அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வருகிறதா?!?

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வருகிறதா?!?
X

பைல் படம்

உலக நிகழ்வுகளில் இந்தியா எடுத்து வரும் நிலைப்பாடு காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சரிந்து வரக்கூடிய நிலை உருவாகி விட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவின் ஆயுத வளர்ச்சி அமெரிக்காவை பின் தள்ளிவிட்டது. ஆனால் அமெரிக்கா எடுத்த சாதுரியமான முடிவுகள் அந்நாட்டை பொருளாதார சக்தியாகவும், படைபல சக்தியாகவும் பெருக்கியது. பொருளாதாரத்தில் தன்னை திடப்படுத்திக் கொள்ளாததால் USSR உடைந்து 1991 இந்த பனிப்போர் முடிவுக்கு வந்து அமெரிக்கா உலகின் வல்லரசாகியது.

இந்த பனிப்போரில் அமெரிக்கா எடுத்த சில சாதுர்யமான முடிவுகள் அதன் வளர்ச்சியை இரு முனைகளிலும் தக்கவைத்துக் கொண்டது. ரஷ்யர்களின் அறிவுத்திறமைக்கு போட்டியாக தனது குடியுரிமை சட்டத்தை திரித்து, அமெரிக்காவை Land of Opportunity என்றாக்கி உலகில் இருக்கும் சிறந்த அறிவாளிகளை தன்னுடையது ஆக்கிகொண்டது.

தனது பொருளாதாரத்தின் மிக முக்கிய சக்தியாக தன்னை நிறுத்திக்கொள்ள அது பயன்படுத்திய ஆயுதம் டாலர். உலக கரன்ஸியாக மாற்றி, உலக வீழ்ச்சியின் போதெல்லாம் டாலர் மதிப்பை உயர்த்திக் கொண்டது.ஜனநாயகம் என்று பேசும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் எல்லாம் சர்வாதிகாரிகளாக இருப்பதன் மூலம் தனது தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொண்டது. அதை எதிர்த்தவர்களை அழித்தது. உலகில் இருக்கும் கனிம வளங்களை கபளீகரம் செய்து தனது தேவையை பூர்த்தி செய்து கொண்டது.

தனக்கு போட்டியாக வரலாம் என்று சந்தேகப்படும் நாடுகளை கட்டம் கட்டி, ஐநா சபையை தனதாக்கி பொருளாதாரத்தடை என்பது போன்ற கட்டுப்பாடுகள் மூலமும், ஊழல் தலைவர்களை பாதுகாப்பதன் மூலம் தனது காரியங்களை சாதித்து கொண்டது.நீண்டகால நோக்கில் மற்ற நாடுகளை தன் வசப்படுத்தி வைக்க கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு காசை வாரி இறைத்து மதமாற்றம் மூலம், மக்களை தன்வசமாக்கியது. அதற்கு அனுமதிக்காத நாடுகளை மத சுதந்திரம் இல்லை என்று கட்டம் கட்டியது. தனக்கு பிரச்சினை தரும் அரசுகளை, மீடியா மூலம் மனித உரிமை முதல் மத சுதந்திரம் வரை பேசி கட்டுப்படுத்தியது.

தேவைப்பட்டால் எத்னிக் பிரச்சினைகளை தூண்டி, அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை செய்து, தளவாடங்கள் கொடுத்து உள்நாட்டு போரின்மூலம் அரசுகளை பணிய வைத்தது. அல்லது தனது கைப்பாவையை ஆட்சியில் அமர்த்தியது. அண்டை நாடுகளுக்குள் போரை திணித்து அதில் ஆதாயம் பார்த்தது.இவை எல்லம் இருந்தாலும், நேட்டோ என்று தனது நட்பு நாடுகளை கொண்டு தனது நாட்டாமையை உறுதி செய்துகொண்டது. அதே சமயம் அவர்கள் வளர்ச்சியையும் சாதுரியமாக கட்டுப்படுத்தி தனக்கு கீழேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டது.

இப்படி எல்லா வகையிலும் தன்னை நிலை நிறுத்தியதால், அமெரிக்காவிற்கு எதிராக யார் காய் நகர்த்தினாலும் அந்த அரசு வீழ்ந்தப்படும். அதில் அவர்கள் எதிர்கால போட்டியாக பார்த்த மூன்று நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா. சீனாவை தனது உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்யும் தளமாக்கி, குறைந்த விலைக்கு பொருளையும், தேவையையும் பூர்த்தி செய்து கொண்டது. இந்தியாவை ஊழல் ஆட்சியாளர்கள், தீவிரவாதம், மதவாதம், மனித உரிமை என்று பல விஷயங்களில் மீடியா முதல், விசுவாசிகள் வரை பலரை பயன்படுத்தி கட்டுப்படுத்தி வந்தது. ரஷ்யாவை தொடர்ந்து நசுக்கும் வேலை நடந்தது.

இந்த முயற்சியில் அது எல்லை மீறி உக்ரைனை நேட்டோவில் சேர்க்க எதிர்பாராமல் ரஷ்யா போரில் குதித்தது. அதை வழக்கம்போல சாதகமாக்க அதன் மீது பொருளாதார தடையை விதிக்க, ஐரோப்பிய நாடுகளின் ரஷ்ய எரிபொருள் சார்பு நிலையால் அதை முழுவதுமாக செய்ய முடியாமல் போக, பின்வாங்க வேண்டிய சூழல். ஆனால் ஏற்கனவே கொரானாவால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகள், பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்திருந்தது. அவற்றால் அமெரிக்காவை தவிர்க்கவும் முடியாமல், ரஷ்யாவை முழுதும் எதிர்க்கவும் முடியாமல் தவித்தது.

அந்த நேரத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணியாத இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி அமெரிக்க பூனைக்கு மணி கட்டியது. வழக்கமாக இது போன்ற சூழலில் மனித உரிமை மீறல், மத உரிமை பறிப்பு என்று அமெரிக்கா இந்தியாவை பணிய வைக்கும். தனது செனட் மெம்பர்களை இந்தியாவிற்கு அனுப்பி அதை கண்காணிப்போம் என்று சொல்லி மிரட்டும். சென்ற முறையும் அதை செய்ய, அது பற்றி கேட்ட அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு, அமெரிக்காவில் கூட மனித உரிமை மீறல் இருக்கிறது, எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அனுப்பி விசாரிப்போம் என்று வாஷிங்டன்னில் ஜெய்சங்கர் பேச ஆடிப்போனது அமெரிக்கா.

ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் நலனுக்கு தேவையானது, அவர்கள் மோசமான காலங்களில் எங்கள் உடன் இருந்த நட்பு நாடு, அதை மற்ற நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கைவிட மாட்டோம் என்று வெளிப்படையாக சொன்னது. பொருளாதார தடை விதிப்போம் என்று கூட நேரடியாக மிரட்ட முடியாத சூழல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாற்பது வருடங்களில் முதல் முறையாக வந்துவிட்டது.

இந்தியாவை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாமல் போக அது பெரும் தலைவலியை நாட்டாமைக்கு கொடுத்தது. அந்த எதிர்ப்பில் சீனா, சவூதி, துருக்கி, இத்தாலி என்று நீண்ட பட்டியல் இப்போது அல்ஜீரியா, நெதர்லாந்து வரை பரவிவிட்டது. இதை சற்றும் எதிர்பாராத நிலையில், நேட்டோ நாடுகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் BRICS நாடுகளில் சேர 12 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. நேட்டோ நாடுகளுக்குள் ஏற்கெனவே விரிசல் விழுந்து விட்ட நிலையில் இது பலமாவதை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் இது போன்ற அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தில் இருந்து காத்துக்கொள்ள அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. அதனால் அதிகமாக மிரட்டினால் ரஷ்ய-இந்திய-சீன கூட்டு அணியாக மாறிவிட்டால் அதன் நாட்டாமை அதோகதியாகி விடும்.

இந்த சூழலில் அமெரிக்காவின் நான்கு தூண்கள், ராணுவ வலிமை, பொருளாதாரம், நட்பு நாடுகள், விசுவாச அடிமைகள். அதை இணைக்கும் பாலம் என்பது பொருளாதார, ராணுவ வலிமை. இந்த நான்கில் மூன்று கவலைக்கிடமான சூழல்.

அமெரிக்க பொருளாதாரத்தின் ஆணிவேர் டாலர். உலகத்தின் பொது கரன்ஸியாக இருந்ததால், அதை வைத்துக்கொண்டு செயற்கையாக மோசமான காலங்களில் டிமாண்ட் கிரியேட் செய்து, நோட்டீஸ் அடிப்பது போல இலவசமாக பிரிண்ட் செய்து உலகத்தின் உழைப்பையும், இரத்தத்தையும் உறிஞ்சியது. இன்று மேற்சொன்ன நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை தனது ரிசர்வ ஆகவும், டாலரை தவிர்த்து தங்களது நாணயங்களை நாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை யை தொடங்கிவிட்டது. அதனால் அது நினைத்த அளவிற்கு டாலர் டிமாண்ட் கிரியேட் செய்ய முடியவில்லை.

அமெரிக்காவின் முக்கிய நிதி ஆதாரம் என்பது கடன். உலக நாடுகள் அமெரிக்காவிற்கு Federal Bond, Investment என்று எல்லா நாடுகளின் லாபமும் அமெரிக்காவில் போட்டி போட்டு முதலீடு செய்யப்பட்டது. இன்று அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் முதலீடுகள் வராததால் குறைந்தது மட்டுமல்ல, ஏற்கனவே செய்த முதலீடுகள் வெளியேறுகிறது. இப்போது கொடுத்த கடனை திருப்பி கேட்கும் நாடுகளுக்கு தர முடியாத சூழல் விரைவில் வரும். அப்போது தங்கள் முதலீடுகளை காத்துக்கொள்ள திவாலாக்கப் போகும் பைனான்ஸ் கம்பெனி வாசலில் கொடிபிடிப்பது போல நாடுகளும் செய்யும். அதற்கு இருக்கிற தலைக்கு மேலே போன கடன் சுமையை எப்படி அடைக்க முடியும்?

இந்த நிலையில் அதன் கடன் 32 Trillion $ என்பது அதன் அதிக பட்ச லிமிட், அதில் தற்போதைய கடன் என்பது 31.6 Trillion $, மேலும் கடன் வாங்க வேண்டுமெனில் அதை உயர்த்த வேண்டுமெனில் அடுத்த இலக்காக அதை 35 Trillion ஆக உயர்த்த வேண்டிய கட்டாயம். அதற்கு செனட் அப்ரூவல் தேவை, ஆனால் செனட் பலம் ரிபப்ளிகன் கைக்கு மாறுகிறது என்பதால் செய்வது கஷ்டம். ஆனாலும் அதை செய்து விடுவார்கள். இருந்தாலும் அங்கே முதலீடு செய்ய, கடன் கொடுக்க நாடுகள் முன்வரும் நிலையில் பல நாடுகள் இல்லை.

பணம் இருக்கும் சில நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரணியில் நிற்கிறது. அதனால் அமெரிக்காவின் அடுத்த பணவரவுக்கான வழி, ஆயுத விற்பனை. கொரானாவிற்கு பின்பு பொருளாதாரம் சீரழிந்த நிலையில், அதை வாங்கும் நிலையில் உக்ரைனை தவிர எந்த நாடுகளும் இல்லை. உக்ரைன் எல்லாவற்றையும் கடனாக வாங்கி கோதுமை, சூரிய காந்தி எண்ணெய் என்று அதன் உணவு தேவையை பூர்த்தி செய்யலாம் என்றால், கருங்கடலை ரஷ்ய போர்க்கப்பல்கள் அனுமதிப்பதில்லை. எனவே கொடுக்கும் உதவிகள், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட, அந்த நாடே பேங்க்ரப்ட் ஆகும் நிலையில், போரை தூண்டிய அமெரிக்கா, கொடுக்கவும் முடியவில்லை, நிறுத்தவும் முடியவில்லை.

அதனால் சமீபத்தில் உக்ரைன் சென்ற அமெரிக்காவின் உயர்மட்ட குழு ரஷ்யாவுடன் சமாதானமாக போகச்சொல்லி அறிவுருத்துகிறது. அதனால்தான் மோடி போரை நிறுத்துங்கள் என்று சொன்னதை செய்தியாக்கி, அதற்கு மதிப்பளிக்க மறைமுகமாக ரஷ்யாவை வற்புறுத்தினார்கள். அதுவும் நடக்காத நிலையில் அதாவது, உக்ரனை கைவிடப்போகிறது என்பதுதான் சொல்லாமல் சொன்ன விஷயம். ஆனால் ரஷ்யாவோ இந்த தாக்குதலை குளிர்காலம் முடியும் வரையில் தொடரும். அப்போது கேஸ் இல்லாமல் குளிரில் ஐரோப்பிய யூனியனில் வாழும் மக்கள், வீதிக்கு வந்து போராடும் நிலை தொடங்கிவிட்டது. அப்படியெனில் அங்கே அடுத்த ஆட்சி மாற்றம் என்பது இத்தாலியில் நடந்த வலதுசாரி ஆட்சி போல வந்தால் அவை அமெரிக்காவிற்கு எதிராகத்தான் இருக்கும். அப்போது நேட்டோ உடைவது தவிர்க்க முடியாதது.

அமெரிக்காவின் அடுத்த முக்கிய வருமானம் Pharmaceutical மூலம் வருவது. கொரானவில் தடுப்பூசி மூலம் உலகத்தையே உறுஞ்சி விடலாம் என்று நினைத்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு, இந்தியா சொந்த தடுப்பூசி தயாரித்து நூற்றுக்கணக்கான பில்லியன்களை சேமித்தது இல்லாமல், அதை 70 நாடுகளுக்கு கொடுத்தது. அதில் 48 ஏழை நாடுகளுக்கு இலவசம் வேறு. அதனால் அந்த வருமானமும் கோவிந்தா.

அடுத்ததாக கச்சா எண்ணெயை தன் கட்டுப்பாட்டில் வைத்து உலகம் முழுவதையும் உறிஞ்சிய அமெரிக்காவிற்கு, ஒன்று அதன் மூலம் நேரடியாக வரும் வருமானம், இன்னொன்று டாலர் டிமாண்ட் கிரியேட் செய்து அதன் மூலம் பெரும் இலவச டாலர் பிரிண்ட் செய்தது. இப்போது அதன் பாட்டுக்கு OPEC நாடுகள் நடனம் ஆடாமல் போனது மட்டுமல்ல, அமெரிக்காவின் ரஷ்யா எண்ணெயை கட்டுப்படுத்த உச்சபட்ச விலை எல்லாம் காற்றில் பறக்கும் பரிதாப நிலைதான் உள்ளது. அப்படி மிகவும் குறைத்தாலும் அந்த விலை நிர்ணயத்தை இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் ஏற்க வாய்ப்பில்லை.

இந்த சூழலில் தைவான் விஷயத்தில் சீனா தாக்கினால் நாங்கள் களத்தில் நேரடியாக இறங்குவோம் என்பதை ஏற்கனவே பைடன் அரசு தெளிவுபடுத்தி உள்ளது. சீனாவோ உக்ரைன விஷயத்தில் அமெரிக்கா அடிபட்ட இந்த சூழலை விட்டால் நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்று பலமாக நம்புகிறது. அதனால் தைவானை சீனா தாக்கினால், அமெரிக்கா நேராக போரில் குதித்தாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே உக்ரைனை கைவிட்ட நிலையில், இங்கும் அதை செய்தால் இனிமேல் அமெரிக்காவை பாகிஸ்தான் கூட நம்பாது. போரில் ஈடுபட்டால், ஏற்கனவே தொங்கி கொண்டிருக்கும் அதன் பொருளாதார சூழல் , மொத்தமாக படுத்துவிடும்.

இங்கே அமெரிக்கா நினைப்பது, சீனா போரில் குதித்தால் இந்தியா மேற்கில் இருந்து தாக்கும் என்று எதிர்பர்க்கிறது. அல்லது குறைந்த பட்சம் தன் படைகளை குவித்தாலே சீனா தன் படைகளை கிழக்கில் நகர்த்தி தைவானுக்காக போராடாது என்பது அதன் எதிர்பர்ப்பு. அதனால்தான் இந்தியா என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழல். அது மட்டுமல்ல, லடாக் பிரச்சினையில் இந்தியா செய்தது சரி, போர் என்று வந்தால் இந்தியாவை ஆதரிப்போம் என்று சொல்லி இந்தியாவை சீனாவுடனான ஒரு போருக்கு உசுப்பேற்றியது. அப்படி இரு நாடுகளும் சண்டை போட்டுக்கொண்டு யார் அழிந்தாலும், லாபம் அமெரிக்காவிற்கு என்பதுதான் கணக்கு. இதை நன்கு உணர்ந்த இந்தியா, சீனாவுடன் போரை தொடங்கவில்லை.

அப்படி ஏதாவது போர் வந்து, ஆயுத வியாபாரம் நடந்து தன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக்கொள்ள பார்த்த அமெரிக்காவிற்கு இன்று வாழ்வா, சாவா என்ற நிலையை நோக்கி போகிறது. அங்கே பொருளாதரம் நசுங்கி, பல வேலை இழப்புகள அதன் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது. கலிபோர்னியாவில் சிலிகான் வேலியில் மட்டும் 50,000 க்கு மேற்பட்ட வேலை இழப்புகள்.

கச்சா எண்ணெய், கோதுமை முதல் உணவு பொருட்கள் தட்டுப்பாடு என்ற நிலையில், தனது டாலர் மதிப்பிழப்பு என்பது அதன் இறக்குமதியை மேலும் பலவீனப்படுத்தும். அதுவும் டாலருக்கு பொருட்களை விற்க நாடுகள் மறுக்கின்ற சூழல்கள் கூட ஏற்படும். ஏனென்றால் மற்ற நாடுகளின் கரன்சியை போல, அதை தங்கமாக திருப்பி செலுத்த அதனிடம் தங்கம் இருப்பு இல்லை என்பதால்தான், Dedolarization உலகம் முழுவதும் நடக்கிறது. அப்படி, $ மதிப்பிழந்தால் அமெரிக்காவில் எரிபொருள், உணவு தட்டுப்பாடு என்று எல்லாம் தலைதூக்கும். விலைவாசிகள் கன்னாபின்னாவென ஏறி, அரசு கவிழும் சூழல் வந்தால் அதற்கு வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் கடைசி ஆயுதம் மூன்றாம் உலகப்போர்தான்.

ஆனால் யாரிடம் போரிடுவது? ரஷ்யாவிடம் நேரடியாக மோத முடியாது, சீனாவிடம் மோதலாம். ஆனால் ரஷ்யா அதனுடன் சேர்ந்து கொண்டால் அதுவும் பிரச்சினை. இந்தியா துணைக்கு வருமா என்றால் அமெரிக்காவின் கபட நாடகத்தை நம்பி அதை செய்யாது. அடிச்சுக்க்குங்க, யார் போனாலும் எனக்கு லாபம்தான் என்று இந்தியா நிற்கவே வாய்ப்புகள் உள்ளது. இன்றைய சூழலில், ரஷ்யா, சீனா, இந்தியா என்ற மூன்று நாடுகளில் குறைந்த பட்சம் இரண்டு நாடுகள் வீழ்ந்தால் மட்டுமே அமெரிக்கா வாழும். இல்லாவிட்டால் வீழும்.

அப்படியெனில் மாற்றாக சீனாவில் இருக்கும் தொழில்களை வெளியேற்றுவதன் மூலம் அதை நசுக்கலாம். ஆனால் அங்கிருந்து வெளியேறும் தொழில்கள் இந்தியாவுக்கு அல்லவா போகிறது. அங்கே, மோடியை இந்தியாவில் உள் நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் ஸ்திர தன்மையை குழைத்து குளிர் காயலாம், ஆனாலும் அதுவரை தனது பொருளாதாரம் தாங்க வேண்டுமல்லவா? முன்னே போனால் கடிக்குது, பின்னால் வந்தால் உதைக்குது! மிகவும் மோசமான காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil