திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள அரசின் சதித்திட்டம், மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட தகவல், ஜனவரி மாதமே தமிழக அரசுக்கு தெரியவந்த போதிலும், அதை திட்டமிட்டே மூடி மறைத்திருக்கிறது தமிழக நீர்வளத்துறை .
தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், ஆகியோர் அத்தனை நேர்மையாக இருந்தும், இந்த தகவல் எப்படி மூடி மறைக்கப்பட்டது என்று நமக்கு தெரியவில்லை.
கேரள மாநில எல்லையில் உள்ள தமிழக அரசுக்கு பாத்தியப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, 999 ஆண்டு கால செட்டில்மெண்ட் அடிப்படையில், தமிழக நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த அணை வாயிலாக, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அணை பலவீனமாக இருப்பதாக,கடந்த 1979ம் ஆண்டிலிருந்தே கேரள மாநில அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வந்தாலும். இதுதொடர்பான வழக்கில், அணையின் உறுதி தன்மையை, உச்ச நீதிமன்றம் 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்துள்ளது.
கூடுதலாக அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி விட்டு, அணையின் முழு கொள்ளளவான 152 அடி நீரை தேக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில், 7.66 டி.எம்.சி., நீர் மட்டுமே தற்போது தேக்கப்படுகிறது.
1979ம் ஆண்டுக்கு பிறகு அணையில் முழு கொள்ளளவு நீரை தேக்காததால்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவிற்கு பாசன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களாக மாறி உள்ளது.
அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, கேரள மாநில வனத்துறை தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் நெருக்கடி கூடுகிறதே தவிர குறைந்த பாடில்லை.
இந்நிலையில், அணையை இடித்து விட்டு, தமிழர்கள் பெருவாரியாக வாழும் மஞ்சமலை எஸ்டேட் அருகே புதிய அணை கட்ட, கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு, அணை கட்டுமானம் தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, கடந்த ஜனவரி மாதம் கேரள நீர்வளத்துறை அனுப்பியுள்ளது.
இதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் துறை, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்கு, கடந்த 4 ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து, 11 பேர் கொண்ட நிபுணர் குழுவினர், வரும் 28ம் தேதி,புதிய அணை கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இது முழுக்க முழுக்க சர்வாதிகார நடவடிக்கையாகும். அரசின் மெத்தனப் போக்கிற்கு ஒரு அளவே இல்லையா எனும் கேள்வி ஐந்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
கேரள மாநில அரசுக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்பது இன்று நேற்றைக்கான திட்டமல்ல,அது 40 ஆண்டு கால திட்டம். இறங்கு நீர் உரிமை பெற்ற தமிழகத்திடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், மனம் போன போக்கில் செயல்படும் கேரள மாநில அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது.
இதோ உடையப்போகிறது அதை உடையப்போகிறது என்று 40 ஆண்டு காலங்களாக கேரள மாநில அரசு தம்பட்டம் அடித்து வந்தாலும், இன்று வரை அணையில் ஒரு சிறு கீறல் கூட இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தேசிய பசுமை தீர்ப்பாயம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். இல்லை அப்படித்தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்று கேரளா களத்தில் இறங்கினால், தக்க பதிலடியை கொடுப்போம்.
எங்களுடைய வாழும் உரிமையின் மீது கை வைக்க நினைப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கப் போகும் பாடம் காலத்திற்கும் மறக்க முடியாததாக இருக்கும். தமிழக அரசு இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுவோம். எதற்காக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என்கிற கேள்வியும் எங்களுக்கு எழுகிறது. 2006, 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏன் இன்னமும் அமல்படுத்த முன்வரவில்லை.
இந்த முல்லைப் பெரியாறு தண்ணீரை நம்பி 4 லட்சம் நேரடி விவசாயிகளும், 6 லட்சம் மறைமுக விவசாயிகளும், ஒரு கோடி மக்கள் குடிநீருக்காகவும், லட்சக்கணக்கான கால்நடைகள் தண்ணீர் அருந்தவும் காத்திருக்கின்றன.
கேரள மாநில அரசு செய்யும் செயல், அணைக்கு எதிரானது அல்ல, ஒரு கோடி மக்களுக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரும் திங்கட்கிழமை காலை குமுளி எல்லையில் நாங்கள் நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu