தேனியில் கொட்டி தீர்த்த மழை; வைகையில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தேனியில் கொட்டி தீர்த்த மழை;   வைகையில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறப்பு (பைல் படம்)

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை ஆற்றில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தின், நேற்று இரவு தொடங்கிய பலத்த மழை அதிகாலை வரை வெளுத்துக்கட்டியது. தேனி வீரபாண்டியில் 128 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 80.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 64 மி.மீ., உத்தமபாளையத்தில் 93 மி.மீ., போடியில் 98.2 மி.மீ., வைகை அணையில் 28 மி.மீ., பெரியாறு அணையில் 28.8 மி.மீ., தேக்கடியில் 21.6 மி.மீ., என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவானது. இதில் மேகமலை வனப்பகுதியில் பெய்த மழை கணக்கிடப்படவில்லை. மேகமலை வனப்பகுதியில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இதனால், வைகை ஆற்றில் நள்ளிரவே வெள்ளப்பெருக்கு கடுமையாக அதிகரித்தது. கொட்டகுடி ஆறு, முல்லை பெரியாறு, வைகை ஆறு மூன்றும் ஒன்றாக கலந்து வைகை அணைக்கு செல்வதால் நீர் வரத்து விநாடிக்கு, 7 ஆயிரம் கனஅடியை எட்டியது. நேரம் ஆக, ஆக இதன் அளவு அதிகரிக்கும் என்பதால் அதிகாலையிலேயே (சுமார் 3 மணிக்கு) வைகை அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று காலை, 7 மணிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையில் நீர் மட்டம் 70.11 அடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் 142 கனஅடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் தமிழகம் மற்றும் கேரள பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி என அத்தனை அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்னும் 5 நாள் மழை தொடரும் என்பதால் மக்கள் நீர், நிலைகள் இருக்கும் பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story