இதில் பெரும்பான்மையானோர் விஜய் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே கேட்கும் மனநிலையில் தான் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இங்கு தான் சிக்கலே தொடங்குகிறது.
நான் கட்சி தொடங்கி விட்டேன். ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. யாருக்கும் ஆதரவு தரப்போவதும் இல்லை தலைவர் விஜய் தெளிவாக கூறியிருக்கிறார். இதே நிலைப்பாட்டை விஜய் ரசிகர்களும் எடுத்தால் என்னாகும். அதாவது விஜய்யை போன்றே அவரது ரசிகர் பட்டாளமும், அதாவது தொண்டர் பட்டாளமும், ஆதரவாளர்களும் யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்று நிலைப்பாடு எடுத்தால் ஓட்டுப்போடுவார்களா?
தேர்தலை புறக்கணிப்பார்களா? யாருக்கும் ஆதரவில்லை என்று விஜய் குறிப்பிட்டது, அவருக்கு மட்டுமா? அல்லது அவரை பின்பற்றும் பல லட்சம், அதாவது அவர்கள் கணக்கில் பல கோடி ரசிகர்கள், ரசிகைகளுக்கும் சேர்த்தா? அவர்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள். தற்போது அவரவர்கள் இருக்கும் கட்சிக்கு ஆதரவாக இப்போது ஓட்டுப்போட்டு விட்டு, அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்களா?
அல்லது விஜய்யை போல் யாருக்கும் ஆதரவு தராமல் நடுநிலை வகிப்பார்களா? நடுநிலை என்பதன் அர்த்தம் ஓட்டுப்போடுவதா? தேர்தலை புறக்கணிப்பதா? அசுர பலம் மிகுந்த ரசிகர்களை பெற்ற விஜய் இப்படி ஒரு குழப்பத்தில் தனது ரசிகர்களையும், ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் நிறுத்தி வைப்பது ஏன்?
இப்படி கேள்வி கேட்கும் விஜய் ரசிகர்கள், அடுத்த குண்டையும் துாக்கிப்போடுகிறார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கப்போகும் சட்டசபை தேர்தலி்ல் போட்டியிடப்போகும் விஜய், இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் விஜய் கட்சி தொடங்கியது ஏன்? இவ்வளவு நாள் பொறுத்தவர், அவர் அறிக்கையில் சொன்னது போன்றே படவேலைகளை முடித்து விட்டு, கட்சிப்பெயரை அறிவித்திருக்கலாமே?
அதற்குள் லோக்சபா தேர்தலும் நடந்து முடிந்திருக்குமே. அவர் அறிக்கையில் தேர்தலுக்கு பின்னர் படவேலைகளை முடித்து விட்டு, கட்சி நிர்வாகிகள் கீழ் மட்டம், மேல்மட்டம், உயர்மட்டம் கூட்டங்களை நடத்தி, உள்கட்டமைப்பை உருவாக்கி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என தெளிவாக கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் இப்போது கட்சிப்பெயரையும் அறிவித்து விட்டு, யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்ததன் காரணம் என்ன? அவரது அறிவிப்பு அவரை நம்பியிருக்கும், அவரது அரசியல் பிரவேசத்தை கொண்டாடி வரும் பல லட்சக்கணக்கான அவர்களது பாணியில் பல கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என்ன வழிகாட்டுதலை உணர்த்துகிறது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?.
அரசியல் தலைவர் விஜய் அவர்களே உங்கள் ரசிகர்கள்... சாரி தொண்டர்கள்... தற்போது என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். தமிழக அரசியல் களம் மிகவும் குழம்பிக்கிடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu