முல்லை பெரியாறு அணையை மீட்க ஒரு லட்சம் பேரை திரட்டுவோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

முல்லை பெரியாறு அணையை மீட்க  ஒரு லட்சம் பேரை திரட்டுவோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசை கண்டித்து தேனியில் பா.ஜ., சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

முல்லை பெரியாறு அணையினை மீட்க ஒரு லட்சம் பேரை திரட்டி அணைக்கு செல்வோம் என தேனியில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

தேனியில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அக்கட்சித்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முல்லை பெரியாறு அணை தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டது. அந்த அணை முழுக்க தமிழர்களுக்கே சொந்தம். அணை என்பது நமது முழு உரிமை. பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் தனது சொந்த பணத்தை செலவழித்து தமிழர்களை வேலைக்கு வைத்து அணை கட்டினார்.

அணையில் நீர் மட்டம் 140 அடியாக இருந்தால் தமிழத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறும். 136 அடியாக குறைத்தால் தமிழகத்தில் 71 ஆயிரம் ஏக்கர் நிலமே பாசன வசதி பெறும். சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்காமல் கேரள அரசு வரம்பு மீறி செயல்படுகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமானால் தேனி கலெக்டர், தமிழக அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும். ஏன் கேரள கலெக்டர், கேரள அமைச்சர்களை வைத்து அணையை திறந்தீர்கள். இது மிகப்பெரிய வரலாற்று பிழையாக மாறிவிட்டது. தற்போது பேபி அணையினை பலப்படுத்த இடையூறாக உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டதாக தமிழக முதல்வர் கூறுகிறார். கேரளாவோ அதனை மழுப்புகிறது. கேரள கம்யூனிஸ்ட்களை கண்டு தமிழக முதல்வர் பயப்படுகிறார்.

அடுத்த பாரதத்தின் துணை பிரதமராக தன்னை நிலை நிறுத்த கம்யூனிஸ்ட்களின் ஆதரவு தனக்கு தேவை என்ற கனவில் மிதக்கும் அவர், கம்யூனிஸ்ட்களின் தயவை பெற தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார். முல்லை பெரியாறு அணையில் 2014ம் ஆண்டு, 2015ம் ஆண்டு, 2018ம் ஆண்டுகளில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., ஆட்சி மாறி தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அணையில் தண்ணீர் தேக்க முடியாமல் திறக்கப்பட்டு விட்டது. ஆக ஆட்சி மாறினால் காட்சி மாறும்.

இதே நிலை நீடித்தால், முல்லை பெரியாறு அணையினை மீட்க ஒரு லட்சம் பேர் எனது தலைமையில் அணைக்கு செல்வோம். நிச்சயம் இந்த போராட்டம் இத்துடன் நின்று விடாது. கேரளாவின் அத்துமீறல் தொடர்ந்தால் பா.ஜ., தனது மக்களை திரட்டிச் சென்று அணையை கைப்பற்றி அதன் உரிமைகள் முழுக்க எங்களுடையது என்பதை நிரூபிப்போம்.வைகோ முல்லை பெரியாறு அணையில் வேஷம் போடுகிறார். அவர் இதில் தமிழர்களின் நியாயம் என்ன என்பதை உணர்ந்து நமது உரிமைகளை மீட்க எங்களுடன் கை கோர்க்க வேண்டும். மதுரை எம்.பி., வெங்கடேசன் பாவம் என்ன செய்வார். சீனாவுடன் இந்தியா போரில் ஈடுபட்ட போதே, சீனாவுக்கு ஆதரவாக நின்றவர்கள் தானே இந்த கம்யூனிஸ்ட்டுகள். தற்போது வெங்கடேசன் கேரளாவிற்கு ஆதரவாகத்தானே இருப்பார். அது தானே கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை.

மக்கள் பிரச்னைக்காக போராடுங்கள். ஊழலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள் என மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு லட்சம் பேர் முல்லை பெரியாறு அணைக்கு செல்ல தயாராகுங்கள் என்றார் அண்ணாமலை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் விவசாயிகள், பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story