துணை முதல்வராகிறாரா உதயநிதி? முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீத்தாராமன்?
முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை பாஜக முன்னிறுத்தத் திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்திருக்கிறார்.
கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் திடீரென்று மோடியைச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் ஒரு அனலைக் கிளப்பி உள்ளது. பாஜகவை எதிர் துருவமாக வைத்து அரசியல் செய்து வரும் திமுக, ஏன் திடீரென்று கேலோ இந்தியா போட்டியைக் காணப் பிரதமரை அழைக்க வேண்டும்? அதற்கான தேவை என்ன?
உதயநிதியின் சந்திப்பில் அதைத்தாண்டி சில அரசியல் கணக்குகள் உள்ளன என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள். அந்த 'மூவ்' என்ன? அதைப்பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விசயங்களை உடைத்துப் பேசி இருக்கிறார்.
"பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக திடீரென்று உதயநிதி சந்தித்திருக்கிறார். அதில் உள்ள அரசில் என்ன?
"உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்று தான் இதை நான் புரிந்துகொள்கிறேன். இரண்டு கட்சிகளுக்குத் தேர்தல் கூட்டணி மட்டும் தான் இணக்கத்தை ஏற்படுத்த முடியும். மற்றவை அனைத்தும் சந்திப்புகள் தான். சொல்லப்போனால் திமுகவுக்கு பாஜகவுடன் இணக்கம் ஏற்படுத்த வேண்டிய தேவை எழவில்லை. அவர்களின் வாக்கு வங்கி என்பதை 'ஆண்டி' பிஜேபி என்பதில் தான் உள்ளது.
அப்படிப் பார்த்தால் பாஜக எதிர்ப்பு மூலம் வரும் வாக்குகள் அதிமுகவுக்குச் சென்று விடக்கூடாது என்றுதான் திமுக கணக்குப் போடும். திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தது யார்? அது நிச்சயம் உதயநிதிக்குத்தான். அவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்போது அழைப்பிதழ் வழங்குவதற்கு அவர்தான் சென்றுள்ளார். எனக்குக் கிடைத்துள்ள தகவலின்படி பிப்ரவரி மாதம் துணை முதல்வராக உதயநிதி அமர்த்தப்படுவார் என்பது தான். அப்படி அவரை துணை முதல்வராக ஆக்கும் போது சிலர் அதை ஏற்க மறுக்கலாம்.
அந்த மாதிரியான எதிர்ப்புகளுக்கு இந்தச் சந்திப்புக்கான புகைப்படங்கள் பயன்படும். பிரதமரையே நேரில் சென்று சந்தித்தவர் உதயநிதி தான். அப்படி என்றால் அவரை துணை முதல்வராக்குவதில் என்ன தவறு என்று அவரது கட்சியினர்கள் வாதிடலாம்.
இன்றைய நிலையில் பார்த்தால், திமுகவில் உதயநிதிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அப்படி என்றால், அடுத்த கட்டம் என்பது என்ன? ஒரு பெரிய பதவி. உதயநிதியைத் துணை முதல்வராக்குவதற்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை. ஒரு அரசாணை வெளியிட்டாலே போதும்.
இதைப்போல மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது ஸ்டாலினுக்காக அப்படி ஒரு அரசாணை போடப்பட்டுள்ளது. அதற்கு முன்மாதிரி ஏற்கெனவே இருக்கிறது. அதே வழியைப் பின்பற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லையே?
முன்பு திமுகவைப் பொறுத்தவரை டெல்லி தலைநகர் அரசியலை முரசொலி மாறன் கவனித்து வந்தார். அதன்பிறகு திருச்சி சிவாவுக்குக் கொஞ்சம் அளிக்கப்பட்டது. அதன்பின் கனிமொழிக்கு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது தலைநகர் அரசியலிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டு பாஜக அரசியலில் கடந்த சில மாதங்களாக நிர்மலா சீதாராமனுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அவர் மழை வெள்ளத்தைப் பார்வையிட வருகிறார். வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறார். எதிர்காலத்தில் பாஜக V/s திமுக என்று வரும்போது, பாஜகவுக்கு ஒரு முதல்வர் வேட்பாளர் முகம் தேவைப்படும். அந்த முகமாக நிர்மலா நிறுத்தப்படலாம்.
வருகின்ற 2024 தேர்தலில் நிர்மலா தென் சென்னை பகுதியில் பாஜக சார்பாகப் போட்டிப்போட இருக்கிறார். அதற்கான பணிகளை அந்தக் கட்சி பிரமுகர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, அவர் தமிழ்நாட்டில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.
இதுவரை நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா எம்.பி.ஆக இருக்கிறார். வரும் நாளில் அவர் லோக் சபா எம்.பி. ஆகலாம். அதை வைத்து 2 ஆண்டுகள் அவர் இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவார். இடையில் 2026 சட்டசபைத் தேர்தல் வரும்.
அப்போது அவரை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்வைக்கும். அதற்கான மூவ் தெரிகிறது. அது தவறினாலும் 2031இல் ஒரு வாய்ப்பு வரும். குறைந்தது 10 ஆண்டுகள் திட்டம் என ஒன்று இல்லாமல் பாஜக எதையும் யோசிக்காது.
பிரதமர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தைப் புகழ்ந்து பேசுகிறார். கட்டாயம் அந்தக் கட்சியை அவர்கள் இழுக்கப் போகிறார்கள். அதற்கான வேலைகளில் ஒன்று பிரதமர் விஜயகாந்த்தைப் பாராட்டுவது.
பலம் பொருந்திய கட்சிகளிலிருந்து பிரிந்து வருபவர்களை அல்லது சிறிய கட்சிகளை தங்கள் அணிக்குப் பலமாகச் சேர்த்துக் கொள்வது பாஜகவின் கொள்கை. அதைப் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்" என்கிறார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu