மீண்டும் சீரானது போடி மெட்டு மலைப்பாதை போக்குவரத்து

மீண்டும் சீரானது  போடி மெட்டு மலைப்பாதை போக்குவரத்து
X

போடி மேட்டு பாதையில் ஏற்பட்ட மண் சரிவு 

கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் போடி மெட்டு மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள், பாறைகள் சரிவும் ஏற்பட்டு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தேனியில் இருந்து மூணாறு செல்லும் தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போடிமெட்டு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடம் உள்ளது.

அங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பகுதியை கடந்து 22 கி.மீ., மலைப் பாதையில் சென்றால் தமிழக எல்லை பகுதியான, கடல் மட்டத்தில் இருந்து 4644 அடி உயரத்தில் உள்ள போடிமெட்டு மலைப் பகுதியை அடையலாம்.

மழை பெய்தாலே போடி மெட்டு பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், மரங்கள் விழுவதும் வழக்கம் தான். 18 அடியாக இருந்த போடிமெட்டு ரோட்டை 10 ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.17 கோடி செலவில் 24 அடியாக அகலப்படுத்தியது. ரோடு அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்ததாலும், மழை காரணமாகவும் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் மழை இல்லாததால் மண் சரிவு இல்லை. கடந்த வாரம் போடி, போடி மெட்டு, கேரள பகுதியில் விடிய, விடிய பெய்த கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தொங்கிக் கொண்டிருந்த பாறைகள் உருண்டு விழுந்தன.

தேபோல் போடி மெட்டு, முந்தல், குரங்கனி, புலியூத்து அருவி பகுதிகளில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் போடி மெட்டு மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள், பாறைகள் சரிவும் ஏற்பட்டு போடி- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி மெட்டு மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்து சாலைகள் அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை பட்டிருந்தது. இந்நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சாலையை சீர் படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த சரிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் இரவு, பகலாக நடந்தன. முற்றிலும் அகற்றப்பட்டு போடி- மூணாறு இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கேரள வாகனங்கள் தமிழகத்திற்கும், தமிழக வாகனங்கள் கேரளத்திற்கும் சென்று வருகின்றன. தொழிலாளர்களும் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தடையின்றி வேலைக்கு சென்று வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது என தொழிலாளர்களும் தெரிவித்தனர்.

Tags

Next Story
வயதுக்கு ஏற்ற உப்பு அளவு தெரியுமா? உடலுக்கு முக்கிய அறிவுரை!..