ஒரு புறம் வேலையில்லா திண்டாட்டம்... மறுபுறம் பணியாளர்கள் பற்றாக்குறை....

ஒரு புறம் வேலையில்லா திண்டாட்டம்... மறுபுறம் பணியாளர்கள் பற்றாக்குறை....
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் ஒரு புறம் வேலையில்லா திண்டாட்டம், மறுபுறம் பணியாளர்கள் பற்றாக்குறை என்ற ஒரு விநோதமான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் எட்டரை கோடிப்பேர் வாழ்கின்றனர். இதில் ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 7 லட்சம் பேர் முதல் அதிகபட்சம் 18 லட்சம் பேர் வரை எப்போதும் எந்த வேலையும் செய்வதில்லை. அந்த கணக்குப்படி தமிழகத்தில் சராசரியாக 2.5 கோடிப்பேர் எந்த வேலையும் இன்றி உள்ளனர். இவர்கள் குடும்பத்தலைவியாகவோ, அல்லது திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்ணாகவோ, அல்லது மணம் முடித்த பெண்ணாகவோ வீட்டில் இருப்பார்கள். பல வீடுகளில் ஆண்களும் இந்த கேட்டகிரியில் உள்ளனர். வசதியான குடும்பத்தை சேர்ந்த நபர்களாகவோ, அல்லது பணம் இருக்கும் காரணத்தினாலோ, அல்லது வேலை செய்ய முடியாத காரணத்தாலோ, வயதான காரணத்தினாலோ பல லட்சம் பேர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இன்றி உள்ளனர் என்ற புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்கள் எந்த வேலையும் தேடுவதில்லை. வேலை கிடைத்தாலும் செல்வதில்லை. தேனி மாவட்டத்தில் மட்டும் எந்த வேலையும் இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது என்ற புள்ளிவிவரம் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது (ஊரக வளர்ச்சி முகமை எடுத்த கணக்குப்படி) .

இந்த கணக்கினை கழித்துப்பார்த்தால், தமிழகத்தில் மட்டும் வேலை செய்ய தகுதியானவர்கள் 6 கோடிப்பேர் உள்ளனர். இந்த ஆறு கோடிப் பேரில் ஒரு கோடிப்பேர் வேலை செய்ய நேரம் இல்லாத அளவுக்கு பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்கின்றனர். நேரம் இன்றி தவிக்கின்றனர். ஒரு கோடிப்பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் இன்று தமிழகத்தில் அனைத்து வகைகளிலும் உடனடியாக ஒரு கோடிப்பேருக்கு வேலை வழங்க பல்வேறு வணிக, தொழில், மருத்துவ, வியாபார நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. எந்த ஒரு நிறுவனமும் போதிய பணியாளர்களுடன் இயங்கவில்லை. ஏதாவது ஒரு வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தான் தவிக்கின்றன. அதேபோல் ஒரு கோடிப்பேர் எந்த வேலையும் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஏன் இந்த முரண்பாடு. ஒன்று வேலை தேடுபவர்களுக்கு உரிய சம்பளம் தருவதில்லை. குறிப்பாக சிறு நகராட்சி, பேரூராட்சிகளில் மாதம் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையே சம்பளத்திற்கு ஆட்கள் தேடுகின்றனர். அதாவது தகுதிக்கு ஏற்ற சம்பளத்தை எந்த நிறுவனமும் தரத்தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

மற்றொன்று, வேலைக்கு செல்பவர்கள் தங்களுக்கு சாப்பாடு, தங்குமிடம் போக குறைந்தபட்ச அளவு பணமாவது வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு தகுந்த சம்பளம் வேண்டும் என கேட்கின்றனர். இதனால் கிடைக்கும் வேலையில் சேர தயாராக இல்லை. இந்த ஏற்ற தாழ்வினை சமன் செய்ய முடியாத சூழல் இருப்பதால், பல லட்சம் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், பல லட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றனர் என சமூக வேலை வாய்ப்பு நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது ஒரு புதுச்சிக்கல் உருவாகி உள்ளது. அதாவது பிளஸ் 2 முடித்ததும், பல பெண்கள் சிறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் கல்வித்உதவித்தொகை வழங்குவதால், பிளஸ் 2 முடித்த பெண்கள் அத்தனை பேரும் உயர்கல்வியில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை மேலும் கிடுகிடுவென அதிகரிக்கும். அதேபோல் இவர்கள் படித்து முடிக்கும் போது, வேலை தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இந்த சிக்கலுக்கு என்ன தான் தீர்வு. அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றன. இந்த முகாம்களில் தகுதியான வேலைக்கு தகுதியான சம்பளம் என்ற நிர்ணயம் செய்தால் மட்டுமே இப்பிரச்னை தீர்வுக்கு வரும். அதிக வேலை கொடுத்து விட்டு பணியாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கும் நிலை மாறினால் மட்டுமே இந்த சிக்கல் முடிவுக்கு வரும் என தனியார் நிறுவனங்களி்ல் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story