திருவல்லிக்கேணி சாம்பார் இட்லி சாப்பிடலாம் வாங்க....
திருவல்லிக்கேணி ரத்னா கபே.
திருவல்லிக்கேணியின் பல சிறப்புகளில் ஒன்று ரத்னா கபே உணவகம். அந்த பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே பிரபலமான ஓட்டல் இது. காரணம் இரண்டு. ஒன்று ஏகப்பட்ட மேன்ஷன்களும் லாட்ஜ்களும் நிரம்பி வழியும் இடத்தில் பல மாவட்ட மனிதர்கள் வந்து செல்வது இயற்கை.
இரண்டாவது காரணம் பார்த்தசாரதி பெருமாள். இவரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், ரத்னா கபேக்கு வந்து சாம்பார் இட்லியை சுவைத்துச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
இட்லியை ருசிக்க வேண்டும் என்று பிற்பகல் நேரத்தில் ரத்னா கபேக்கு சென்றாலும் அப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த உணவகம் தொடங்கிய 1948-ஆம் ஆண்டு முதலே சாம்பார் இட்லி அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் உணவு. அது பிரபலமடைய காரணம் சாம்பாரில் இட்லி மிதக்கும் வகையில் சாம்பார் கெட்டியாக தயாரித்து கொடுப்பது தான்.
தொடக்கத்தில் அணா கணக்கில் விற்பனை செய்யப்பட்ட சாம்பார் இட்லி, தற்போது ஒரு பிளேட் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியமான காலவெளிப்பயணம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதால் சாம்பார் இட்லியை பலரும் விரும்பிச் சுவைக்கின்றனர். அன்று முதல் இன்று வரை அதே ருசியில் கொடுப்பதும் அனைவரும் விரும்புவதற்கான காரணங்களுள் ஒன்று.
மேலும், சாம்பாரும் வீட்டு ருசியில் இருப்பதுடன், உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப் பொருள் பயன்படுத்தாமல் சமைக்கப்படுவதால் சுமார் 75 ஆண்டுகளை கடந்தும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu