தேனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு டாக்டர்கள் மூலம் மருத்துவ சிகிச்சை..!
ஆரம்ப சுகாதார நிலையம் (கோப்பு படம்)
தேனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மருத்துவக் கல்லுாரிக்கு 10 கி.மீ., துாரம் அலைவது குறையும்.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட தொடங்கியதும், நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டது. இதனால் தேனி மக்கள் இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறி 10 கி.மீ., தொலைவில் உள்ள தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. சர்க்கரை நோய், இருதய நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், மூட்டுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதில் பெரும் சிரமங்கள் இருந்து வந்தது.
இந்நிலையில் மக்களின் சிரமங்களை நீக்க தேனியில் உள்ள இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் கூறியதாவது:-
தேனியில் உள்ள இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் வருகின்றனர். வாரந்தோறும் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தோல் மற்றும் இருதய சிறப்பு சிகிச்சை டாக்டர்கள், செவ்வாய்க்கிழமை மகப்பேறு சிகிச்சை டாக்டர்கள், பல் சிகிச்சை டாக்டர்கள்,
புதன் கிழமை குழந்தைகள் சிறப்பு சிகிச்சை டாக்டர்கள், கண் சிகிச்சை டாக்டர்கள், வியாழக்கிழமை எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை டாக்டர்கள், பிஸியோதெரபிஸ்ட்டுகள், வெள்ளிக்கிழமை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர்கள், பல் டாக்டர்கள், சனிக்கிழமை மனநல சிகிச்சை டாக்டர்கள் வருகின்றனர்.
இதனால் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் இங்கேயே சிகிச்சை பெற்று மருந்துகள் வாங்கலாம். அதேபோல் கர்ப்பிணிகளின் பரிசோதனையும் இங்கேயே நடக்கிறது. சிசேரியன் தேவைப்படுபவர்கள் மட்டும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சென்றால் போதும்.
மற்றவர்கள் இங்கேயே தங்கி சிகிச்சை பெறலாம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதால் மக்கள் இனிமேல் தேனி மருத்துவக் கல்லுாரிக்கு ஆபரேஷன் தேவைப்படும் நோய்கள் உட்பட பெரிய பிரச்னைக்கு மட்டும் சென்றால் போதும். மற்ற சிகிச்சைகளை இங்கேயே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu