வெற்றியை கோட்டை விட்ட டிடிவி தினகரன்: என்ன காரணம்?

வெற்றியை கோட்டை விட்ட டிடிவி தினகரன்: என்ன காரணம்?
X

டிடிவி தினகரன் (கோப்பு படம்)

தினகரன் தனது மந்தமான செயல்பாடுகளால் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

தேனி தொகுதியில் தி.மு.க., சார்பில் தங்க.தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அக்கட்சியினர் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என உறுதியாக நம்பினர். ஆனால் எதிர்தரப்பில் தினகரன் களம் இறங்குகிறார் என தெரிந்ததும் தி.மு.க.,வினரே சற்று கலங்கித்தான் போயினர்.

பலமான எதிரியுடன் மோதுகிறோம் என்பது தெரிந்ததும், தி.மு.க., ஆரம்பத்தில் இருந்தே நான்கு கால் பாய்ச்சலில் தேர்தல் பணி செய்தது. மிகவும் கடுமையான உழைப்பினை தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சிகளும் கொடுத்தனர். இவ்வளவுக்கும் தி.மு.க.,வில் சிலர் தங்க.தமிழ்செல்வன் வெற்றி பெறக்கூடாது என உள்ளடி வேலைகளை செய்தனர். அப்படியிருந்தும் தி.மு.க.,வினரின் கடும் உழைப்பு இன்று தங்க.தமிழ்செல்வனை லோக்சபாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இதுவரை தேனி மாவட்ட, தேனி தொகுதி தி.மு.க.,வினர் இவ்வளவு கடும் உழைப்பினை வழங்கியிருப்பார்களா என்பது சந்தேகம் எனும் அளவுக்கு கடும் உழைப்பினை கொடுத்தனர்.

ஆனால் எதிர்தரப்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வெற்றி பெற பெரும் பிளஸ் பாயிண்ட்கள் இருந்தன. அந்த பிளஸ் பாயிண்ட்களை ஓட்டாக மாற்றும் முயற்சியில் அவர் பெரும் பின்னடைவினை சந்தித்தார். குறிப்பாக மிகவும் மோசமான தேர்தல் பிரச்சாரம். கூட்டணி கட்சிகளை கொஞ்சம் கூட மதிக்காத ஒரு போக்கு. பத்திரிக்கையாளர்கள் உட்பட எந்த வி.ஐ.பி.,க்களையும் சந்திக்காத அலட்சியம். தேர்தல் பணி, தேர்தல் பிரச்சாரத்தில் காட்டிய அசுரமான மந்தநிலை என தினகரன் பிரச்சார களத்தில் தவறுக்கு மேல் தவறு செய்தார்.

குறிப்பாக தேனி தொகுதி, தேனி மாவட்ட பா.ஜ.க.,வினரை அவர் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் பா.ஜ.க.,வினர் மிகவும் வேதனையுடன் தேர்தல் களத்தில் ஒரு பார்வையாளராக ஒதுங்கி நின்று கொண்டனர். தேனி மாவட்ட பா.ஜ.க.,வினர் துளி அளவு கூட தேர்தல் பணி செய்யவில்லை. அதற்கான வாய்ப்பினை தினகரன் வழங்கவும் இல்லை. இப்படி பல சாதங்கள் இருந்தும் தினகரன் கோட்டை விட்டு விட்டாரே என பலரும் வெளிப்படையாகவே புலம்பி வகின்றனர். தங்க.தமிழ்செல்வன் திணறித்தான் ஜெயிப்பார் என அத்தனை பேரும் நினைத்த நேரத்தில் அவர் அபாரமாக வெற்றி பெற்றது தி.மு.க.,வின் உழைப்பிற்கு சான்றாக விளங்குகிறது. ஆக மொத்தத்தில் தேனி தேர்தல் களத்தில் தனது குருவான தினகரனை வீழ்த்தி அபார வெற்றியை ஈட்டி விட்டார் சிஷ்யன் தங்க.தமிழ்செல்வன்.

Tags

Next Story