அப்பாடா, கொஞ்சம் நிம்மதி: 3 மாதங்களுக்கு பின் காய்கறி விலை இறங்குமுகம்
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், மூன்று மாதங்களாகவே காய்கறி சாகுபடி முறைப்படி செய்ய முடியவில்லை. இதனால் காய்கறி விளைச்சல் குறைந்து, தேவை அதிகரித்தது. எனவே பற்றாக்குறை ஏற்பட்டு விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன.
தக்காளி ஒரு கிலோ 140 ரூபாயினை தொட்டது. கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய் என பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகளின் விலை கிலோ 100 ரூபாயினை கடந்தது. பட்டர்பீன்ஸ் கிலோ 250 ரூபாயினை கடந்தது. இதனிடையே, மழை குறைந்ததும், தோட்டக்கலை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சந்தைக்கு காய்கறி வரத்து மெல்ல, மெல்ல அதிகரித்தது. விலைகளும் மெதுவாக குறைந்தன.
இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு கிலோ கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய், தக்காளி கிலோ 40 ரூபாய், சுரைக்காய் 20 ரூபாய், புடலங்காய் 20 ரூபாய், பாகற்காய் 35 ரூபாய், பூசணிக்காய் 30 ரூபாய், தேங்காய் 30 ரூபாய், உருளைக்கிழங்கு 25 ரூபாய், சேப்பங்கிழங்கு 25 ரூபாய், வாழை பூ 10 ரூபாய், வாழைத்தண்டு 10 ரூபாய், மொச்சக்காய் முதல் தரம் 50 ரூபாய், பட்டர்பீன்ஸ் 120 ரூபாய், நுாக்கல் 30 ரூபாய், முட்டைக்கோஸ் 60 ரூபாய், காலிபிளவர் 30 ரூபாய், பச்சைபட்டாணி 50 ரூபாய் என விற்கப்பட்டது.
அதேபோல், பெல்லாரி கிலோ 40 ரூபாய், சின்னவெங்காயம் கிலோ 60 ரூபாய் எனவும் விற்கப்பட்டது. இதில் சின்னவெங்காயம் மட்டும் அடுத்து வரும் சில நாட்களில் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. மற்ற காய்கறிகளின் விலைகள் மேலும் குறையவே வாய்ப்புகள் உள்ளன என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu