பா.ஜ.க.,வை கண்டு பதறும் உத்தவ்தக்கரே!
கூட்டணி கட்சி தலைவர்களுடன் உத்தவ்தாக்கரே.
மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்து என்பது தொடர்பாக குழப்பம் நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார். இதற்காக சமீபத்தில் உத்தவ் தாக்கரே டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து விட்டு வந்தார்.
அப்படி இருந்தும் உத்தவ் தாக்கரேயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆகியோர் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மூவரும் சேர்ந்து கூட்டாக பேட்டியளித்தனர்.
இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ``மகாவிகாஷ் அகாடி முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யுங்கள். நாம் மகாராஷ்டிரா நலனுக்காகப் பாடுபடுகிறோம். நான் எனக்காகப் போராடவில்லை. தற்போது கோடிகளை வாங்கிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும். மகாராஷ்டிராவின் மதிப்பையும், மரியாதையையும் காக்க மகாவிகாஷ் அகாடி தொண்டர்கள் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், மகாராஷ்டிராவின் சுயமரியாதையை பாதுகாக்கும் தேர்தலாகும். பா.ஜ.க-வுடனான அனுபவத்திற்குப் பிறகு அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு முன்பு நடந்த பல தேர்தல்களில் பா.ஜ.க., குறைவாக உள்ள இடங்களில் வெற்றி பெறும் கட்சி வேட்பாளரை மேலே வரவிடாமல் தடுத்ததைப் பார்த்திருக்கிறேன். எனவே அதிக எம்.எல்.ஏ-க்கள் உள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை'' என்றார். மும்பை மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, ``மாநகராட்சி தேர்தலை நடத்த மறுக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்'' என்றும் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனவே சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கக்கூடும் என்ற அச்சம் உத்தவ் தாக்கரேயை பிடித்துள்ளது. எனவே தான் அதிக எம்.எல்.ஏ. இருக்கும் கட்சிக்கு முதல்வர் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால், அவரை மகாவிகாஷ் அகாடியின் பிரசார கமிட்டி தலைவராக நியமிக்க சரத்பவார் பரிசீலித்து வருகிறார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu