தேனி மாவட்டத்தில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் கீழே வீழ்ச்சி

தேனி மாவட்டத்தில் தக்காளி  கிலோ 5 ரூபாய்க்கும் கீழே வீழ்ச்சி
X
தேனி மார்க்கெட்டில் தக்காளி, சின்னவெங்காயம் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மார்க்கெட்டில் கடந்த மூன்று மாதங்களாகவே சின்னவெங்காயம், தக்காளி விலை வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. ஆவணி பிறந்ததும் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக ஆவணி பிறந்த பின்னரும் விலை வீழ்ச்சி தொடர்கிறது. தற்போதைய நிலையில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். சின்னவெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். தக்காளியை இருப்பு வைக்க முடியாததால் விவசாயிகள் வேறு வழியின்றி வந்தவரை வரவு என நினைத்து விற்று விடுகின்றனர்.

சின்னவெங்காயத்தை பண்டறை போட்டு இருப்பு வைக்கின்றனர். சிறிய அளவில் பண்டறை அமைக்க 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஒருமுறை பண்டறை அமைத்தால், எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் விதை வெங்காயம், உழவு,நடவு, 4 முறை களையெடுப்பு, 4 முறை மருந்துதெளிப்பு, வெங்காயம் அறுவடை உள்ளிட்ட செலவுகளை கணக்கில் கொண்டால் கிலோ 30 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளுக்கு அசல் தேறும். அதற்கு மேல் விற்றால் மட்டுமே லாபம் வரும். தற்போது சின்ன வெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் சின்னவெங்காயத்தை பண்டறைகளில் இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். அறுவடையான சின்ன வெங்காயத்தை மண் இல்லாமல் உலர்த்தி, பதப்படுத்தப்பட்ட நிலையில் பண்டறைகளில் வைத்தால் ஆறு மாதம் வரை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த காலத்தில் விலை எப்போது உயர்கிறதோ... அப்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story