கண்ணகி கோயில் திறக்க வலியுறுத்தி அறக்கட்டளை நிர்வாகம் கலெக்டரிடம் மனு
கண்ணகி கோயில் தமிழக- கேரள எல்லையோரம் தமிழக வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. ஆனால் கோயிலுக்கு செல்லும் பாதை கேரள வனப்பகுதிக்குள் உள்ளது. தவிர கண்ணகியை கற்பு தெய்வமாக, சரித்திர நாயகியாக தமிழர்கள் கொண்டாடுவதை போல், கேரள மக்கள் கண்ணகியை காளிதேவியாக கொண்டாடுகின்றனர்.
கண்ணகி சிலையும், காளியின் சிலையும் ஒரே கோயில் வளாகத்திற்குள் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமி அன்று கண்ணகி கோயில் திருவிழா கொண்டாடப்படும் போது, கேரள மக்களும் காளிதேவியை வணங்க வருவார்கள். இதனால் விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வனத்துறை, தேனி மாவட்ட போலீஸ்துறையும், அதேபோல் கேரள மாவட்ட நிர்வாகம், கேரள வனத்துறை, கேரள போலீஸ் நிர்வாகம் இணைந்து செய்வார்கள்.
திருவிழாவிற்கு முன்னரே இந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தி விழா ஏற்பாடுகளை செய்வார்கள். தமிழகத்தில் கண்ணகி அறக்கட்டளை, கண்ணகி பக்தர்கள் குழுவினர் அன்னதானம், தண்ணீர் தானம் வழங்குவார்கள். அதேபோல் கேரளாவில் பக்தர்கள் சார்பில் அன்னதானம், தண்ணீர் தானம் வழங்குவார்கள். இருப்பினும் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் தமிழர்களும், 30 சதவீதம் கேரள மக்களும் மட்டுமே இருப்பார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கண்ணகி கோயில் விழா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு கேரளாவில் கொரோனா தொற்று காலத்திலும் சபரிமலை ஐயப்பன்கோயில் விழா கொண்டாடப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வரும் சித்திரா பவுர்ணமியான ஏப்., 16ம் தேதி அன்று கண்ணகி கோயில் விழா நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக கோயில் மூடிக்கிடப்பதால், கோயில் வளாகம் புற்கள் வளர்ந்து புதர்மண்டிக்காணப்படும். எனவே கோயிலை சீரமைக்க அதற்கு முன்னதாக கண்ணகி கோயில் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்க வேண்டும். விழா ஏற்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன், இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கண்ணகி கோயில் அறக்கட்டளை குழுவினர் தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu