வீரபாண்டி திருவிழா தொடக்கம்: தேனியில் கொட்டி தீர்த்த மழை

வீரபாண்டி திருவிழா தொடக்கம்: தேனியில் கொட்டி தீர்த்த மழை

வீரபாண்டி கௌமாரியம்மன் 

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்கியது.

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா கௌமாரியம்மன் திருவிழா. இன்று தொடங்கும் விழா வரும் மே 16ம் தேதி வரை நடக்கிறது. ஒரு வாரம் நடக்கும் இந்த விழாவில் தினமும் குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் வரை கோயிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். விழா நடக்கும் ஒரு வார காலமும் கோயில் நடை சாத்தப்படாது. எனவே இரவும் பகலும் பக்தர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். அரசு போக்குவரத்துக்கழகம் 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதற்காக வீரபாண்டியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 24 மணி நேரமும் துப்புரவு பணிகளில் ஈடுபடுவார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு அது போதாது. விழா திடல் மட்டும் சுமார் 4 கி.மீ., சுற்றளவிற்கு இருக்கும். தினமும் பல ஆயிரம் பேர் கிடா வெட்டி விருந்து வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இப்படி நடக்கும் விழாவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும்.

இந்த விழா திடல் தற்போது பெய்து வரும் மழையால் பெரிய அளவில் சகதியாக மாறி உள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களையும், அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளையும் அதிகாரிகள் மிகத்தெளிவாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த மழையில் சிறு கசிவு ஏற்பட்டாலும் பெரும் சிக்கல் ஏற்பட்டு விடும்.

வழக்கமாக வீரபாண்டி திருவிழா நடைபெறும் காலங்களில் மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதுவும் நேற்று பெய்த மழை மிக, மிக அதிகம். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை பெய்து கொண்டே இருந்தது. தேனியில் மட்டும் 51.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. வீரபாண்டியில் 8.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆண்டிபட்டியில் 5.8 மி.மீ., பெரியகுளத்தில் 21 மி.மீ., மஞ்சளாறில் 5 மி.மீ., சோத்துப்பாறையில் 12 மி.மீ., வைகை அணையில் 5.2 மி.மீ., போடியில் ஒரு மி.மீ., உத்தமபாளையத்தில் 6.2 மி.மீ., கூடலுாரில் 4.6 மி.மீ., பெரியாறு அணையில் 4.6 மி.மீ., தேக்கடியில் 9.8 மி.மீ., சண்முகாநதியில் 2.4 மி.மீ., மழை பதிவானது.

இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வீரபாண்டி திருவிழாவில் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் பலப்படுத்த வேண்டும்.

Tags

Next Story