தமிழகம் முழுவதும் தேவை அதிகரிப்பு: தேனியில் உச்சத்தில் காய்கறிகளின் விலை

தமிழகம் முழுவதும் தேவை அதிகரிப்பு: தேனியில் உச்சத்தில் காய்கறிகளின் விலை

தேனி உழவர் சந்தை 

பண்டிகை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. விலைகளும் உயர்ந்துள்ளது.

இன்று தமிழ்நாடு முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை தை பொங்கல், நாளை மறுநாள் உழவர்திருநாள், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பண்டிகை வருகிறது.

கிட்டத்தட்ட இதனை சைவப்பண்டிகை எனக்கூட கூறலாம். காரணம் முருகன் கோயில், அதாவது தைப்பூச திருவிழா (வரும் ஜனவரி 25ம் தேதி), தாய் மூகாம்பிகை சீசன், சபரிமலை ஐயப்பன் சீசன் என பெரிய கோயில் விழாக்களும் தை திருநாளும் இணைந்து வருவதால், பெரும்பாலும் இந்த பண்டிகை நாட்கள் சைவப்பண்டிகையாகவே கொண்டாடப்படும்.

இந்த நாட்களில் சாதாரண வீடுகளில் கூட ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரண்டு அல்லது மூன்று வகை காய்கறிகள் பயன்படுத்துவார்கள். பூஜை மற்றும் விரத நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு குறைந்தபட்சம் ஆறு வகை காய்கறிகளை பயன்படுத்துவார்கள். இதனால் தமிழகம் முழுவதும் காய்கறிகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.

காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகளின் முதன்மை தேர்வு பட்டியலில் தேனி மாவட்டமும் உண்டு. காரணம் தேனி மாவட்டத்தில் தினமும் சராசரியாக 250 டன் காய்கறிகள் வரை விளைவிக்கப்படும். இந்த காய்கறிகள் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். கேரளாவிற்கு மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் சராசரியாக 60 முதல் 75 டன் காய்கறிகள் கொண்டு செல்லப்படும்.

இதனால் எவ்வளவு விளைந்தாலும் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதில் பல நேரங்களில் சிரமம் ஏற்படும். அப்படி ஒரு சூழல் தற்போது உருவாகி உள்ளது. வெளியூர் வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்வதால், காய்கறிகள் விளைச்சல் நன்றாக இருந்தாலும் விலைகள் உயர்ந்துள்ளன.

குறிப்பாக உழவர் சந்தையிலேயே வெண்டைக்காய், அவரைக்காய் ஒரு கிலோ சராசரியாக 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முருங்கை காய் விலை 80 ரூபாயினை தாண்டி விட்டது. கத்தரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாயினை தாண்டி விட்டது. வெளிமார்க்கெட்டில் விலைகள் இன்னும் சற்று அதிகமாகவே விற்கப்படுகிறது.

தேனி உழவர்சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தை காணலாம். கிலோவிற்கு ரூபாயில் குறிக்கப்பட்டுள்ளது.

மொச்சக்காய்- 85, துவரங்காய்- 80,

முருங்கை பீன்ஸ்- 80, பட்டர்பீன்ஸ்- 160,

சோயாபீன்ஸ்- 90, செலக்‌ஷன் பீன்ஸ்- 90,

கோழி அவரைக்காய்- 55, பெல்ட் அவரைக்காய்- 70,

முட்டைக்கோஸ்- 25, கேரட்- 60,

டர்னிப்- 60, சவ்சவ்- 20,

காலிபிளவர்- 30, பச்சைப்பட்டாணி- 70,

சேம்பு- 65, தக்காளி- 32,

சுரைக்காய்- 18, புடலங்காய்- 30,

பீர்க்கங்காய்- 38, பூசணிக்காய்- 28,

பச்சைமிளகாய்- 50, தேங்காய்- 32,

சின்னவெங்காயம்- 48, பெல்லாரி வெங்காயம் - 32,

இஞ்சி- 110, வெள்ளைப்பூண்டு- 280,

பீட்ரூட்- 40, நூல்கோல்- 40,

முள்ளங்கி- 38, உருளைக்கிழங்கு- 40,

கருணைக்கிழங்கு- 50, சேனைக்கிழங்கு- 60,

கருவேப்பிலை- 50, கொத்தமல்லி- 40

புதினா- 35, கீரை வகைகள்- 25 என விற்கப்படுகிறது.

Tags

Next Story