பாதுகாப்பற்ற முறையில் மணல் அகற்றும் துப்புரவு பணியாளர்கள்..!
சாலை மூடப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம் (கோப்பு படம்)
திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை, மதுரை- கோட்டயம் தேசிய நெடுஞ்சாலை இரண்டும் தேனியை கடந்து செல்கிறது. இரண்டு சாலைகளின் ஓரங்களிலும், மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சவரின் இரு பக்கங்களிலும் மணல் படிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இந்த மணல் படிவுகளால் வாகனங்கள் குறிப்பாக டூ வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சாலைகளின் ஓரங்களில் கிடக்கும் மணல் படிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றுகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த மணல் படிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் இந்த நேரத்தில் தான் நீண்ட தொலைவுகள் பயணிக்கும் ஆம்னி பஸ்கள், லாரிகள், இதர வாகனங்கள் அதிகளவில் நகருக்குள் நுழைகின்றன. இதனால் இதனை ஓட்டி வரும் டிரைவர்கள் துாக்க கலக்கத்துடன் இருப்பார்கள்.
எனவே நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளில் இந்த காலை நேரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என ரோடு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், இந்த அறிவுறுத்தலை மீறி தேனி நகராட்சி பணியாளர்கள் காலை நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் ரோட்டினை கூட்டி மணல் அள்ளும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களது கவனம் எல்லாம் மணல் அகற்றுவதில் தான் இருக்கிறது. இந்த நேரத்திலும் இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாதாரண காக்கி உடைகளை அணிகின்றனர்.
இவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை வரும் வாகனங்களுக்கு அறிவிக்கும் பலகைகள் வைக்கப்படுவதில்லை. இவர்களுக்கும் ஒளிரும் பட்டைகள் பொறுத்திய ஆடைகள் வழங்கப்படுவதில்லை. தவிர நகராட்சி சுகாதார ஆய்வாளர்களோ, போக்குவரத்து போலீசாரோ இவர்கள் பணிபுரியும் இடத்தில் நின்று அதிக வேகத்துடன் வரும் வாகனங்களை கட்டுப்படுத்துவதும் இல்லை.
மொத்தத்தில் துப்புரவு பணியாளர்கள் தானே என்ற நினைப்பில் மற்ற அதிகாரிகள் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு சூழலை உருவாக்கிக் கொடுத்து இது போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu