சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி : தேனியில் வாரம் 2 நாள் விடுமுறை..!
ரெடிமேட் துணிகள் தைக்கும் நிலையம் (கோப்பு படம்)
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், சமச்சீரின்மை காரணமாக மிகவும் பரபரப்பாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் ரெடிமேட் நிறுவனங்களுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை விடும் அளவுக்கு வியாபாரத்தில் மந்தப்போக்கு நிலவுவதாக ரெடிமேட் ஆடை தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமான ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கிறது. அடுத்த 14 நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முழுவதும் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கும். ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் துணிகள் கேட்டு ஆர்டர்கள் குவியும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை நேர்மாறாக உள்ளது.
இது குறித்து ரெடிமேட் ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: எங்களுக்கு தற்போது சீசன் நேரம். ஆனால் பெரிய அளவில் ஆர்டர்கள் எங்கிருந்தும் வரவில்லை. நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சியை பெரிய நிறுவனங்களே கைப்பற்றி உள்ளன. பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
ஆனால் சமநிலை வளர்ச்சி இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. இதனால் சிறிய, நடுத்தர அளவிலான ஜவுளிக்கடைகளில் விற்பனை இல்லாததால், எங்களுக்கு கொடுக்கும் ஆர்டர்களை குறைத்து விட்டனர்.
இதனால் விடுமுறை இன்றி பணி செய்ய வேண்டிய திருவிழாக்காலமான தற்போதைய டிசம்பர் மாதத்தில் வாரம் இரண்டு நாள் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலை காணப்படுகிறது. ஓரிரு நிறுவனங்களை தவிர பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை விட்டு வருகின்றனர்.
சம்பளத்துடன் வாரம் 2 நாள் விடுமுறை கிடைத்தால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் வாரந்தோறும் இரண்டு நாள் சம்பளம் இன்றி தான் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu