முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் 'ட்விஸ்ட்' : முடிவுக்கு வந்தது தேனி பிரச்சனை
தேனி நகராட்சியில் முதன் முறையாக தி.மு.க., 19 கவுன்சிலர்களை வென்று நகராட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றியது. ஆனால் இந்த வெற்றியை தி.மு.க.,வினர் கொண்டாட முடியாத வகையில் முதல்வர் ஸ்டாலின் தேனி நகராட்சி தலைவர் பதவியை காங்., கட்சிக்கு ஒதுக்கினார். ஆனால் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தர முடியாது என ரேணுப்பிரியா பாலமுருகன் பிடிவாதம் காட்டினார். அமைச்சர் ஐ.பெரியசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் உட்பட தி.மு.க.,வின் அத்தனை வி.ஐ.பி.,க்களும் ரேணுப்பிரியாவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். தேனி நகர அரசியல்களம் பற்றி மேலிடத்திற்கு பக்குவமாக எடுத்துக்கூறினர்.
இதற்கிடையில் தி.மு.க.,வின் ஐபேக் டீம், சிறப்பு உளவுப்பிரிவு, சபரீசன் அமைத்த விசாரணைப்பிரிவு என மூன்று குழுக்களும் விசாரித்து ரேணுப்பிரியாவும், அவரது கணவர் பாலமுருகனும் தி.மு.க.,விற்காக அதிகம் உழைத்துள்ளனர். அவர்களிடம் கட்சி மென்மையான போக்கினை கையாள வேண்டும் என தி.மு.க., தலைமைக்கு அறிக்கைகளை அனுப்பினர். அதேசமயம் காங்., சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசி. அவரது மகன் அ.தி.மு.க.,வின் ஆதரவுடன் பல பதவிகளை வகித்துள்ளார் எனவும் மேலிடத்திற்கு அறிக்கைகளை கொடுத்தனர்.
இதனால் தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க.,விற்கு இல்லை என தி.மு.க., மேலிடம் கடுமையாக காங்., கட்சியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை மாறியது. தவிர தி.மு.க., ரேணுப்பிரியாவின் கணவர் பாலமுருகனை மட்டும் கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் தேனிக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வருகிறார் என்ற அறிவிப்பு வந்ததும், ரேணுப்பிரியாவின் நிலை என்னவாகும் என மீண்டும் கேள்வி எழுந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் ரேணுப்பிரியாவிற்கு நகராட்சி தலைவர் என்ற அந்தஸ்த்திற்கான வி.ஐ.பி., பாஸ் வழங்கப்பட்டது. அவரும் நகராட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஜீப்பிலேயே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவரது கணவர் பாலமுருகன், வெளிப்படையாக வேலை செய்யாவிட்டாலும், மறைமுகமாக முதல்வர் கூட்டத்தில் பங்கேற்றார். தனது சார்பில் 1400 பேரை விழாவிற்கு அழைத்து வந்தார். பாலமுருகன் பல நேரங்களி்ல் தி.மு.க., வி.ஐ.பி.,க்களை சந்தித்து பேசி அவர்களின் ஆலோசனைகளை பெற்றே ஸ்டாலின் விழாவிற்கான வேலைகளையும் செய்தார். அதேபோல் நகராட்சி துணைத்தலைவர் செல்வத்தின் பதவி குறித்து இடையில் திடீரென எழுந்த பஞ்சாயத்தும் புறப்பட்ட வேகத்திலேயே அடங்கி விட்டது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 'தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் மற்றும் துணைத்தலைவர் செல்வம்' ஆகியோரின் பதவிகளுக்கு இனி எந்த இடையூறும் வர வாய்ப்பு இல்லை. அதற்கான சிக்னல்களை தி.மு.க., மேலிடம் கொடுத்து விட்டது. பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் கூட சில நாட்களில் வாபஸ்பெறப்படவும் வாய்ப்புகள் உள்ளது என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu