தேனி தொகுதி ஆதரவு அலையை அறுவடை செய்வாரா டி.டி.வி.தினகரன்..!?

தேனி தொகுதி ஆதரவு அலையை  அறுவடை செய்வாரா டி.டி.வி.தினகரன்..!?
X

தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி, தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன், அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி., தினகரன்.

டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தேனி லோக்சபா தொகுதி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., என மூன்று முதல்வர்களை தந்த தேனி மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க., கூட்டணி 40ல் 39 தொகுதிகளை வென்றெடுத்தன.

தேனியில் மட்டும் அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். காங்கிரஸ் போட்டியிட்டதால் தான் தொகுதி கை நழுவியதாக தி.மு.க.,வினர் சமாதானம் ஆகினர். கட்சியை வளர்க்க தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் களம் இறக்கப்பட வேண்டுமென்று கட்சி நிர்வாகிகள் தலைமையை வலியுறுத்தினர்.

களமிறங்கிய தி.மு.க.,: மாவட்டத்தில் உள்ள உடன் பிறப்புகள் மகிழும் விதமாக தி.மு.க., வேட்பாளராக தங்க.தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டார். தனது தடாலடி பேச்சு, நடவடிக்கைகளால் பரவலாக அறியப்பட்டவர் தங்க.தமிழ்செல்வன். அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்திருப்பது, கணிசமான சிறுபான்மையினர் ஓட்டு முழுமையாக கிடைப்பதுடன் வலுவான கூட்டணி என்பதால்.... தங்க.தமிழ்ச்செல்வனின் வெற்றி உறுதி என இண்டியா கூட்டணியினர் மகிழ்ந்திருந்தனர்.


மந்திரச்சொல்:

பா.ஜ., கூட்டணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பிற்கு பின் கள நிலவரம் மாறியது. "ஓவர் நைட்டில்" தினகரன் என்ற மந்திச்சொல் அதாவது அந்த மந்திர பெயர் பட்டி, தொட்டியெங்கும் பரவியது. நடுநிலையாளர்கள் கூட தங்களின் பகிரங்கமான ஆதரவை சமூக வலைத்தளங்கில் தினகரனுக்கு தெரிவித்தனர். சிறுபான்மையினர் மத்தியிலும் தினகரனுக்கு ஆதரவு அலை தென்படுவதால் தி.மு.க., கூட்டணியினர் "ஜெர்க்" ஆகி உள்ளனர்.

சிரித்த முகத்துடன் யாரையும் வசை பாடாமல் அவர் மேற்கொள்ளும் பிரசாரம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெறுப்பு அரசியல் பேசாமல் வளர்ச்சி பற்றி பேசுவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆன்மிக திருப்பணி: தினகரன் பெரியகுளம் எம்.பி.,யாக இருந்த போது ஜாதி சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை வழங்கி இருந்தார். இவற்றில் சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களும் அடங்கும். அதை தேனி மாவட்ட மக்கள் மறக்காமல் நினைவு கூறுகின்றனர்.

கிராம கோயில்களில் மீண்டும் திருப்பணிகள் நடத்த தினகரன் வாரி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. பழுதடைந்த பள்ளிகள், நூலகங்கள், சமுதாய கூடங்களை புனரமைக்க கோரும் கோரிக்கை மனுவுடன் கிராம மக்கள் தினகரன் பிரச்சார நாளை எதிர்நோக்கி உள்ளனர்.

பிரச்சனை லிஸ்ட்: அ.ம.மு.க.,விற்கு தொகுதிக்குள் வலுவான கட்டமைப்பு இல்லை. இதனால் பூத் கமிட்டி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., ஓ.பி.எஸ்., அணியினருடன் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு என்பது பெயரளவில் கூட நடைபெறவில்லை.

எளிதாக குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்த வாய்ப்பிருந்தும் நிர்வாகிகள் மந்தமாக உள்ளனர். பட்டுவாடா செய்ய வெளியூர் ஆட்களை தினகரன் இறக்கியுள்ளதால்..... லோக்கல் நிர்வாகிகளிடம் செழிப்பு இல்லை. மும்முனை போட்டியில் ஓட்டு பதிவு சதவீதம் அதிகரித்தால் மட்டுமே ஆளும்கட்சியை வெற்றி கொள்ள முடியும். அதற்கான எந்த முயற்சியும் பா.ஜ., கூட்டணி மேற்கொள்ளவில்லை.

ஆதங்கம்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருபெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற ஆதரவு அலை மட்டும் போதாது. ஆதரவு நிலையை ஓட்டாக மாற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியம். தி.மு.க., மாவட்ட செயலாளர்களிடையே நிலவும் ஈகோ யுத்தம், அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பு இன்மை போன்றவற்றை சாதகமாக்கி தினகரன் வெற்றிபெற வேண்டுமென்பது மோடியின் வளர்ச்சி இந்தியாவை விரும்பும் மக்களின் ஆதங்கமாக உள்ளது. மொத்தத்தில் தேனி தொகுதியில் தற்போது நிலவும் ஆதரவு அலையால் கரை சேருவது தினகரனின் களப்பணி மற்றும் வியூகத்தில் தான் உள்ளது.

நன்றி: நிருபர் பவுன்ராஜ், தேவாரம்.

Tags

Next Story