தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை
X

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இரவெல்லாம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைப்பொழிவு சிறப்பாக இருந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தில் தொடங்கிய மழை இரவெல்லாம் பெய்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆண்டிபட்டியில் 27.2 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 43.6 மி.மீ., வீரபாண்டியில் 48.8 மி.மீ., பெரியகுளத்தில் 31 மி.மீ., மஞ்சளாறி்ல் 31 மி.மீ., சோத்துப்பாறையில் 10 மி.மீ., வைகை அணையில் 18.6 மி.மீ., போடியில் 36.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.2 மி.மீ., கூடலுாரில் 7.4 மி.மீ., சண்முகாநதியில் 28.6 மி.மீ., மழை பெய்தது.

இந்த மழையால் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள், அருவிகள், ஏரிகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 12 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1269 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136.85 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 816 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து மழைப்பொழிவு உள்ளதால் இன்று ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து, அணைகளுக்கு நீர் அதிகம் வரும். பொதுமக்கள் ஆறுகள், ஏரிகள், அணைகள், அருவிகள், குளங்கள் உட்பட எந்த நீர் நிலைகளிலும் குளிப்பதையோ, துணிகளை துவைப்பதையோ தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். கமாண்டர் அலோக்குமார்சுக்லா, சுபோத்சிங் ஆகியோர் தலைமையில் வந்துள்ள இந்த பேரிடர் மேலாண்மை குழுவினருடன் கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஆற்றின் கரையோர மக்களுக்கும், வெள்ளப்பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளி்ல் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் ஏற்பட்டால், உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் நீர் நிலைகளில் குளிக்க இறக்க கூடாது. வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !