வங்க கடலில் கலக்கும் வைகை நீர்: விவசாயிகள் கடும் அதிருப்தி
வைகை ஆறு (பைல் படம்)
வீணாக கடலுக்குச் செல்லும் நீரை சிவகங்கை மாவட்ட ஒரு போகப் பாசனத்திற்கு திறப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இச்சங்கம் நிர்வாகிகள் சலேத்து, காட்சிக்கண்ணன், விஜய் மாரீஸ், ராதா கணேசன் மற்றும் தாமஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
6300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனம், பிரதான பாசனமாகும். முறையான பொதுப்பணித்துறை ஆயகட்டின் கீழ் செயல்படும் இந்த பாசன கால்வாய்களுக்கு கடலுக்குச் செல்லும் நீரை திறந்து விடுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணைக்கு (விநாடிக்கு 4,500 கன அடி) வந்து சேர்ந்தது. வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் பெய்த பரவலான மழை பார்த்திபனூர் மதகு அணைக்கு கூடுதலாக 2,500 கன அடியை கொண்டு வந்து சேர்த்தது.
அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன கண்மாய்களுக்கு வைகை வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலமாகவும், கூத்தங்கால்வாய், பரளையாறு, களரி கால்வாய், கீழ நாட்டார் கால்வாய் மற்றும் வைகை ஆற்றின் மூலம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கும் தண்ணீரை திருப்பி விட்டது பொதுப்பணித்துறை.
அதிலும் புல்லங்குடி அணைக்கட்டுக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை திருப்பி விட்டது பொதுப்பணித்துறை. இவ்வளவு தண்ணீரை எதிர்கொள்ள முடியாத புல்லங்குடி அணைக்கட்டு, கடுமையாக சேதமடைந்தது. அதுபோல் சம்பந்தமே இல்லாமல் சக்கரக்கோட்டை கண்மாய்க்கும் விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை திருப்பி விட்டது. கொல்லங்குடி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் புல்லங்குடி, சித்தார்கோட்டை, தேர்போகி, அத்தியூத்து கண்மாய்களுக்கு சென்று சேர்ந்தது போக, மீதமுள்ள தண்ணீர் வங்க கடலுக்கு சென்று கொண்டுள்ளது. அதாவது விநாடிக்கு 500 கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் வங்கக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
பெரியாறு போட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடலுக்குச் செல்லும் நீரில் பகுதி நீரை சிவகங்கை மாவட்டத்திற்கு திருப்பி விட்டால் கூட, இந்நேரம் 30 கண்மாய்களுக்கு மேல் நிறைந்திருக்கும். அரசாணை என்கிற அரதப்பழசான பேப்பர் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, அதன்படி தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராப்பு காட்டி வருகின்றனர். சீரழியப்போகிறது அப்பாவி விவசாயிகள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார். எதற்காக சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனத்திற்கான தண்ணீர் வேண்டி தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை தொடர்பு கொள்ளவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பாராமுகம் ஆகியவற்றை கண்டித்து வரும் 9 ம் தேதி காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu