மெல்ல இனி சாகுமோ வைகை..? அழிவின் விளிம்பில் நிற்கும் ஆறு..!

மெல்ல இனி சாகுமோ வைகை..? அழிவின் விளிம்பில் நிற்கும் ஆறு..!
X

வைகை ஆறு.(கோப்பு படம்)

ஆறு தென் மாவட்டங்களுக்கு உயிர் நீராக விளங்கும் வைகை ஆற்றின் நிலை இன்று பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. எப்படிக்காப்பாற்றப்போகிறோம்?

:வைகை நதி அழிவின் விளிம்பில் உள்ளதால் ஒரு கோடியே 20 லட்சம் மக்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் காட்டிய வைகை நதி, விழுந்து கிடப்பதன் காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.

தமிழக அளவில் மிகப்பெரிய நீர் ஆதார பரப்பினை கொண்ட வைகை நதியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கனமழையில் வைகை அணைக்கு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வரத்தை காண்பித்து விஸ்வரூபம் எடுத்தது. ஆண்டுக்கு 9 மாதங்கள் நீர் ஓடிய வைகை நதி, மனிதர்கள் செய்த அடுத்தடுத்த தவறுகளால் தன் வளத்தை இழந்து கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் ஐந்து மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் நிலை காணப்படுகிறது. ஆறு மாவட்ட மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

தேனி மாவட்டம், மேகமலையில் வருஷநாடு அருகே மூலவைகை என்ற இடத்தில் வைகை நதி உற்பத்தியாவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் வைகை நதியின் நீர் வரத்து பரப்பினை கேட்டால் தலை சுற்றி விடும். ஆமாம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் வனநிலங்களில் பெய்யும் மழைநீர் முழுவதும் வைகை அணைக்கே வந்து சேர்கிறது என்பது பலருக்கு புதிய விஷயமாக இருக்கும்.


அதாவது இந்த இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் வனநிலம் தேனி மாவட்ட மொத்த பரப்பில் 33 சதவீதம் ஆகும். இதெல்லாம் விட மிக, மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தேனி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 2868 சதுர கி.மீ., பரப்பில் எந்த இடத்தில் ஒரு சொட்டு மழை கிடைத்தாலும், அந்த நீர் வைகை அணை வழியாகவே வெளியேறும் வகையில் அப்போதைய பொறியாளர்கள் மிக துல்லியமாக கணக்கிட்டு மிக, மிக சரியான இடத்தை தேர்வு செய்து வைகை அணை கட்டி உள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர் வரத்து பரப்பு 777 சதுர கி.மீ., மட்டுமே. இதனை விட நான்கு மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது தேனி மாவட்டம். இதில் முல்லை பெரியாறு அணை நீர் வரத்து பரப்பும் வைகை அணைக்கான நீர் வரத்து பரப்பில் தான் சேரும். ஏனெனில் முல்லை பெரியாறும் தேனியில் வைகை நதியுடன் இணைந்து அந்த நீரும், வைகை அணைக்கு வந்தே வெளியேறுகிறது. அப்படி கணக்கிட்டால் வைகை நதியின் ஒட்டுமொத்த நீர் வரத்து பரப்பு ஆக வைகை அணையின் மொத்த நீர் ஆதார பரப்பளவு 3645 சதுர கி.மீ., ஆகும். யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால் வைகை அணை பராமரிப்பு பிரிவு பொதுப்பணித்துறை பொறியாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை போக்கி கொள்ளலாம். இவ்வளவு பெரிய நீர் பிடிப்பு ஆதார பரப்பு வேறு எந்த அணைக்காவது இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே.

முதலி்ல் தேனி மாவட்டத்திற்கு இயற்கை கொடுத்த வளம் என்ன என்பதை பார்ப்போம். அதன் பின்னர் அது அழிக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம். தற்போதைய நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பெரியாறு புலிகள் சரணாலயம் உலகின் தலைசிறந்த புலிகள் சரணாலயங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தேனி மாவட்ட சமூக ஆர்வலர் டாக்டர் பாஸ்கரன்

தேனி மாவட்டத்தை வனத்தை ஒட்டிய தொடராக கேரளாவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு 10க்கும் மேற்பட்ட வற்றாத ஜீவநதிகள் உற்பத்தியாகி கேரளாவை மட்டுமின்றி, தமிழகத்தில் முல்லை பெரியாறு என்ற பெயரில் நுழைந்து ஐந்து தென் மாவட்டங்களுக்கு சோறு போட்டு, ஆறு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஐந்து தென் மாவட்டங்களில் இன்று ஓரளவாவது நிலத்தடி நீர் இருப்பதற்கு முல்லை பெரியாறு தான் காரணம்.

அப்படியானால் வைகை நதி எதற்கும் பயனில்லையா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இயல்பாகவே எழுவது வழக்கம். வைகை நதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இறக்கத் தொடங்கி இன்று கடைசி கட்ட விளிம்பில் நிற்கிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் தான். ஆனாலும் இதுவே நிஜமும் கூட. இன்னும் நாம் தாமதித்தால் நம் கண்முன்னே ஒரு நதி இறப்பதை இந்த ஜென்மத்திலேயே பார்த்து விடலாம்.

வைகையின் சீற்றம்:

தேனி மாவட்டத்தில் வைகை நதி பிறக்கும் மேகமலை தேக்கடி புலிகள் சரணாலயத்தை விட பல மடங்கு மிகச்சிறந்த வனப்பகுதி. அதேபோல் கும்பக்கரை, போடி, கம்பம் மெட்டு, குமுளி, ஆண்டிபட்டி, உட்பட மாவட்டத்தில் எங்கு மழை பெய்தாலும் அந்த தண்ணீர் வைகை அணை வந்தே செல்லும் என்பதை முன்பே பார்த்தோம். கடந்த 1998 ம் ஆண்டு வைகையின் விஸ்வரூபத்தை கண்ட ஐந்து மாவட்ட மக்கள் அதிர்ந்தே போனார்கள்.

அப்போது வடகிழக்கு பருவமழை காலமான நவம்பரில் பெய்த கடும் மழையால் வைகை நதிக்கு வந்த வந்த நீரின் அளவு ஒரு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி. வைகை நதியின் இந்த சீற்றத்தை தேனி மக்கள் இன்னும் மறக்கவில்லை. வைகை நதி பொங்கி தேனி பங்களாமேடு வரை சுமார் 2 கி.மீ., துாரம் நகருக்குள் தண்ணீர் ஊடுறுவியது. குன்னுார் பாலம் மூழ்கி, பாலத்திற்கு மேல் ஆறு அடி உயரம் தண்ணீர் சென்றது.

அரசு ஆவணங்களில் இந்த உண்மை உள்ளது. தென்னக நதிகளில் காவிரியில் மட்டுமே இப்படி ஒரு வெள்ளத்தை பார்க்க முடியும். வைகை அந்த விஸ்வரூபத்தை அப்போது காட்டியது. அப்போதைய தேனி கலெக்டர், மாவட்ட எஸ்.பி., இருவரும் இணைந்து வைகை அணையை காப்பாற்ற வேறு வழியின்றி அத்தனை மதகுகளையும் திறந்து அணைக்கு வந்த மொத்த நீரான விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீரையும் அப்படியே வெளியேற்றினர்.

வைகை நதியின் அகலம் தாங்காமல் கரையோரம் இருந்த பல கிராமங்கள் மட்டுமின்றி மதுரை செல்லுார் பகுதி முழுக்க நீரில் மூழ்கி பல உயிர்கள் பலியாகின. ஆத்திரமடைந்த அப்போதைய மதுரை கலெக்டர் தேனி கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, ஒரு தகவல் கூட தராமல் இப்படி செய்து விட்டீர்களே, பல உயிர்கள் பலியாகி விட்டனவே அரசுக்கு என்ன பதில் சொல்வது’ என கேள்வி எழுப்ப, பதிலளித்த தேனி கலெக்டர், உங்களிடம் தகவல் சொல்லக்கூட எனக்கு நேரமில்லை.


தகவல் சொல்லும் காலஅவகாசம் கூட எனக்கு கிடைக்கவில்லை. நான் மட்டும் ஒரு சில விநாடிகள் தாமதித்து இருந்தால், வைகை அணை உடைந்து பல லட்சம் உயிர்கள் பலியாகியிருக்கும் அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். நானும், எஸ்.பி., ராஜேஷ்தாஸூம் உயிர் தப்பியதே எப்படி என்று எங்களுக்கே தெரியவில்லை’ என பதிலளித்தார். இப்படி காரசாரமாக உரையாடிய இந்த மூன்று அதிகாரிகளும் இன்னமும் அரசு பணியில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு இந்த முழு உண்மையும் தெரியும். இப்படி சீறி எழுந்த வைகை அதன் பின்னரே மெல்ல மடிய தொடங்கியது. ஆண்டுக்கு 9 மாதங்கள் ஓடி மக்களை மகிழ வைத்த வைகை, மெல்ல, மெல்ல குறைந்து 2017 ம் ஆண்டு 17 நாட்கள் ஓடியது. 2018 ம் ஆண்டு 7 நாட்கள் மட்டுமே வைகையில் தண்ணீர் வந்தது. 2019 ம் ஆண்டு இப்போது வரை ஒரு சொட்டு தண்ணீர் வரவில்லை. 2020, 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் சராசரியாக மூன்று மாதங்கள் நீர் வரத்து இருந்துள்ளது.

தேனி மாவட்ட வனவளம்: வருஷநாடு, மேகமலை, சுருளிமலை, கண்ணகி மலை என மிகப்பெரிய மலைத்தொடரும், போடி பகுதியில் குரங்கனி, போடி மெட்டு, தேவாரம், கம்பம், லோயர்கேம்ப் மலைத்தொடரும் கொண்டது தேனி மாவட்டம். உலகில் அழிந்து வரும் அபூர்வ உயிரினங்கள், தவிர இந்தியாவில் ஒவ்வொரு மலைப்பகுதிகளில் ஒவ்வொரு விதமாக காணப்படும் அத்தனை உயிரினங்களும் மேகமலையில் வசிப்பது ஆச்சரியத்தின் உண்மை.

எனவே இதனை பல்லுயிரினம் வாழும் காடு’ என வன உயிரின ஆர்வலர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். மேகமலை, போடி மலைத்தொடர் இரண்டிலும் புலிகள், யானைகள் உள்ளன. சிங்கவால் குரங்கு, சருகுமான், வரையாடு, இருவாச்சி பறவை, புள்ளிமான், மிளா, கரடி, சிறுத்தை, செந்நாய், நீர் நாய், சாம்பல் அணில், மலபார்அணில், ஜெயண்ட் அணில், கருமந்தி, அனுமன்மந்தி, காட்டுமாடு, சிங்கவால் குரங்கு, கேழையாடு, தேவாங்கு, பச்சை புறா, பச்சை கிளி, மைனா, ஆந்தை, குருவி, அக்கா குருவி, பறக்கும் அணில், பச்சை பாம்பு, மரப்பாம்பு, ராஜநாகம், அபூர்வ வகை பாம்புகள், பல ஆயிரம் வகை, பூச்சிகள், நுண்ணுயிரிகள், என வனவிலங்குளின் பட்டியல் நீள்கிறது.

மேகமலை வனத்தில் மட்டும் 11 புலிகளுக்கு மேல் இருக்கலாம் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. போடி மலையிலும் புலிகள் உள்ளன. இதன் கணக்குத் தெரியவில்லை. ஒரு புலி வாழ 100 சதுர கி.மீ., வனப்பரப்பு தேவை. மேகமலை, தேக்கடி புலிகள் சரணாலயம், சிவகிரி மலை என இந்த தொடர் நீண்டுகொண்டே செல்வதால் இப்படி கூடுதல் எண்ணிக்கை இருக்கலாம், இதில் போடி மலையில் இருக்கும் புலிகள் கணக்கில் சேரவில்லை.

அவ்வளவு வனவளம் உள்ளது என வனத்துறை வியந்து போய் விவரிக்கின்றனர். மரங்களை பார்த்தால் இன்னும் வியப்பாக இருக்கும், அகில், கோங்கு, தானி, கருங்காலி, தோதகத்தி, தடசு, வெக்காலி, மருதம், உத்திராட்சம், யூகலிப்டஸ், வேம்பு, வாகை, தேக்கு, வேங்கை, சந்தனம், மயில்கொன்றை, புலி, ஆல், அரசு, ஆவி, வெண்புரசு, கரும்புரசு, கொடிக்காப்புளி, நாவல், மா, நெல்லி, காட்டு வாழை என பல வியத்தகு மரங்கள், ஏராளமான சோலைக்காடுகள், புல்வெளிப்பகுதிகள் உள்ளன.


என்ன தான் பிரச்னை:

இவ்வளவு வனவளம் இருந்தும், வனவிலங்குகள் இருந்தும் மழையில்லாம் வைகை அழிவின் விளிம்பிற்கு செல்ல காரணம் என்ன என்பது மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேகமலையை பொறுத்தவரை மரங்களை வெட்டுதல், வனத்தை ஆக்கிரமித்தல், வனத்திற்குள் பாதை அமைத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், சட்ட விரோதமாக சுற்றுலா செல்லுதல், ஆடு, மாடுகளை மேய்த்தல், வனவிலங்குகளின் இருப்பிடத்தை மக்கள் வசிப்பிடமாக மாற்றுவது என பல சிக்கலான பிரச்னைகள் உள்ளன.

இதனை தீர்க்க வழியில்லையா என கேட்டால் வழி தெரியவில்லை என வனத்துறையினர் கை விரிக்கின்றனர். தற்போதைய நிலையில் மேகமலை ரேஞ்சில் மட்டும் மூன்று ரேஞ்சர்கள், 38 வனக்காவலர்கள் (வாட்சர்ஸ்), 40க்கும் மேற்பட்ட வனகாப்பாளர்கள் (கார்டுகள்) பற்றாக்குறை உள்ளது. இதனால் வனநிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களையும், வனக்குற்றவாளிகளையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு வனத்துறைக்கு திறன் இல்லை.

போடி மலையில் என்ன பிரச்னை:

போடி மலையில் வனத்திற்குள் அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக கோடை காலத்தில் இங்குள்ள மலைகளில் தீ பிடிக்காத நாளே இல்லை எனக்கூறலாம். இது குறித்து புகார் செய்து பொதுமக்களுக்கே அலுத்துப்போகும் அளவுக்கு தீ பிடிக்கும். தவிர இங்கு பல்வேறு வனக்குற்றங்கள் நடக்கிறது. இங்கும் பாதிக்கும் மேல் காலிப்பணியிடங்கள் இருப்பதால் குற்றங்களை தடுக்க முடியாமல் வேடிக்கை வனத்துறையால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. வனக்குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரம் வாய்ந்த சக்திகளின் பாதுகாப்பு கிடைப்பது தான் உச்சகட்ட கொடுமை.

இதனால் என்ன பிரச்னை:

குறிப்பாக வனம் என்றாலே மனித நடமாட்டம் இல்லாத பகுதி நோ மேன்ஸ் லேண்ட்’ என்பது அனைவரும் அறிந்த விஷயம். இப்படி அடர்ந்து வளர்ந்த வனத்திலும், புல்வெளிப்பரப்பிலும் உதியும் புற்கள், இலைகள் மிகப்பெரிய மெத்தை போல் உயர்ந்திருக்கும். மழை பெய்யும் போது இந்த மெத்தை பகுதி தண்ணீரை உள்வாங்கி வைத்துக் கொள்ளும். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை உள்வாங்கும்.

உள்வாங்கிய நீரில் 5 சதவீதத்திற்கு குறைவான நீர் மட்டுமே மரங்கள் வளரவும், விலங்குகளின் குடிநீருக்கும் போதுமானது. மீதம் உள்ள நீரை சிறிது சிறிதாக வெளியிடும். இப்படி பல்வேறு பகுதிகளிலும் வரும் நீர் முழுக்க பாறை இடுக்குகளை கடந்து சிறிய ஓடையாக மாறி நதியுடன் கலக்கும். வனத்திற்குள் இப்படி ஒரு அற்புதமான சூழல் இருந்தால் மட்டுமே நதியில் நீரோட்டம் ஆண்டு முழுவதும் இருக்கும். ஆனால் இப்படி ஒரு சூழல் இருந்தால் அப்பகுதிக்குள் மனிதர்கள் பிரவேசிக்கவே முடியாது.

எனவே துரதிஷ்டவமாக வன மாபியாக்கள்’ தங்களின் வசதிக்காக இப்படி உருவான நீர் உறிஞ்சி தேக்கி வைக்கும் இயற்கை படுகையினை’ முற்றிலுமாக அழித்து விட்டனர். தவிர இந்த படுகையின் கீழ் இருக்கும் மண் பொறுபொறு’என இருக்கும். இந்த மண் அடர்ந்து நிற்கும் வேர்களுக்குள் பிணைந்து நிற்பதால், தண்ணீரை அதிகம் குடிக்கும்.

இந்த மண் சரியாது. குடித்த தண்ணீரை மெல்ல மெல்ல வெளியேற்றும். இது தான் இயற்கையின் அற்புதம். வனக்குற்றவாளிகள்’ செய்த முதல் தவறு இந்த மண் வளத்தையும், அற்புதமான நீர் உறிஞ்சி தேக்கி வைக்கும் இயற்கை படுகையினையும் அழித்தது தான். இதனை வேடிக்கை பார்த்த வனத்துறையும் மிகப்பெரிய குற்றவாளி தான். இதனால் மழை பெய்யும் போது தண்ணீரை பிடித்து வைக்க வழியில்லை. அவ்வளவு வெள்ளமும் ஒரு நொடி கூட வனத்தில் தங்காமல் ஓடி சென்று விடுகிறது. இதனால் மழை நின்றதும் வெள்ளமும் நின்று விடுகிறது. இவ்வளவு வெள்ள நீரை நம்மால் சேமிக்கவே முடியாது.


தேனிக்குள் என்ன நிலை:

வனப்பரப்பினை விட பல மடங்கு அதிகமாக விளைநிலங்கள் உள்ளன. இங்கு முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வரட்டாறு, வராகநதி என பல ஆறுகள் ஓடுகின்றன. நுாற்றுக்கணக்கான சிற்றோடைகள் உள்ளன. 480 கண்மாய்கள் உள்ளன. பல லட்சம் போர்வெல்கள் உள்ளன. 33 ஆயிரத்து 860 கிணறுகள் உள்ளன. சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, வைகை அணை, மேகமலையில் ஐந்து அணைகள் உள்ளன.

இதில் தேங்கும் நீர் நமக்கு ஒரு போக சாகுபடிக்கு கூட போதாது. ஆனால் வனத்திற்குள் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் வனத்திற்குள் தங்க விடாமல் தடுத்தது, மரங்களை வெட்டியது, வனநிலங்களை ஆக்கிரமித்து தோட்டங்களாக்கியது, போன்ற எல்லா தவறுகளையும் செய்தது வனமாபியாக்கள்’ தான். இவர்களே இவ்வளவு வளம் நிறைந்த வைகையின் முதல் கொலையாளிகள்.

தணணீர் திருட்டு:

வைகை வளமாக இருக்கும் போதே நீர் திருட்டும் இருந்தது. பிரிக்கப்பட்டாத மதுரை மாவட்டத்தில் தேனி இணைந்திருந்த போது, அப்போதைய கலெக்டராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் (தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்) வைகை ஆற்றில் தண்ணீர் திருடிய மோட்டார்களை பறிமுதல் செய்த போது, விவசாயிகள் அவரை சுற்றி வளைத்து வாதிட்டனர். நாங்கள் தண்ணீரை திருடி விற்கவில்லை.

விவசாயம் செய்து, காய்றிகள், நெல், தானியங்களை உங்களுக்கு (மதுரைக்கு) தான் அனுப்புகிறோம். நீங்கள் நீர் திருட்டை தடுப்பதாக கூறி, எங்கள் மோட்டார்களை பறிமுதல் செய்வதை ஏற்க முடியாது என வாதிட்டனர். இதனால் நிலைமை சிக்கலாகவே அவர் அப்போது பின்வாங்கினார். அதன் பின்னர் ஒன்று நுாறாகி, இன்று பல ஆயிரமாகி உள்ளது.

இதனால் முறையான நீர் பகிர்மானம் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை உருவாகி விட்டது. இன்று வைகை அணையில் 20 அடி உயரம் மண் படிவுகள் உள்ளது. இந்த நிலையிலும் 300க்கும் மேற்பட்ட நீர் மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடி பல கி.மீ., சென்று விவசாயம் செய்கின்றனர். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

வனத்துறையினர் கூறியதாவது:

தானாக உருவானால் தான் வனம். நாம் உருவாக்கினால் அது தோட்டம். வனத்தை அழித்து விட்டு தோட்டத்தை உருவாக்க முயற்சிக்கும் விந்தை தற்போது நடப்பது வேதனையான விஷயம் தான்.வன ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். அனுமதியற்ற வகையில் முளைக்கும் தங்கும் விடுதிகளையும் தடுக்க வேண்டும்.

வனத்திற்குள் ரோடு அமைப்பது, கட்டுமான வசதிகள் செய்யகூடாது என அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். நாங்கள் தற்போது உருவாக்கும் தோட்டமும் ஒரு நாள் வனமாக மாறும். அந்த வனம் வைகை நதியை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பு பணி செய்கிறோம். எங்களை மீறி தவறுகள் இன்னமும் தொடர்வது வேதனையாகவே உள்ளது. ஆடும் காடும் ஒன்றாக வளராது’. ஏதாவது ஒன்று தான் வளரும்.

இதனை மக்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. வனத்தை அழிப்பது நம் எதிர்காலத்தையும், நம் சந்ததிகளின் எதிர்காலத்தையும் அழிப்பதற்கு சமம். எனவே மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தி மக்களிடம் இருந்து வனத்தை பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம். வனக்குற்றவாளிகளை தடுப்பதும், வனத்தில் சுற்றுலா என்ற பெயரில் டிரக்கிங் செல்வதும் முழுமையாக தடுக்கப்பட வேண்டிய விஷயம். நாங்கள் வனப்பகுதியில் தொலைத்த வளத்தை மீண்டும் உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.

தேனி மாவட்ட சமூக ஆர்வலர் டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் நமது உரிமைகளை பாதுகாக்க போராடிய நாம், வைகையை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்காமல் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம். வைகையால் பலன் பெறும் ஐந்து மாவட்ட மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் வைகையை மீட்க முடியும். நம்மிடம் எவ்வளவு வளம் உள்ளது. அத்தனையும் அழித்து விட்டு, நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி எடுத்து விட்டு, தற்போது மழையில்லை... மழையில்லை... என கதறுகிறோம்.

அரசும், மக்களும் இணைந்து மிகத்தெளிவுடன் செயல்பட்டால் மட்டுமே வைகை உயிர் வாழும். தற்போதைய இளைய தலைமுறையிடம் ஏற்பட்டுள்ள இயற்கை குறித்த விழிப்புணர்வு சற்று ஆறுதலாக உள்ளது. முல்லை பெரியாற்றில் நமது உரிமைகளை இழந்ததாலும், கேரள அரசியல்வாதிகளை சரியான முறையில் கையாள முடியாதாலும், முல்லை பெரியாற்றில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது.

வைகை அழிந்ததால் ஐந்து மாவட்டத்தின் அழிவு என்பதை உணர வேண்டும். தற்போது வகையில் நீர் இல்லாததால் ஐந்து மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் ஏற்பட்ட பொருளாதார இழப்பினை கணக்கிட்டால் லட்சம் கோடியை தாண்டி விடும். ஒரு சிலரின் சுயநலத்திற்காக 1.20 கோடி மக்களின் நீர் ஆதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழநது நிற்கிறோம். நம் சந்ததிகளை பாதுகாக்க நிச்சயம் நாம் கை கோர்க்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது நாம் வைகையை காப்பாற்றியே ஆக வேண்டும்.

தேக்கடி புலிகள் சரணாலயம் உருவான போது அதன் வனப்பரப்பு 777 சதுர கி.மீ., ஆக இருந்தது. தற்போது கேரள அரசு அதனை 1010 சதுர கி.மீ., ஆக விரிவாக்கம் செய்துள்ளது. அங்கு வனக்குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். ஆனால் முன்னாள் பிரதமர் நேருவால் ஏழைகளின் காஷ்மீர்’ எனபுகழப்பட்ட போடி மலை இப்போது எவ்வளவு மோசமாக உள்ளது.

நாம் வனத்தை மட்டுமல்ல, வன நிலங்களையும் இழந்து வருகிறோம். அரசு தான் இதனை தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். ஐந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அத்தனை பேரும் இணைந்து வைகை நதி மீட்பு இயக்கம் தொடங்கி அரசுக்கு தீவிர அழுத்தம் தர வேண்டும்.

வைகை அணையினை எவ்வளவு துல்லியமாக இடம் தேர்வு செய்து கட்டி உள்ளனர். ஒரு மாவட்டத்தின் முழு பரப்பிலும் பெய்யும் அவ்வளவு நீரும் வைகையினை தொட்டே வெளியேறும் நிலை என்பது எவ்வளவு வியப்புக்குரிய விஷயம். நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய பொறுப்பில் பாதி கூட நாம் காட்டவில்லை. நம் இளைய தலைமுறையினை பாதுகாக்க தேனி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாத்தே ஆக வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தாமதம் இன்றி தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!