பாேலீசாருக்கு சம்பளம் பிடித்தம் இல்லாத வார விடுப்பு: எஸ்.பி.,க்கள் காேரிக்கை

பைல் படம்.
தேனி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை கட்டாய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விடுப்பு எடுக்கும் போது ஈ.டி.ஆர்.,ஐ கட் செய்யக்கூடாது என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொறுப்பேற்றதும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை விடுப்பு வழங்கி உத்தரவிட்டார். ஆனால் இந்த விடுப்பு எடுக்கும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை ஈ.டி.ஆர்., 500 ரூபாய் கட் செய்யப்பட்டது. மாதம் ஐந்து வாரம் விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் 2500 ரூபாய் கட் செய்யப்படுகிறது.
இதனால் போலீசார் பலரும் விடுப்பு எடுக்க தயக்கம் காட்டினர். தவிர தாங்கள் பிற அரசுத்துறைகளை விட தினமும் பல மணி நேரம் அதிகமாக பணிபுரிவதால் ஈ.டி.ஆர்.,ஐ கட் செய்யாமல் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் ஈ.டி.ஆர்., ஐ கட் செய்யாமல் போலீசாருக்கு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த பரிந்துரை அரசுக்கு வந்துள்ளதால், நிச்சயம் விரைவில் அரசு சாதகமான முடிவு எடுக்கும். அதுவரை போலீசாருக்கு கட்டாய வார விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தினமும் யார், யாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது என்ற விவரம் மூன்று நாட்களுக்கு முன்னரே எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுப்பு வழங்கியே ஆக வேண்டும் என்ற திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் போலீசார் தன் குடும்பத்துடன் ஒரு நாள் முழுக்க செலவிட முடியும். போலீஸ் குடும்பங்களில் புரிதல்கள், அன்பு பரிமாற்றங்கள் அதிகரித்து பிரச்னைகள் குறையும். போலீசாருக்கும் மனஅழுத்தம் குறைந்து நல்ல முறையில் வாரம் முழுக்க பணி செய்வார்கள் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu