தமிழக அரசியலில் டி.டி.வி. தினகரன் போடும் கணக்கு: 3- வது அணி சாத்தியமா?
டி.டி.வி. தினகரன்.
எடப்பாடி பழனிசாமி கோர்ட் உத்தரவுடன் அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தி முடித்துவிட்டார்.. தற்சமயம், அவர்தான் அ.தி.மு.க.வில் பலம் பொருந்தியவராக இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.
அதேபோல, ஓ.பி.எஸ்.ஸும் தன் சார்பில் போட்டி பொதுக்குழுவை நடத்த தயாராகி வருகிறார்.. தன்னுடய பலத்தையும், செல்வாக்கையும் நிரூபிக்கும் வகையில், இந்த பொதுக்குழு அமைய வேண்டும் என்று, பல்வேறு வியூகங்களிலும் இறங்கி வருகிறார்.
இதற்கிடையில்தான், டி.டி.வி. தினகரன், அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த போகிறார்.. வரும் 15ம் தேதி இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தைதான் மிக மிக அதிகம் நம்பி உள்ளாராம் தினகரன்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.. நடக்கப்போகும் கூட்டத்தில் அ.ம.மு.க.வின் பலத்தை காட்ட போகிறாராம். இதற்காகவே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக பொதுக்குழுவை கூட்டி நடத்தி காட்டினால் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள், மொத்த பேரின் கவனமும் அ.ம.மு.க. பக்கம் திரும்பும் என்பது டி.டி.வி. தினகரனின் முதல் கணக்காகும்.
அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமியை அரசியலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்றும் தினகரன் உறுதி செய்துள்ளாராம்.. எடப்பாடியிடம் இருக்கும் நிர்வாகிகள், வெறும் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், ஆனால், அ.ம.மு.க.வில் உள்ளவர்கள், பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இல்லை, கட்சிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். ஓ.பி.எஸ். போல் அல்லாமல், எடப்பாடி பழனிசாமியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவது அ.ம.மு.க. மட்டுமே.. அதனால்தான் இன்று, எடப்பாடி பழனிசாமி சமூகத்தில்கூட அ.ம.மு.க.வுக்கான செல்வாக்கு பெருகி காணப்படுகிறது என்பது போன்றவைகளையும் பொதுக்குழு மூலம் எடுத்து சொல்வதே தினகரனின் இன்னொரு கணக்காக உள்ளது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரன் முன்னெடுக்கும் இத்தனை முயற்சிகளும் டெல்லி காதுகளுக்கு சென்று விழ வேண்டுமாம்.. காரணம், அதுக்கும் ஒரு கணக்கு இருக்கிறதாம்.. விரைவில் எம்.பி. தேர்தல் வரஉள்ள நிலையில், பா.ஜ.க. அதற்கு மும்முரமாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை கழட்டி விட்டு விட்டு, ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் போன்றோரை இணைத்து தேர்தலை தனித்து சந்திக்க பா.ஜ.க. யூகித்து வருவதாக தெரிகிறது.. ஆனால், டி.டி.வி. தினகரன் இந்த விஷயத்தில் முந்திக் கொண்டு, தன்னுடைய தலைமையில் 3வது அணியை அமைத்து தேர்தலை சந்திக்க போவதே அந்த மெகா கணக்காம்.
அதாவது, அ.ம.மு.க + பா.ம.க + தே.மு.தி.க + பா.ஜ.க + ஓ.பிஎ.ஸ் + சசிகலா என அனைவரையும் ஒன்றாக இணைத்து, 3வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது, தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலர வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் காலூன்ற இது பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலத்தை தரும் என்றும் தினகரன் நம்புகிறாராம்.. கடந்த எம்.பி. தேர்தலின்போதே, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தினகரன் முயற்சித்தார்.. ஆனால், நடக்கவில்லை.
பா.ஜ.க.வை பொறுத்தவரை டி.டி.வி. மீது ஆரம்பத்தில் இருந்தே நிறைய நம்பிக்கை வைத்துள்ளது.. பிரத்யேகமான சாப்ட் கார்னர் உள்ளது.. மிகசிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை இணைத்து பார்க்கிறது.. 'அவரை இந்த பக்கம் கொண்டு வந்துடுங்க' என்று ஒருமுறை மேலிட தலைவர்களே விருப்பப்பட்டு சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின.. எனவே, வரும் 2024ம் ஆண்டு எம்பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.வை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புவதாக தெரிகிறது..
ஆனால், பா.ஜ.க.வை முந்திக் கொண்டு டி.டி.வி .கணக்கு போடுவதால், யார் தலைமையில் 3வது அணி அமைய போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும் 3வது அணி இந்த முறை உருவாவது நிச்சயம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. வி.சி.க + ம.தி.மு.க + காங்கிரசுடன் இணைத்து தி.மு.க. இந்த முறையும் தேர்தலை சந்திக்குமா? அல்லது எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் கை கோர்க்குமா தெரியவில்லை.. ஆனால், இந்த 3வது அணியை தி.மு.க. எப்படி சமாளிக்க போகிறது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu