ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... தி.மு.க.,வின் அரசியல் சாதுர்யம்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... தி.மு.க.,வின் அரசியல் சாதுர்யம்
X

பைல் படம்.

ஒரே நடவடிக்கையில் தி.மு.க., கூட்டணி தர்மத்தையும் பாதுகாத்து, தனது கட்சியினரையும் பாதுகாத்துள்ளது.

தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனை தி.மு.க., கைப்பற்றியது. பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனையும் தி.மு.க., கைப்பற்றியது. போடி நகராட்சி துணைத்தலைவர் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனையும் தி.மு.க., கைப்பற்றியது. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கைப்பற்றிய தி.மு.க.,வினர் பதவி விலகாவிட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். ஆனாலும் தேனி, பெரியகுளம், போடியில் யாரும் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த பிரச்னை குறித்து தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, நேரு, பெரியசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். முடிவில் தி.மு.க.,வினர் பக்கம் இருக்கும் நியாயம் முற்றிலும் அவர்களுக்கு புரிந்து போனது. எனவே கட்சித் தலைமையில் இருந்து தங்கள் கட்சியினரையும் பாதுகாக்க வேண்டும். அதேசமயம் கூட்டணி தர்மத்தையும் பாதுகாக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் பேசி, தற்காலிக நீக்கம் (சஸ்பெண்ட்) என்ற முடிவு எடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளனர். சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் தி.மு.க., மேலிடம் தனது கூட்டணி கட்சிகளையும் திருப்திபடுத்தி உள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் மிகப்பெரும் தலைகளை கூட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அவர்களை தவிடுபொடியாக்கிய தி.மு.க., தேனி மாவட்டத்தில் மட்டும் மென்மையான போக்கினை கடைபிடித்தற்கு கட்சியினர் பக்கம் இருக்கும் நியாயமே காரணம். தவிர இந்த நடவடிக்கை மூலம் அவர்களி்ன் உள்ளாட்சி பதவிகளுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்ற சிக்னலையும் தி.மு.க., மேலிடம் உறுதிப்படுத்தி உள்ளது என கட்சியினர் கூறுகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!