தேனி அல்லிநகரில் டாஸ்மாக் கடை திறக்க இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு

தேனி அல்லிநகரில் டாஸ்மாக் கடை திறக்க  இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு
X

தேனி கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் வினோதினியிடம், இந்து எழுச்சி முன்னணியினர் மனு கொடுத்தனர்.

தேனி- அல்லிநகரம் திட்ட சாலையில் அமைய இருக்கும் அரசு மதுபான பாரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்து எழுச்சி முன்னணி தேனி நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் ஜீ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் வினோதினியிடம் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சி 31 வது வார்டு திட்ட சாலை ரோடு சேகர் இரும்பு கடை அருகில் அரசு மதுபான பார் ஒன்று ஆரம்பிக்க வேலை நடந்து வருவதாக அறிகிறோம். கடை ஆரம்பிக்கும் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளும் முக்கிய மருத்துவ ஸ்கேன் சென்டரும் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் இந்த பகுதி வழியாக சென்று வருகின்றனர். ரேஷன் கடை மற்றும் பிற மத வழிபாட்டு தளங்களும் உள்ளது.

மேலும் இந்த டாஸ்மாக் கடையினை ஆரம்பிக்கும் இடத்திற்கும் தேனியில் பிரபலமான ஸ்ரீ சடையால் முனிஸ்வரர் கோயிலுக்கும் 50 மீட்டர் இடைவெளி தான் உள்ளது. இக்கோயிலானது தென் தமிழ்நாட்டில் பிரபலமான கோயிலாக உள்ளது. தினசரி பக்தர்கள் கூட்டம் குறிப்பாக பெண் பக்தைகள் நேர்த்திக் கடனுக்காக வந்து செல்கிறார்கள். டாஸ்மாக் கடை இங்கு திறந்தால் மதுபான பிரியர்கள் அதிக நடமாட்டம் இருக்கும். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வந்து விடுமோ..? என்ற அச்சம் இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

எனவே கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு, இப்பகுதியில் அமையவருக்கும் மதுபான கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இவர்களுடன் மாவட்ட செயலாளர் ராமமூர்த்திஜீ, தேனி நகர பொதுச்செயலாளர் சிவராமன்ஜீ, நகர துணைத் தலைவர்கள் நாகராஜ்ஜீ, சிவா ஜீ, நகரச் செயலாளர்கள் பிரேம் ஜீ, தினேஷ் ஜீ, நகர துணை செயலாளர் ராமகிருஷ்ணன்ஜீ, அரண்மனை ஜீவாஜீ, அழகுபாண்டி ஜீ, நகர செயற்குழு உறுப்பினர் வினோத் ஜீ, ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil