மகன்கள் மது குடிப்பதற்கு பிச்சை எடுக்கும் மூதாட்டிகள்

மகன்கள் மது குடிப்பதற்கு பிச்சை எடுக்கும் மூதாட்டிகள்
X

காட்சி படம் 

பல குடிமகன்கள் தாங்கள் மது அருந்த தங்களது வயதான தாய், தந்தையை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தி அனுப்பி வருகின்றனர்.

பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்காமல் அவர்களை முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆசிரமங்களிலும் கொண்டு போய் விடுவதெல்லாம் பழைய காலம். இது குறித்து சமூக வலைதளங்கள் உட்பட அத்தனை ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது புதிய தலைவலி தலைதுாக்கி உள்ளது. அதாவது மதுவிற்கு அடிமையான குடிமகன்கள் தனது வீட்டில் உள்ள வயதான தாய், தந்தையை பிச்சை எடுக்க அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக ஆண்களை விட பெண்களிடமே சமூகம் இரக்கப்படுவதால், வயதான தாயை பிச்சை எடுக்க அனுப்பி வருகின்றனர்.

இவர்கள் அதிக கூட்டம் கூடும் ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் முன்பு நின்று கொண்டு பரிதாபமாக ஐயா, அப்பா என கெஞ்சி பிச்சை எடுக்கின்றனர். இப்படி இவர்களுக்கு தினமும் பல நுாறு ரூபாய்கள் பணம் சேருகிறது. மாலையில் அவர்கள் பெற்ற பிள்ளைகளே இந்த மூதாட்டிகளிடம் பணத்தை பறித்து அந்த பணத்தில் மது அருந்துகின்றனர்.

இவர்கள் பிச்சை எடுக்கும் பணத்தை சேமித்தாலே இவர்களின் பல நாள் வாழ்விற்கு அது உதவும். தேனி மாவட்டத்தில் போலீசார் பிச்சைக்காரர்களை பிடித்த போலீசார் அவர்களை காப்பகங்களில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் காப்பகங்களிலும் சேர மறுத்து மீண்டும் தன் வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இதன் காரணம் பற்றி விசாரித்த போது தான் போலீசாருக்கே உண்மை புரிய வந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இந்த மூதாட்டிகள் தங்கள் பிள்ளைகள் தங்களை கொடுமைப்படுத்துவது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். புகார் தந்தால் பிள்ளைகளை போலீசார் தண்டித்து விடுவார்கள் என்ற முழு விவரமும் மூதாட்டிகளுக்கு தெரிந்துள்ளது. இதனால் புகார் தருவதில்லை. தாங்களே விரும்பி பிச்சை எடுப்பதாக எங்களிடம் கூறுகின்றனர். இதனால் உண்மை தெரிந்தும் நாங்கள் செய்வதறியாமல் திகைத்து வருகிறோம் என்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி