உங்கள் வாரிசுகளின் வாழ்வை காக்க, தயவு செய்து ஓட்டுப்போடுங்க...!

உங்கள் வாரிசுகளின் வாழ்வை காக்க, தயவு செய்து ஓட்டுப்போடுங்க...!
X

தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார்.

நாட்டு நடப்புகளை உணர்ந்த ஏ கிளாஸ், பி கிளாஸ் மக்களும், மேல்தட்டு நடுத்தர மக்களும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.

தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார் கூறியதாவது:

தமிழகத்தில் ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு, டி கிரேடு என நான்கு வகையான மக்கள் உள்ளனர். ஏ கிரேடு, பி கிரேடு மக்கள் பொருளாதாரம், கல்வி, வாழ்க்கை தரத்தில் மேல்தட்டில் உள்ளவர்கள். சி கிரேடு என்பது நடுத்தர வர்க்கம். இந்த நடுத்தர வர்க்கத்தில் முதல் ரகம், இரண்டாம் ரகம், மூன்றாம் ரகம் என மூன்று பிரிவுகள் உள்ளனர். இதில் முதல் தர நடுத்தர பிரிவினர் பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும், வாழ்க்கை தரத்திலும் கிட்டத்தட்ட பி கிரேடு மக்களை எட்டிப்பிடிக்கும் நிலையில் இருப்பார்கள்.

இரண்டாம் ரக, மூன்றாம் ரக நடுத்தர மக்களி்ன் வாழ்க்கை போராட்டம் தான் மிக, மிக கடுமையானது. தரமான வாழ்க்கை வாழவும் முடியாமல், சற்று அடித்தட்டு வாழ்க்கைக்குள் நுழைய முடியாமலும் பரிதவிக்கும் மக்கள் இவர்கள் தான். இவர்களின் எண்ணிக்கை தான் இந்தியாவில் மிக, மிக அதிகம். தமிழகத்திலும் இவர்கள் எண்ணிக்கை தான் மிக, மிக அதிகம். இருப்பினும் இவர்கள் பெரும்பாலும் ஒட்டளிக்கும் கடமையில் இருந்து பின்வாங்குவதில்லை.

இவர்களுக்கு நாட்டு நடப்பு பற்றிய புரிதல் இருக்கும். அரசியல் தலைமை பற்றிய புரிதலும் இருக்கும். இருப்பினும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். தங்களது தலைவர் யார் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். இவர்களை இவர்கள் சார்ந்த கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு ஓட்டளிக்க வைப்பது சிரமம். ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் ஒட்டளித்து விடுவார்கள்.

நான்காம் ரகம் அடித்தட்டு மக்கள். இவர்களும் எண்ணிக்கையில் பெரிய அளவில் இருப்பார்கள். இவர்களை அத்தனை கட்சிகளும் தங்களது தேர்தல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளும். தவிர இவர்களும் அரசியல் நிலவரம் பற்றி அறிந்திருப்பார்கள். முழு அளவில் ஓட்டளிப்பார்கள். இதனால் அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கத்தில் இரண்டாம், மூன்றாம் ரக மக்களின் ஓட்டுகள் பெருமளவில் பதிவாகி விடும்.

ஏ கிரேடு, பி கிரேடு, நடுத்தர வர்க்கத்தின் முதல் பிரிவினர் நாட்டு நடப்புகள் பற்றி மிக துல்லியமாக அறிந்து வைத்திருப்பார்கள். அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் பற்றி முழு விவரங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களுக்கு சரியான தலைவர் யார்? சரியில்லாத தலைவர் யார்? என்ற விவரங்கள் எல்லாம் அத்துப்படியாக தெரியும்.

இதனால் அரசியல் தலைவர்கள் தவறு செய்தால் கடுமையாக கோபப்படுவார்கள். தங்கள் கோபத்தை சரியான தலைவருக்கு ஓட்டளிப்பதின் மூலம் பாதிப்பேர் வெளிப்படுத்துவார்கள். மீதிப்பேர் ஓட்டுச்சாவடிக்கு வராமல் வெளிப்படுத்துவார்கள். அதாவது ஓட்டுப்போடாமல் வெளிப்படுத்துவார்கள். இது தான் சிக்கலுக்கு காரணம்.

இவர்கள் நாட்டு நடப்புகள், தலைவர்களின் செயல்பாடுகளை பற்றி தெளிவாக தெரிந்தும் ஓட்டுப்போடாமல் இருப்பதே ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய காரணம். இதனால் தான் சென்னை போன்ற பெரு நகரங்கள், மாநகராட்சிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைகிறது. இப்படி ஒட்டுப்பதிவு சதவீதம் குறைவதால், அது குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு சாதகமாக முடிந்து விடுகிறது. அதாவது பலரும் விரும்பும் வகையிலான நல்ல தலைமையை உள்ளடக்கிய கட்சி கூட ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதற்கு இப்படி ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவதும் மிக முக்கிய காரணம்.

எனவே தான் தேர்தல் ஆணையம் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 100 சதவீதம் பேரும் ஓட்டளிக்க தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருக்கிறது. அரசியல்வாதிகளில் பலரும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வேண்டாம் எனவே நினைப்பார்கள்.

காரணம் ஓட்டுப்பதிவு சதவீதம் கூட, கூட தேர்தல் முடிவுகளும் மாறிக்கொண்டேயிருக்கும். இதனால் பல அரசியல் தலைவர்களின், கட்சிகளின் களநிலவரம் முற்றிலும் மாறிப்போகும். எனவே தான் பல அரசியல் தலைவர்கள் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை விரும்புவதில்லை.

ஆனால் நானும் என்போன்ற நாட்டின் மீதான அக்கரை உள்ள தலைவர்களும் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள் கட்டாயம் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு தேவை என்பது தான். நாட்டு நடப்பு, அரசியல் நடப்பு, அரசியல் நிலவரம் பற்றி அறிந்தவர்கள் முழுமையாக ஓட்டளித்தால் தான் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

நாட்டிற்கு எந்த மாதிரி தலைமை தேவை என நீங்கள் முடிவு செய்கிறீர்களோ. யாரை முழுமையாக நம்புகிறீர்களோ. அவர்களை பற்றி தீர்க்கமாக ஒரு முடிவு செய்து, கட்டாயம் அவர்களுக்கு ஒட்டுப்போடுங்கள். இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். நல்ல ஜனநாயகம் மூலம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடு உறுதியான தெளிவான வளர்ச்சி பெறும். அதன் மூலம் உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

எனவே தேர்தல் நாளன்று எந்த வேலையிருந்தாலும், ஒதுக்கி வைத்து விட்டு கட்டாயம் ஓட்டளிக்க முன்வாருங்கள். 100 சதவீதம் என்பது சாத்தியமில்லை. ஆனால் 95 சதவீத ஓட்டுப்பதிவு நிச்சயம் சாத்தியம். அந்த அளவாவது ஓட்டுகள் பதிவாக வேண்டும் என்பதே என்னை போன்ற தேசபக்தர்களின் உறுதியான வேண்டுகோள். தயவு செய்து பொதுமக்கள் ஓட்டளிக்கும் தங்கள் ஜனநாயக கடமையினை தவறாமல் செய்யுங்கள். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story