இன்று முதல் வாகனங்கள் விலை கிடுகிடு உயர்வு ?

இன்று முதல் வாகனங்கள் விலை கிடுகிடு   உயர்வு   ?
X

பைல் படம்

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடிபோடப்பட்டுள்ளதால், கமர்ஷியல் வாகனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு

உலக அளவில் மாசுக் கட்டுப்பாடு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வாகனங்களுக்குத் தான் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு ஓசோன் மண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கிறது. வாகனங்கள் இல்லாமல் இருக்கவும் முடியாது என்பதால் வாகனங்களால் மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தற்போது பிஎஸ்6 என்ற மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் முதல் கட்ட விதிகள் நடைமுறையில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நடைமுறைக்கு வர உள்ள இந்த கட்டுப்பாட்டின் படியே ஒவ்வொரு வாகனமும் தயாரிக்கப்பட வேண்டும். இதனால் பல மாற்றங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. பிஎஸ் 6 முதல் ஸ்டேஜ் மற்றும் பிஎஸ் 6 இரண்டாவது ஸ்டேஜிற்கு இருக்கும் ஒரே வித்தியாசம் ரியல் டைம் மானிட்டரிங் தான். பிஎஸ் 6 முதல் கட்டத்தில் ஒரு வாகனத்தின் மாசு அளவு ஆலையில் டெஸ்ட் செய்யப்படும் போது குறிப்பிட்ட அளவிற்குக் குறைவாக இருந்தால் போதுமானது. அந்த இன்ஜினை வாகனத்தில் பொருத்திப் பயன்படுத்தலாம். ஆனால் பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் ஒரு இன்ஜினில் ரியல் டைமில் மாசுவை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு விற்பனைக்கு வரும் வாகனங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அளவை விட அதிகமான மாசு வாகனத்தின் இன்ஜினிலிருந்து வெளியேறினால் உடனடியாக டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

அந்த வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும். இந்த பிஎஸ் 6- இரண்டாம் கட்ட மாற்றத்திற்குத் தகுந்தார் போல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இன்ஜினை மாற்ற வேண்டும் என்றால் வாகனத்தின் ஹார்டுவேர், சாஃப்ட்வோர் மற்றும் செமி கண்டெக்டர்களை மாற்ற வேண்டும். இதனால் வாகனத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகும். இது வாகனத்தின் விலையில் எதிரொலிக்கும்.

தற்போதே பல நிறுவனங்கள் தங்கள் வாகனத்தின் விலையை உயர்த்தி விட்டது. பயணிகள் வாகனத்தைப் பொருத்தவரை 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வாகனத்தின் இன்ஜின் அளவை பொருத்து விலை அதிகரிக்கப்படும். கமர்ஷியல் வாகனங்களுக்கு 5 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படும். இதில் என்ட்ரி லெவல் வாகனங்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படும்.

இந்த விலையேற்றம் கார்கள் மட்டுமல்ல டூவீலர், 3 வீலர்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த பிஎஸ் 6 ஸ்டேஜ் 2 கட்டுப்பாட்டிற்குத் தகுந்தார் போல் இன்ஜினை மாற்றுவதில் பெரிய பாதிப்பைப் பெறப்போகும் இன்ஜின் என்றால் டீசல் இன்ஜின் தான். பெரிய டீசல் இன்ஜின்களில் இந்த மானிட்டரிங் கருவியைப் பயன்படுத்துவது எளிது தான். ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களில் இதை பயன்படுத்துவது கடினம். இதற்காக ஆகும் செலவு அதிகம்.

இதனால் பல நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின் உடன் வரும் வாகனங்களில் டீசல் இன்ஜினையே மொத்தமாக நிறுத்தி விட்டன. பெட்ரோல் இன்ஜின்களை மட்டும் தான் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா அமேஸ், டாடா அல்ட்ராஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களின் டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் முற்றிலுமாக ஏப் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளன.

நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான சொந்த பயன்பாட்டு வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, ஏப்ரல் 1 முதல் அமலாகிறது.

இதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் இயக்கப்படும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு அது போன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை.இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாடகை வாகன உரிமையாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில் வரிகள், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன.இதனால், போக்குவரத்து துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனம் வாங்க வங்கிக் கடன் பெற்றால், அது முடியவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன; அதன்பின் தான் உரிமையாளருக்கு வாகனம் சொந்தமாகிறது.

இந்நிலையில், உடனே இந்த சட்டம் அமலானால், வாகன உரிமையாளர்கள் கடுமையான இழப்பை சந்திப்பர். இந்த சட்டம் அமலானால், பலர் வாடகை வாகனத் தொழிலை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும். அதேபோல், தமிழக அரசின் நிதிநிலையும் மோசமாக உள்ளது.

இந்நிலையில், காலாவதியான பஸ்களை அழித்து விட்டு புதிய பஸ்களை வாங்கினால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.ஏற்கெனவே உள்ளதுபோல், அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையுடன் மீதத் தொகை செலுத்தி, புதிய வாகனங்களையும் வாங்க முடியாது. இதனால் தனியார் மட்டுமின்றி, அரசும் கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர்.

Tags

Next Story
கிரீன் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா?..அப்போ அதுல கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேத்துக்கோங்க..உடம்புக்கு பல நன்மைகளை தருதாம்!!